Wednesday, October 21, 2009

பேராண்மை

வேலைக்காக சென்னைக்கு வந்தபின்பு எனது தீபாவளி கொண்டாட்டங்கள் பொலிவிழந்து போய்விட்டிருந்தன. ரயிலில் டிக்கெட் கிடைப்பது அரசியலில் நல்ல திட்டங்கள் போடப்பட்டு அவை நன்றாகவே செயல்படுத்தப்படுவதற்கு ஒப்பான அரிதான விஷயமாகிவிட்டபடியால் விழாக்களை தவிர்க்க ஆரம்பித்துவிட்டேன். நெரிசலுக்கு பயந்து தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளை புறக்கணிக்க ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.

தீபாவளிக்கு படம்பார்க்க செல்வது, இளமைக்காலங்களில் மிக மிக கொண்டாட்டத்துக்கு உரிய விஷயமாக இருந்தது. திரைப்படங்களில் ஆண் நடிகர்களை பார்ப்பதை தவிர்த்து நடிகைகளை பார்க்க தொடங்கிய காலம் முதல் பட்டாசு வெடிப்பதை நாங்கள் கைவிட்டிருந்தோம். கள்ளன் போலீஸ் விளையாடும் போது கள்ளனாகவே விளையாட ஆசைப்படும் மனது, தீபாவளி துப்பாக்கி கிடைத்தவுடன், போலீஸ் ஆக மட்டுமே விளையாட ஆசைப்படுவதை ஆச்சர்யத்துடன் கவனிப்பதுண்டு. முந்தைய காலங்களில் ஊர் தியேட்டரில் கூட்டம் நிரம்பிவழியும். முந்தைய ஷோ முடியும் தருவாயில் அடுத்த ஷோவிற்கான கூட்டத்தை ஒரு பெரிய அறையில் அடைத்து, ஒரு பெரிய கயிறு கட்டி தடுப்பு அமைத்திருப்பார்கள். படம் முடிய அரைமணி நேரம் இருந்தாலும் கூட்டம் முன்டியடித்துக்கொண்டே இருக்கும். அதே வேளையில் அதற்கு அடுத்த ஷோவிற்கான டிக்கெட்டுக்காக கவுண்டர் திறந்து விடப்பட்டிருக்கும், அங்கும் அதே கூட்டம் தான். அனால் இந்தமுறை படம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடம் முன்னர் தான் தியேட்டருக்கு சென்றபோதும் மிக எளிதாக பேராண்மை படத்திற்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. முன்பு அடுத்த ஷோவிற்கு கூட்டத்தை அடுத்துவைக்க பயன்பட்ட இடத்தில் பர்னிச்சர் பொருட்களை போட்டு நிரப்பி வைத்திருந்தார்கள்.

என்னிக்கையட்ட்ற கேபிள் சேனல்கள் வந்துவிட்ட பின்பு கிராமபுரங்களில் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதை வெகுவாக குறைத்துவிட்டது தெளிவாக தெரிந்தது. ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு தெரிந்த வியாபார தந்திரங்களை ஜனநாதன் போன்ற இயக்குனர்களும் கற்றுக்கொள்வது அவசியமானதே ஆகும். அதாவது, மிக பிரம்மாண்டமாக விளம்பரம் செய்வது,
அதிக திரை அரங்குகளில் ரிலீஸ் செய்வது.

பேராண்மை படத்தின் ஆரம்பக்கட்ட காட்சிகளை பார்த்தபோது, இதுவும் வழக்கமான சினிமாவோ என்று கொஞ்சம் பயந்து தான் போனோம், ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் எங்கள் பயத்தை வெகுவாக குறைத்துவிட்டன.
ஜனநாதனின் அனைத்து படங்களிலுமே திரைக்கதையில் ஒரு கச்சிதம்
இருந்ததில்லை, அதேபோல்தான் இந்த படமும் என்றாலும், எடுக்கப்பட்ட விதம், கடினமான கதைக்களம், நேர்த்தியான ஒளிஎப்பதிவு, அங்கங்கே பிசிறு தட்டினாலும் தெளிவான இசை என முந்தைய படங்களின் உழைப்பு, இதிலும் குறைவில்லாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆதிதிராவிடர் சமொகத்திலிருந்து, கல்வியின் மூலம் உயர்ந்து NCC அதிகாரியாக பனி செய்யும் ஜெயம் ரவியும், NCC பயிற்சிபெற அவரிடம் வரும் ஐந்து கல்லூரி மாணவிகளும் பல்வேறு மோதல்களுக்கு பின்பு நாட்டுப்பற்று என்ற ஒற்றை வார்த்தையில் ஓன்று சேர்ந்து, ராக்கெட் தளத்தை தகர்ப்பதற்காக வரும் வெளிநாட்டு சக்திகளை முறியடிப்பதே படத்தின் கதை.

இன்றைய இளைஞர்களின் உலகத்தில் புத்திசாலித்தனமும், கேளிக்கைகளும், செல்பேசிகளும், ஆபாரமான அறிவாற்றலும் குவிந்து கிடந்தாலும், அரசியல் போருலாதாரத்திர்க்கோ, அரசியலுக்கோ, சாதி பற்றிய பார்வைக்கோ இடமில்லாத குறையை ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டியபடியே
ஆரம்பக்கட்ட காட்சிகள் நகருகின்றன.

