Thursday, March 18, 2010

ஞாநியின் பதில்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பாராட்டி ஞாநி குமுதத்தில் எழுதிய ஓ பக்கங்களை பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை "ஞாநிக்கு கடிதம்" என்ற பெயரில் பதிவிட்டிருந்தேன்.   மேலும் ஞாநிக்கு அதை மெயில் மூலம் தெரியப்படுத்தியிருந்தேன்.  அவர் இரு தினங்களில் எனக்கு பதில் அனுப்பினார்.  அப்பதிலை இங்கு பதிவிடுகிறேன்.

அன்புள்ள பிரபாகரன்

உங்கள் கருத்துகள் சுவாரஸ்யமாக இருந்தன. கோலம் அமைப்பின் நோக்கம், வேலை விண்னைத்தாண்டி வருவாயா போன்ற படங்களை எடுப்பது அல்ல என்பதில் உங்களைப் போலவே நானும் தெளிவாக இருக்கிறேன். கோலம் வணிக சினிமா சூழலுக்கு வெளியே இருக்கும் இயங்கும் திட்டம்.

தமிழ் வணிக சினிமாவின் சூழலில் , விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் அவற்றின் குறைகளை மீறி ஆதரிக்கப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. அ ப்போதுதான் முழுக்குப்பைகளாக தயாரித்து வெளியிடப்பட்டு வரும் பெரும்பான்மை படங்களிலிருந்து அடுத்த அடி நோக்கி நகர முடியும். ஓ பக்கங்களை வாசிக்கும் வெகுஜன ரசனை உள்ள வாசகர்/பார்வையாளர்களை இன்னொரு திசை நோக்கி அடி எடுத்து வைக்கச் செய்யும் முயற்சியே என் எழுத்துகள். நம் ரசனைகள் வேறுபடலாம். நோக்கங்களிலும் லட்சியங்களிலும் வேறுபாடு இல்லை.


அன்புடன்
 
ஞாநி

Monday, March 15, 2010

கேணி-நாஞ்சில் நாடன் சந்திப்பு

  கேணி நடத்தும் பத்தாவது சந்திப்பு இது.  இதில்
கலந்துகொண்ட ஆளுமைகளை  ஒப்பீட்டளவில்  நோக்கும்போது, கேணி தனது வாசகர்களுக்கு அளிக்க விரும்பும் வீச்சை புரிந்துகொள்ள முடியும்.  இலக்கிய வட்டாரத்தில் சுந்தர ராமசாமி அணி நகுலன் அணி என்ற இரண்டு அணிகளாக பல இலக்கியவாதிகள் சிலரால் பிரிக்கப்படுவதை கவனித்திருக்கிறேன்; ஒருக்கால் அது உண்மையெனின், சு.ரா. அணி மீதே எனக்கு ஒரு மயக்கம் உள்ளது.  நாஞ்சில் நாடன் கதையுலகம் மற்றும் நாவல் உலகம் பற்றிய சு.ராவின் கட்டுரையை சமீபத்தில் அவரது ஆளுமைகள் மதிப்பீடுகள் என்ற நூலில் படிக்க நேர்ந்தது.   நாஞ்சில் நாடனை பற்றிய சிறந்த பதிவுகளில் அதுவும் ஒன்றாகவே இருக்கக்கூடும் என்றே நான் கருதுகிறேன்.  நாஞ்சிலை முழுதும் படிக்காமல் முடிவுக்கு வருவது தவறென்றே அவரது "சூடிய பூ சூடற்க" தொகுப்பின் முதல் மூன்று கதைகளை படித்தபின்பு உணர்கிறேன்.


            தமிழின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரை சந்திக்கப்போகிறோம் என்கிற ஆர்வம் அறிவிக்கப்பட்ட நாட்களிலிருந்தே இருந்தாலும், அன்று கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது.  அரை மணிநேரம் முன்னதாகவே சென்றுவிட்டபடியால் இரண்டாவது வரிசையிலே இடம் கிடைத்தது.  சந்திப்பு சரியாக 3:40 க்கு தொடங்கியது.

      நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப்பேசிய ஞாநி கேணியின் வருங்காலத்திட்டங்கள் பற்றியும் நாஞ்சில் நாடனுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.  தனது படைப்புகளுக்கு வித்தியாசமான பெயர்கள் சூட்டுவதில் ஜெயகாந்தனும் நாஞ்சில் நாடனும் தன்னை கவர்ந்தவர்கள்.  நாஞ்சில் நாடனின் மாமிசப்படைப்பு படித்தது முதற்கொண்டே நாஞ்சில் நாடனை நினைக்கும் போதெல்லாம் அவரது படைப்பின் தலைப்புகளும் நினைவுக்கு வருவதை குறிப்பிட்டார்.

ஞாநியின் உரையைத்தொடர்ந்து நாஞ்சில் நாடன் தனது பேச்சை துவக்கினார்.  என் வாழ்நாளில் மொழியை இவ்வளவு லாவகமாக கையாளக்கூடிய ஒருவரை அல்லது பேச்சை கேட்டதில்லை.  நாஞ்சிலுக்கு எந்த தலைப்பும் கொடுக்கப்படவில்லை; அவராகவே மொழி பற்றிய தனது தரவுகளை "சுதந்திரமாக"  பேசினார்.  அவரது பேச்சின் சாராம்சத்தின் சிறு  பகுதியை அளிக்கிறேன்.

ஒரு எழுத்தாளனுக்கு ஊர் சுற்றுதல் என்பது அவரது எழுத்திற்கான வேர் ஆகும்.
என்னை,  ஜெயமோகனை உருவாக்கியது இந்த ஊர் சுற்றல்தான்.  பல்வேறு மனிதர்களையும், சூழல்களையும், பிரதேசங்களையும் காணும்தோறும் மனது கற்பனைகளை விவரித்துக்கொண்டே செல்கிறது.  தன் சொந்த மண்ணையும் புதிதாக காணும் நிலத்தின் கூறுபாடுகளையும் ஒரு எழுத்தாளன் தன் மனதிற்குள் பின்னிக்கொண்டே செல்கிறான்.  புதிய வெளிகள் புகுத்தப்பட்டு ஒரு தேர்ந்த எழுத்தாளனால் இலக்கியம் செரிவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

தான் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக பாம்பேயில் வாழ்ந்ததை பற்றி கூறியபின் தன் மண் மீதான பிடிப்பு எவ்வாறு உருக்கொண்டது  என்பதை பகிர்ந்துகொண்டார்.  பம்பாயில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மகாபாரதத்தை முறையாக ஒரு குருவிடம் கற்றிருக்கிறார்.  இடையிடையே தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி, மற்றும் பல்வேறு சங்க இலக்கியங்களை தனது குருவிடமிருந்து கற்றிருக்கிறார்.

எப்போதோ எழுதிய தனது கதையை எதேச்சையாக ஒரு சிறுபத்திரிக்கைக்கு அனுப்ப அது பிரசுரமானது மட்டுமின்றி அவ்வாண்டின் சிறந்த கதையாகவும்
தேர்வுபெற்றிருக்கிறது.  அதிலிருந்து தொடங்கியது நாஞ்சிலின் இலக்கிய பங்களிப்பு.  ஆரம்பக்கட்டத்தில் தீவிர திராவிட இயக்க அபிதாபியாக இருந்த நாஞ்சில் நாடன், பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்ததன் பொருட்டு, பலவகையான மொழிகளின் கூறுபாடுகளை கூர்ந்து நோக்கி, தமிழ் மட்டுமல்ல அனைத்து மொழிகளுமே தனித்தனி சிறப்புகளை கொண்டவையே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.  காளிதாசன் விளையாடிய ஒரு மொழியையோ, காண்டேகர் பயன்படுத்திய ஒரு மொழியையோ, பஷீர் எழுதிய ஒரு மொழியையோ தான் எவ்வாறு வெறுப்பது; அம்மொழிகளை பேசுவோரிடம் எனக்கு கருத்து மோதல்கள் உண்டு, ஆனால் மொழியுடன் எந்த பகைமையும் இல்லை என்றே கூறினார்.

ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கென கொண்டிருக்கவேண்டிய மொழிக்கட்டமைப்பு, தொழில்நுட்பம் பற்றிய நாஞ்சிலின் அவதானிப்பு விரிவாக அவரால் விளக்கப்பட்டது.
தான் பயன்படுத்தும் மொழி பற்றிய பிரஞ்ஞையை விரிவான விளக்கங்களுடன்
வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.  பொதுத்தமிழில் அன்றாடம் பயன்படுத்தப்படும்
சுமார் 1200 வார்தைகளைத்தாண்டி எழுத்தாளன் கையாளவேண்டிய வார்த்தை பிரயோகங்களை தான் பயன்படுத்தும் மொழிகொண்டே விளக்கினார்.  வார்த்தைகள் மீதான அவரது காதலை மிக ஆழமாகவே ஒரு வாசனாக என்னால் உணரமுடிந்தது.  வையாபுரி பிள்ளை போன்றோரால் தொகுப்பட்ட ஒருலட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகளுக்கும் அதிகமான வார்த்தைகளுக்கு பொருள் கொண்ட  தமிழகராதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படாமலே நிராகரிக்கப்படுகிறது மற்றும் தான் அவைகளிலிருந்து பெற்றுக்கொண்டது என்ன என்பதுபற்றி வெகு விரிவாகவே பேசினார்.  பெருமாள் முருகன் முதலான பலரும் தொகுத்துள்ள அகராதிகள் பற்றியும் அவற்றிலுள்ள சொற்கள் எவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து தற்காலம் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது பற்றியும் அவர் கூறிய செய்திகள் ஆழமும் விரிவும் கொண்டவை. 

நாஞ்சில் நாடனின் விரிவான உரைக்குப்பின்பு வாசகர்களின் கேள்விநேரம் தொடங்கியது.  வழக்கம்போலவே மிகமிக பொதுப்படையான ஆழமற்ற கேள்விகளே கேட்கப்பட்டன.  சில வாசகர்களின் கேள்விகள் கண்டிப்பாக சிந்திக்கத்தூண்டின.  அதில் என்னைக்கவர்ந்தது, ஒரு ஆசிரியை கேட்ட கேள்விகளே.  இன்றைய தமிழாசிரியர்கள் பலரும் தமிழில் குறைவாகவே புலமை வாய்க்கப்பெற்றவர்களே.  இதை மாற்றுவதற்கு என்ன வழிகள்?  இதற்கான நாஞ்சிலின் பதிலும் மிகவும் சிறப்பாகவே இருந்தது.