ஈ படத்தில் ஜீவா காட்டிய ஒரிஜினாலிட்டியை, இந்த படத்தில் இயக்குனர் ஜெயம் ரவியிடம் கொண்டுவரவில்லை எனினும், சிறப்பாக கல்வி கற்று சில உயரங்களை அடைந்தாலும், சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடையும் அவமானங்களை, சிறப்பாக திரையில் கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியது.

இயற்கை விவசாயம், அரசியல் பொருளாதாரம், மண்ணை பாழாக்கும் நச்சு
செடிகளை அழித்தல் என கதையில் பல வாசல்கள் இருந்தாலும், சில மணித்துளிகளுக்கு பின்னால் படம் ஒரே கதையில் சீராக பயணிக்கிறது.

அடர்ந்த காட்டில் பயிற்சி அளிப்பதற்காக ஐந்து மாணவிகளை கூட்டிச்செல்லும் காட்சியில், காட்டை பற்றிய ரவியின் விவரணைகளும், காட்டின் பிரம்மாண்டமும், சிறு பறவைகளின் ஒலியும், சிற்றோடைகளும், ஏரிகளும் ரம்மியமான இசையுடன் அழகாய் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ஐந்து மாணவிகளையும் ஜெயம் ரவி கற்பழித்து கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்படும் மேலதிகாரியான பொன்வண்ணன், ரவியை தேடி அவரது குடியிருப்புக்குள் நுழையும் போது, காவல்துறை அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் நடைபெறும் சண்டைக்காட்சியை சதீஷ் குமாரின்
கேமெரா உக்கிரமாக பதிவு செய்துள்ளது.

பொன்வனணனிடம் வெளிநாட்டு கூலிப்படையினர் காட்டிற்குள் நுழைந்து விட்டதை தெரிவிப்பதற்காக சரண்யா மட்டும் தனியே காட்டை விட்டு திரும்பும் காட்சிகளிலும், வசுந்தரா யானையிடம் மாட்டிக்கொள்ளும் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்கள்.

காட்டை பற்றிய பல்வேறு ஆங்கிலப்படங்களை பார்த்திருப்பவர்களுக்கு, இந்த படம் பெரிய ஆச்சர்யங்கள் எதையும் தருவதில்லை. ரவி அன் கோ பயணம் செய்யும் காட்டுப்பாதையில், ஒரு யானையை tதவிர எந்த காட்டு விலங்கும தென்படாதது வினோதமாக இருக்கிறது. ராக்கெட் ஏவுதளத்தை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து எளிதாக தாக்கிவிடலாம் எனும்போது, அந்த இடத்திற்கு பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் கூட நிருத்தப்படாததற்கு காரணம் தெரியவில்லை. 16 பேர் கொண்ட கூலிப்படையினரை வெறும் ஐந்து பேர் சமாளிக்கவேண்டிய நிலையில், அவர்கள் கன்னி வெடிகளை புதைப்பதும், கூலிப்படையினரின் உபகரணங்களை தூக்குவதும் என சில காட்சிகள் அமெச்சூர்தனமாக உள்ளன. படத்தில் சாகசங்கள் கொஞ்சம் குறைவே.

உலகத்தில் எந்த இடத்திலும் கன்னி வெடிகள் புதைக்க படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நம் தாய் நாட்டை காப்பாற்ற கன்னி வெடிகளை புதைப்பதில் தவறில்லை என்பது போன்ற ரவியின் வசனங்கள் பளீச். இருந்தாலும், இந்தியா வல்லரசாக விரும்பும் இயக்குனர்கள் இன்னும்
ஆழமாக சிந்தித்து காட்சிகளை மக்களுக்கு அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கிடைக்கிற கேப்பில் ஊரை ஏமாற்றி விருதுகளை வாங்கிக்கொள்ளும் அதிகாரியாக பொன்வண்ணன் சிறப்பாக செய்துள்ளார். முகத்தில் அறையும் நிஜம் காட்சியகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்திற்ற்கு தேவையற்றவை இரண்டு; ஓன்று, வடிவேல், மற்றொன்று பாடல்கள்; இரண்டுமே சரியில்லை.

ஒரு படம் வணிகத்துக்காக மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறதா, இல்லை சோதனை முயற்சிகளுடன் நேர்மையாக தரம் மிகுந்ததாக எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிப்ப்ப்தற்கு கொஞ்சம் சிரத்தை எடுத்தால் பார்வையாளனுக்கு கடினமானது அல்ல. இந்த படம் வியாபாரத்திற்காக மட்டுமே எடுக்கப்படவில்லை என்பது தெளிவே.

தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லும் படைப்பாளிகளில் ஜனநாதனும் ஒருவர் என்பது மற்றொருமுறை தெளிவாக நிரூபிக்கப்பட்டிருப்பது மறுப்பதற்கில்லை.

தேவையற்ற பாடல்கள், தேவையற்ற ஆரம்பக்கட்ட சில காட்சிகள், வடிவேலு, ஆடை வடிவமைப்பில் தேவையில்லாத கவர்ச்சி, படத்திற்கு கொஞ்சமும் சம்மந்தமற்ற இரட்டை அர்த்த வசனங்கள் (கொஞ்சம்தான்), என சில காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டிருந்தால் இன்னும் வெகுவாக இந்த படத்தை நாம் ரசித்திருக்க முடியும். இருந்தாலும், வித்தியாசமான கதைக்களம், திறமையான இயக்கம், வோளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் என பல உழைப்புகளுக்காக இந்த படத்தை ஒருமுறையேனும் பார்க்கவேண்டியது அவசியமானது.