ஞாநி ஒரு கேள்வி கேட்டார்; ஒரு தேர்ந்த படைப்பாளியுடைய எழுத்து வீரியமாக இருந்தாலும் அவருடைய மோசமாக இருக்கிறது, ஆனால் மிகமிக சாதாரண எழுத்தைக்கொண்ட ஒருவருடைய படைப்பு பொதுமொழியில் எழுதப்பட்டபோதும் சிறப்பான கருத்தை கொண்டிருக்கிருக்கிறது, எனில் கொண்டாடப்படுவது எது?   எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லாத கேள்வி இது.  தேர்ந்த எழுத்துடன் மிக மோசமான புனைவுகளை எழுதும் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படவேண்டிய அதே நேரத்தில் மிகமிக பொதுமொழியில் எழுதும் எழுத்தும் கொண்டாடப்படவேண்டும் என்று அவசியம் இல்லை.   வாசகனுக்கு புரியவேண்டும் என்று எழுத்தாளர் பொதுமொழியில் எழுதவேண்டிய அவசியம் இல்லை.

கூர்ந்துகவனிக்கும் பொருட்டு, பொதுமொழியை விரும்பும் வாசகர்களின் தேர்வு மிகவும் ஜனரங்கமான படைப்புகளாகவே இருக்கும்.   மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவன் ஒன்றாம் வகுப்பையே சுற்றிக்கொண்டிருந்தானனின் அது மாணவனின் தவறே தவிர  ஆசிரியரை குறைசொல்ல யாதொரு நியாயமும் இல்லை.   இருந்தாலும் என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரையில் பொதுத்தமிழில் எழுதப்பட்ட எந்தவொரு படைப்பும் என்னுள் எவ்வித சிலிர்ப்பையும் ஏற்ப்படுத்தியதில்லை (அசோகமித்திரனின் "தண்ணீர்" என்ற நாவலைத்தவிர). 

சு.ரா என்மீது செலுத்தும் அடங்காத ஆதிக்கமும் மயக்கமூட்டும்  அவரது மொழியால் உண்டாவதுதான்.  ஜே.ஜே. சில குறிப்புகள் தந்த சிலிர்ப்பை இதுவரை எந்த எழுத்தும் எனக்கு தந்ததில்லை.   கேணியில் கூடியிருந்த பல வாசகர்கள் கூறிய-பெரிய எழுத்தாளர்கள் எழுதும் படைப்புகள் புரியவில்லை- என்ற கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை.  அவர்களின் புரியாமைக்கு காரணமாக நான் நினைப்பது இலக்கியத்தின் மீது தீவிர ஆர்வம் இல்லை, வார்த்தைகளை கூர்ந்து கவனிப்பது இல்லை, அல்லது வாசிப்பில் குறைந்தபட்ச முயற்ச்சியில்லை.

கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் வங்காளதேசம், கென்யா போன்ற மூன்றாம்தர கிரிக்கெட் நாடுகளை விரும்புவதில்லை, உண்ணும் உணவில் அழுகிய காய்கறிகளை
அனுமதிப்பதில்லை, இன்னும் பலவற்றிலும் மூன்றாம்தரத்திற்கு மதிப்பே இல்லை;  ஆனால் இலக்கியத்திலும் சினிமாவிலும் மட்டும் சங்கர்களும், சுஜாதாக்களும் கொண்டாடப்படுகிறார்கள்.  பொதுப்புத்தி போற்றி புகழப்படுகிறது.  பாலு மகேந்திராக்களும்,  புதுமைபித்தன்களும் நிராகரிக்கப்படுகிறார்கள்.

நான் பழகிய எந்த பெண்ணும் இலக்கியத்தின்பால்  ஈர்க்கப்பட்டவள் அல்ல.  அதிலும் அழகான பெண்களுக்கு நான் அறிந்தமட்டும் இலக்கியம் எட்டிக்காய்.  ஆனால் இன்றைய கூட்டத்துக்கு ஒரு அழகான பெண் வந்தாள்.  நாஞ்சில் நாடனின் பேச்சை கூர்ந்து கவனித்தாள்.  அவரது ஒவ்வொரு கருத்துக்கும் தலையாட்டிக்கொண்டே இருந்தாள்.  எனக்கு அது நிறைவாய் இருந்தது.

இதுவரை கேணியின் ஆறு கூட்டங்களில்  கலந்துகொண்டிருந்தாலும், நான் இதுவரை ஒரு கேள்விகூட கேட்டதில்லை; இன்றும் அப்படித்தான்.  நாஞ்சில் நாடனுக்கு சு.ராவினுடனான அனுபவங்கள் பற்றி கேட்க ஆர்வமாக இருந்தது; ஆனால் கேட்கவில்லை.   தற்போது நடக்கவிருக்கும் உலகத்தமிழ் மாநாடு பற்றிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் நிதரிசனமானவை.   அதிகாரங்களின் அராஜகங்களை எழுத முற்பட்டால் கைகள் நிர்கதியாகவும், கண்களில் இரத்தமுமே மிஞ்சும்.  ஆனால் இதைப்பற்றிய தனது தீர்க்கமான பதிவுகளை எந்த எழுத்தாளருமே தற்காலத்தில் பதிவு செய்யவே இல்லை என்றே எண்ணுகிறேன். 

என்ன எழுதுகிறார் என்பதை என்பதை விட எப்படி எழுதுகிறார் (திரைப்படத்துக்கும்
இது பொருந்தும்) என்றே கவனிக்கும் எனக்கு, நாஞ்சில் நாடன் அவரது பேச்சில்
சொற்களின் வாசனையை வாசகனையும் நுகரவைத்தமை புதிய அனுபவத்தை தந்தது.  அவரது "சூடிய பூ சூடற்க" மற்றும் "காவலன் காவான் எனின்" ஆகிய இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.  வரும் வழியில் பதிவர் கிருஷ்ணபிரபு  நடந்து சென்றுகொண்டிருந்தார்.  வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள் பிரபு என்றேன்.  சிறிது தயங்கியவர், நான் நடந்தே வருகிறேனே என்று சொல்லிவிட்டார்.

வீடு வந்ததும்  என்னை முதலில் வாசிக்கத்தூண்டியது சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுப்பு புத்தகம்தான்.  இதுவரை என்னை அலைக்கழித்த சிறுகதைகள்
மகாமசானம், மாடன் மோட்சம், ரத்னாபாயின் ஆங்கிலம், எங்கள் டீச்சர் போன்ற வெகுசில கதைகளே.  இவை அனைத்துமே கதை சொல்லல் முறையில் தன் உச்சத்தை தொட்டவை.    இந்த வரிசையில் கண்டிப்பாக சேர்க்கப்படவேண்டியது நாஞ்சில் நாடனின் "யாம் உண்பேம்".  புதுமைப்பித்தனின் மகாமசானத்தின் உச்சங்களை இக்கதையும் நிகழ்த்துகிறது.  மொழியின்பால் தனக்குள்ள பிடிப்பை நாஞ்சில் நாடன் உறுதியாக நிறுவிய கதையாகவே இதை நான் பார்க்கிறேன்.

Saturday, March 6, 2010

ஞாநிக்கு கடிதம்

அன்புள்ள ஞாநிக்கு
இந்தவார குமுதத்தில் தங்களின் ஓ பக்கங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நீங்கள் வெகுவாக பாராட்டியிருந்ததை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.  அவரது முந்தய படங்களை நீங்கள் வெறுப்பதற்கு காரணமாக நீங்கள் காட்டும் வல்காரிட்டியை நானும் சிறிது உணர்ந்திருக்கிறேன் என்றாலும் கதை சொல்லல் முறையிலும் காட்சியகப்படுத்தியதிலும் காக்க காக்க, பச்சைக்கிளி, மின்னலே போன்ற படங்கள் விண்ணைதாண்டி வருவாயாவை விட உயர்ந்தவையே.

ஒருவேளை வக்கிரம் இல்லாத படமாக அது உங்கள் பார்வைக்கு தெரிந்திருக்கலாம்.  ஆனால் இதில் வேறுமுறையான வன்முறையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதை சுட்டிக்காட்டவே இந்த கடிதம்.

கதாநாயகனின் குணாதிசயங்களாக தீவிர சினிமா கனவோ அல்லது உண்மையான காதலோ சொல்லப்படவில்லை.   22 வயதில் தோன்றும் affection உம், அந்தவயதில் சினிமாவின் கவர்ச்சியில் ஈர்க்கப்படும் மனமும் கொண்ட ஒரு அழகான இளைஞன், அழகான பெண்ணின் மீது கொள்ளும் ஈர்ப்பை காதலுக்குரிய தீவிரமோ அல்லது உண்மையான சினிமாகவோ இல்லாமல் ஏனோதானோவென்று எடுக்கப்பட்ட படமாகவே நான் பார்க்கிறேன்.

அருமையான  location-கள், குளிர்ச்சியான ஒளிப்பதிவு, மனதை மயக்கும் இசை, editing-ல் சில சாதனைகள் தவிர ஒன்றுமே இல்லாத குழப்பமான சினிமாதான் இது.  இளம்வயதில் தான் தீவிரமாக இருக்கும் ஒரு விஷயத்தில் (காதலிலும் கூட) தோல்வியடைந்தால், அதை நினைத்து சோர்ந்துவிடத்தேவையில்லை, மாறாக, புதிய ஒன்றில் தீவிரமாக முயன்றால், வாழ்க்கையில் வெல்லலாம் என்ற ஒற்றைவரி கதையைதான்  Goutham இந்த படத்திலும் வாரணம் ஆயிரம் படத்திலும்  deal பண்ணியிருந்தார்.  ஆனால் இந்த விஷயம் வாரணம் ஆயிரத்தில் கொஞ்சம் தீவிரமாக பதிவு செய்யப்படது இருந்ததது; அது, இதில் தவறவிடப்பட்டுள்ளது.

கதாநாயகன் Mechanical Engineering படிப்பை பாதியிலே விடத்துனியும் போது, சினிமாவை பற்றிய அவன் கனவு என்ன?  அவன் எடுத்ததாக கடைசியில் த்ரிஷாவுக்கு காட்டப்படும் படமும் வழக்கமான தமிழ் சினிமாதான்.  எனவே தீவிர சினிமாவில் அவன் மோகம் இல்லை என்பது நிதர்சனம்.   ஒருவன் உதவி இயக்குனராக படும் கஷ்டங்களை மிக எளிதாக துளி கூட பதிவே செய்யாமல் கடந்து செல்கிறார் இயக்குனர்.  தற்போதைய தமிழ் சினிமாவின் எலும்புருக்கி நோய்களில் ஒருவர்
கே.எஸ். ரவிக்குமார்.   அவரை வைத்து அவரது படங்களையே பகடி செய்வதற்கு கிடைத்த இடங்கள் அனைத்தையுமே தவற விடுகிறார் இயக்குனர்.

காதல் காட்சிகள் எப்படி?  த்ரிஷாவின் முகபாவங்களும், ஒப்பனையும் கர்ண கொடூரமாக இருந்தது.  அப்பா ஒத்துக்கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தன் உண்மையான(?) காதலை விட்டுக்கொடுக்கிறார் த்ரிஷா; எனில்,  அப்பா-மகள் உறவையாவது கொஞ்சம் தெளிவாக காட்டியிருக்கவேன்டாமா?  அதிலும் அவள் அண்ணன் கதாபாத்திரம் ஆபாசத்தின் உச்சம்.

ஒரு தேர்ந்த காதல் படத்துக்கு முக்கிய தேவைகளுள் ஒன்று வசனம்.  இந்த படத்தின் ஆக கொடுமையே வசனம்தான்.  நீங்கள் காஞ்சிவரம் படத்தை ஜீவன் இல்லை என்று நிராகரித்திருந்தீர்கள்.  அதே விஷயம்தான் இந்த படத்தை எனக்கு நிராகரிக்க தூண்டியது.

அனைவரின் கதாபாத்திரங்களையும் ஒப்புநோக்க எனக்கு சுந்தர ராமசாமியின் ஒரு கருத்து ஞாபகத்துக்கு வருகிறது.  அகிலனின் சித்திரப்பாவையை விமரிசனம் செய்த
 சு.ரா. அந்த நாவலின் கதாநாயகனை "அவன் ஓவியன் அல்ல; drawing master" என்று விமரிசித்து இருப்பார்.  அதேபோல் இந்தப்பட கதாநாயகனும் உண்மையான சினிமா நோக்கமோ அல்லது உண்மையான காதலோ இல்லாத சிறிது சலனமுடைய தற்கால இளைஞன் மட்டுமே.

நான் தமிழின் அனைத்து படங்களையோ அல்லது அனைத்து எழுத்தாளர்களையோ
முறையே பார்ப்பதோ அல்லது வாசிப்பதோ இல்லை.  தீவிரமான எழுத்தையும், படத்தையுமே  நான் விரும்புகிறேன்.  Craft படைப்பாளிகளை அல்ல.  அந்த விதத்தில் தொழில்நுட்பத்தையும், ஏ.ஆர். ரகுமானையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட உயர்தர மோசமான படம் இது என்பதே என் விமர்சனமாகும்.

கோலம் அமைப்பின் உறுப்பினன் என்றமுறையில் இந்தமாதிரி படங்கள், கோலம் மூலம் வரக்கூடாது என்பதே என் எண்ணம் ஆகும்.

நன்றி! 

Wednesday, March 3, 2010

சாருவை நோக்கி சில கேள்விகள்

எங்கள் ஊர்ப்புறத்தில் கல்லுணிமங்கன்களை நடுத்தெருவில் வைத்து கோபத்துடன் கேள்வி கேட்பார்கள்.  அந்த கேள்விகளுக்கு பெயர் "மானங்கெட்ட கேள்விகள்."  இதற்கு சில உப விளக்கங்களும் உண்டு.  அவற்றிற்கு பொதுவான அர்த்தம் அந்த கேள்விகளுக்கு மன்குநித்தனமான பதில் வரும் இல்லை என்றால், குனிந்துகொண்டே நிற்பான் மங்குனி.  இப்போது கவனிக்க வேண்டிய விஷயம்  சாரு பதில் சொல்லி இருக்கிறார்.

1.  2009 டிசம்பருக்கு பிறகு நித்யானநதரை பற்றி எழுதிய பன்னிரண்டு புத்தகங்களையும் முடிக்காமல் பாதியிலே நிறுத்திவிட்டேன் என்கிறீர்களே பின்ன என்ன மயிருக்கு அவரது போட்டோவை உங்கள் வலைப்பக்கத்தில் முகப்பு படமாக நேற்றுவரை வைத்திருந்தீர்கள்? (அதே கட்டுரையில் புத்தகங்களை கொடுத்துவிட்டேன் ஆனால் 4000/- இன்னும் பாக்கி என்று எழுதி இருப்பதை சாரு டச்சு என்று கொள்ளலாமா அய்யா?)

2. எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் சாரு (தன் தாயை பற்றி கூட) நித்யாவின் வீட்டில் அலைந்து கொண்டிருந்த செக்ஸ் அழகிகளை பற்றி ஏன் முன்னமே போட்டு உடைக்கவில்லை?.

3. கும்பகோணத்தில் ஒரு குடிசைப் பள்ளிக்கூடம் எரிந்து 90 குழந்தைகள் எரிந்து போனார்களே, அதுவும் மங்களமா?” என்று ஏன் நித்யாவிடம் கேட்கவில்லை?

4. சொஸ்தப்படுத்துபவர்கள் என்ற பிரிவில் உங்களுக்கு உடன்பாடு இல்லாத பட்சத்தில் அதை சிலாகிதித்து எழுத காரணம் ஒருவேளை அந்த நேரத்தில் நீங்கள் அடைந்த உன்மத்த நிலையே என்று நாங்கள் கொள்ளலாமா?

5. நீங்கள் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவர் என்பதற்கு நீங்கள் அசைவம் சாப்பிடுவதை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்; எனில், அசைவம் சாப்பிட்டால்தான் அவன் முஸ்லீம் என்று நாங்கள் பொருள் கொள்ளலாமா?

6. "ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களின் ஒரே செல்ல மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே நித்யானந்தரின் ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்து விட்டாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது"  எனில் நீங்கள் முதலிலே இதை அம்பலப்படுத்தாமைக்கு காரணம் உங்களுடைய சிந்தித்து முடிவெடுக்கும் பொறுமை என்று கொள்ளலாமா?

7. ஒரு பெண் ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது அவளுடைய அந்தரங்கம்.  அதையும் மீறி அவளுடைய போட்டோவை உங்கள் வலைப்பக்கத்தில் பல கோணங்களில் போட்டு இருக்கிறீர்களே உங்கள் நியாயம் நியாயந்தானா? (இதில் உள்ள வக்கிரங்களையாவது சாரு நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது அவரது வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்)

 8.  நீங்கள் மந்திரித்துவிட்ட ஆடாக மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ஆக்கி கொண்டிருந்தீர்களே அப்போது சுவாமிஜி என்ன செய்துகொண்டிருந்திருப்பார் என தங்களின் கற்பனை திறனை கொண்டு எங்களுக்கு விளக்கமுடியுமா?

நீங்கள் எங்கள் ஊரின்  கல்லுணிமங்கன் போன்றவர் என்பதால் இக்கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்லாமல் திசை திருப்பவே முயலுவீர்கள் என்பது நான் உட்பட உங்கள் வாசகர்கள் அனைவருமே அறிவோம்.   ஆனாலும் அவர்களையும் மந்திரித்துவிட்ட ஆடுகளாகவே ஆக்கிய வித்தைகளை எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்று அறிய நான் விரும்புகிறேன்.

நான் உங்களை நோக்கி இந்த பதிவை எழுத காரணம் நித்யாவை பற்றிய உங்கள் பதிவு மட்டுமல்ல, நீங்கள் யாருக்கோ ஜால்ராவாக மாறி, அதன் பொருட்டு பல தரமான எழுத்தாளர்களை அவதூறு செய்கிறீர்கள்.  தயவு செய்து நிறுத்துங்கள், உங்களுடைய சிறந்த கட்டுரைகளான மைக்கேல் ஜாக்சன், ஏ ஆர் ரகுமான் போன்ற கட்டுரைகளை எழுதுங்கள்.  உங்களின் தீவிர வாசனாக நான் அதையே பெரிதும் உங்களிடமிருந்து உங்கள் அசரவைக்கும் மொழியில் எதிர்பார்க்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நித்யாவுக்காக உங்கள் வலைப்பக்கத்தில் விளம்பரம் செய்துவிட்டு, இன்று 2009-லேயே  அவரை விட்டு விலகிவிட்டேன் என்று கதை விடுகிறீர்கள்.  எங்கள் ஊரில் இதற்கு பெயர் களவாணித்தனம்.

உங்களுடைய களவாணித்தனம் அம்பலப்படுத்தப்படும் போதெல்லாம் நீங்கள் விடும் டைலாக் பிரசித்தி பெற்றது; "தன்னைப்பற்றிய புனைவாகவே அதை எழுதினேன்" என்பீர்கள்.  தயவு செய்து சாரு... இன்னும் தோடர்ந்து உங்கள் வாசகர்களை ஆட்டு மந்தைகளாக்குங்கள்.  ஆனால் பிற எழுத்தாளர்களை அவதூறு செய்யாதீர்கள்.....

Tuesday, March 2, 2010

கர்ண மோட்சம்

நம் நாட்டின் தொன்மையான கலைகளின் இன்றைய நிலையை, அக்கலையையே வாழ்கையின் அடிப்படையாக கொண்ட மக்களின் வாழ்வை, அருவருப்பான காட்சியமைப்புகள் கொண்ட சினிமா என்ற மீடியத்திடம் பலி கொடுத்திருக்கிறோம். நுட்பமான் விஷயங்களை தமிழர்கள் அவதானிப்பதில்லை; மாறாக, குரூரம் தடவப்பட்ட பொதுப்புத்திகளை வெற்றியும் பெற வைக்கிறார்கள் என்பதை சமீபத்திய திரைப்படங்களின் சாராம்சமும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளும், பத்திரிக்கைகளும் நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை வைத்து வியாபாரமும் செய்து வருகின்றன.

கலையின் உண்மையான தேடல்கள் கொண்ட கலைஞர்களை நாம் ஓட ஓட துரத்துகிறோம் என்பதற்கு தமிழில் நூறு கலைஞர்களை காட்ட முடியும். இதற்கு முழு காரணமாக நான் கருதுவது தமிழர்களின் பொதுபுத்திதான். அதாவது, நேர்மையைவிட அதிகாரம் நமக்கு தரும் மயக்கம் அதிகமானது. இன்று அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அல்லது பெரும்பான்மையோருக்கு பிடித்தமானவர்களாக இருப்பவர்களுக்கு - ஒருவேளை அவர்களுடைய வெளிப்பாடு ஆபாசமானதாக இருந்தாலும் - கிடைக்கும் மரியாதையில் ஒரு துளி கூட உண்மையான ஒரு கலைஞனுக்கு கிடைப்பதில்லை.

கேளிக்கை சினிமாவின் ரசிகனாக இருந்த என்னை புத்தகங்களை நோக்கி திருப்பியவர் எஸ். ராமகிருஷ்ணன்தான். அவரது துணையெழுத்து தொடர் விகடனில் வெளிவந்த காலங்களில் அவரது ஒவ்வொரு கட்டுரையையும் பலமுறைகள் படிப்பவனாக இருந்தேன். நான் சென்னை வரும்போது பயணங்களில் என் துணையாக நான் அழைத்து வந்தது அவரது எழுத்துக்களைத்தான்.

சமீபத்தில் உயிர்மை சார்பாக நடந்த அவரது புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சின் சாராம்சம் என்னை ஆழமாக சோர்வடைய செய்தது. தான் கேளிக்கை சினிமாவுக்குள் நுழைந்தது பற்றி குற்ற உணர்வு கொள்ளவில்லை; உண்மையான கலைஞனாக மட்டுமே தான் வாழ்ந்த காலங்களில், இந்த சமூகம் தனக்கு தந்தது வறுமை மட்டுந்தான், எனவே கொஞ்சம் சம்பாதிப்பதற்கு சினிமாவில் வேலை செய்தால் என்ன தவறு பேசினார். (அவர் சினிமாவில் எழுதும் வசனங்களின் அபத்தம் கேளிக்கை சினிமாவை விட மோசமானது என்பது மறுப்பதற்கில்லை). 

எஸ். ராவின்  கதையில் உருவான கர்ணமோட்சம் என்ற தேசிய விருது பெற்ற குறும்படத்தை இணையத்தில் இரண்டாவது முறையாக இன்று பார்த்தேன்.  ஒரு எளிய கூத்து கலைஞரின் வாழ்வின் நடக்கும் சிறு சம்பவத்தை பற்றிய கதை இது.  சைதாபேட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கர்ணன் கூத்து நடத்துவதற்காக; நேரமாகிவிட்டபடியால் சின்னமலையில் இறங்கி அங்கேயே ஒரு மைதானத்தில் வைத்து கர்ண வேஷம் போட்டுக்கொண்டு, கூடவே தன் மகனையும் அழைத்துக்கொண்டு அந்த கோவிந்தன் என்ற கூத்து கலைஞர் நடந்துவரும் முதல் காட்சியே தேர்ந்த நாட்டுபுற பாடல் கலந்த பின்னணி இசையுடன் நம்மை அந்த கலைஞரின் உலகத்திற்குள் அழைத்து செல்கிறது.

அவரது மகன் கதிர் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவன்.    கோவிந்தன் கதிரிடம், "கதிர் பசிக்குதாடா, ஏதாவது சாப்பிடுகிறாயா" என்று கேட்கும் போது அதை சட்டையே செய்யாமல் தனக்கு கிரிக்கெட் பேட், பால், வெள்ளை தொப்பி வேண்டும் என்று கேட்கிறான்.  கூத்து முடிந்தபின் தனக்கு  கிடைக்கும் பணத்தில் வாங்கித்தருவதாக கோவிந்தன் சொல்கிறார்.  இருவரும் கொஞ்சதூர நடைபயணத்தில் பள்ளியை அடைகிறார்கள். ஆனால் கூத்து நடக்கவிருந்த பள்ளியில் யாருமே இல்லாததை கண்டு கோவிந்தன் கலவரத்துடன் பள்ளியின் உட்புறம் செல்கிறார்.  அங்கே அந்த பள்ளியின் வாட்ச்மன் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

கோவிந்தன்  அவரிடம் தான் வந்த விஷயத்தை கூறுகிறார்.  அதற்கு வாட்ச்மன் அந்த பள்ளியின் தாளாளர் இறந்து விட்டதாகவும், எனவே பள்ளி அன்றைய தினம் விடுமுறை என்றும் கூறுகிறார்.    மேலும் விபரம் தெரிய வேண்டும் என்றால் பள்ளியின் பிரின்சிபாலை தொடர்பு கொள் என்று கூறி பிரின்சிபாலின் நம்பரை கோவிந்தனிடம் கொடுக்கிறார்.  நம்பரை பெற்றுக்கொண்ட கோவிந்தன் ஒரு பப்ளிக் பூத்திலிருந்து பிரின்சிபாலுக்கு போன் செய்கிறார்.  போனில் பிரின்சிபால் கோவிந்தனிடம், "உங்களை அடுத்தமாதம் கண்டிப்பாக நிகழ்ச்சி நடத்த அழைக்கிறேன்" என்று கூறுகிறார்.  உடனே கோவிந்தன், தான் ஐம்பது ரூபாய் மட்டுமே கொண்டுவந்ததாக கூறவும், பிரிசிபால் தன் வீட்டுக்கு வந்தால் ஊர் செல்வதற்கு பணம் தருவதாக கூறுகிறார்.  கோவிந்தன் எப்போது வரவேண்டும் என்று கேட்டதற்கு தான் முட்டுக்காடு சென்றிருப்பதாகவும், வருவதற்கு ஏழு மணி ஆகும் என்றும் பிரின்சிபால் கூறுகிறார். 

பிரின்சிபாலின் வீடு மந்தைவெளியில் இருக்கவும், வாட்ச்மேனிடம் அட்ரஸ் வாங்கிகொண்டு  மந்தைவெளியை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்.   கதிர் மறுபடியும் கோவிந்தனிடம், எனக்கு கிரிக்கெட் பேட் வாங்கி தருகிறேன் என்று சொன்னாயே, இப்போது வாங்கிதா என்று அடம்பிடிக்க, கோவிந்தன் கோபத்தில், நானே ஏழுமணிவரை பணமில்லாமல் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு கிரிக்கெட் கேட்கிறதா என்று திட்டிக்கொண்டே கதிரை ஒரு பிளாட்பார ஹோட்டலுக்கு கூட்டிசெல்கிறார்.  இதனால் கோபமடையும் கதிர், கோவிந்தனை பார்த்து, பேசாமல் நான் ஊரிலயே கிரிக்கெட் விளையாடிக்கொன்ன்டிருந்திருப்பேன், பேட் வாங்கிதருகிறேன் என்று ஏமாற்றி என்னை கூட்டிவந்துவிட்டாயே, நீயெல்லாம் ஒரு கர்ணனா என்று திட்டுகிறான்.

பின்பு, இருவரும் பிளாட்பார சேரில் அமர்கிறார்கள்.  ஹோட்டல் காரனிடம் ஒருவர் காப்பி சரியில்லை என்று சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்.  அதற்கு ஹோட்டல் முதலாளி, நீ கொடுக்கிற ஒன்னாரூபாக்கு ஹார்லிக்ஸா கொடுக்கமுடியும் என்று கத்துகிறான்.  கோவிந்தனும் அதை ஆமோதித்தவாறே, நிஜந்தானே இந்தகாலத்தில் ஒன்னாருபைக்கு யார் காபி தருகிறார்கள் என்று கூறிக்கொண்டே இட்லி எவ்வளவு என்று கேட்கிறார்.  கடைக்காரர் 1.50 ரூபாய் என்று சொன்னவுடன் தன் பாக்கெட்டில் எவ்வளவு இருக்கிறது என்று பார்கிறார், வெறும் 20 ரூபாய் மட்டுமே இருக்கவும், ஒரே ஒரு வடை மட்டும் வாங்கி கதிருக்கு சாப்பிட தருகிறார்.  தனக்கு தண்ணீரே போதுமென்றெண்ணி, கடைக்காரரிடம் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி குடித்தபின், தாகம் அடங்காமல் இன்னும் ஒரு டம்ளர் தண்ணீர் கொடு என்று கேட்கிறார்.  அதற்கு கடைக்காரன், நீ வாங்கிய ஒரு வடைக்கு ரெண்டு டம்ளர் தண்ணியெல்லாம் தரமுடியாது, வேண்டுமென்றால் வாட்டர் பாக்கெட் வங்கி குடி, இல்லையென்றல் பைப்பில் போய் குடித்துக்கொள் என்கிறான்.

இதைஎல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவனது கடையில் வேலை பார்க்கும் சிறுமி தன் கவனக்குறைவால், இட்லியை பாத்திரத்தில் எடுத்துவைக்கும் போது, கைதவறி கீழே போட்டுவிடுகிறாள்.  கடைக்காரன் அவளை ஓங்கி ஒரு அடி அடித்தவாறே அய்யோ பாவம் ஊமையாயிற்றே என்று வேலை கொடுத்தால் அலட்சியமாகவா இருக்கிறாய்.  ஒழுங்காய் இரு அல்லது பழையபடி ரயிலில் பிச்சைஎடுக்க போய்விடு என்று கண்டிக்கிறான்.

கோவிந்தன் எழுந்து நடந்து சென்று பக்கத்திலிருக்கும் டேங்கில் தண்ணீர் குடித்துவிட்டு அமர்ந்திருக்கும்போது, தண்ணீர் பிடிப்பதற்காக அந்த சிறுமி வருகிறாள்.  தன்முன்னே வந்து நிற்கும் அவளிடம் உன் பெயர் என்னம்மா என்று கோவிந்தன் கேட்கிறார்.  ஜானகி என்ற தன் பெயரை மண்ணில் எழுதி காட்டுகிறாள்.  மிக நல்ல பெயர் என்று அவர் பதில் சொல்லும்போது, உங்கள் பெயர் என்ன என்று ஜானகி சைகையாலே கேட்கிறாள்.  கோவிந்தன் அவளிடம், "என் பெயர் கோவிந்தன்; கூத்து தெரியுமா கூத்து, அதுல கர்ணவேஷம் கட்டுறவன்.  கர்ணன் யாரு தெரியுமா?, பாரத கதையில் வருவான்.  சிவாஜி கணேசன் கூட ஆக்டு குடுத்திருக்காரு.  கர்ணன் என்ன செய்வான் தெரியுமா, என்ன கேட்டாலும் தருவான்.  இந்த பூமிய ஒருத்தன் கேட்டானு வை, இந்தா வச்சிக்கோன்னு குடுத்துருவான்.  இந்த உசுர ஒருத்தன் கேட்டான்னு வையி, அதையும் தந்துருவான்.  கூத்துல அய்யாதான் கர்ணன்.  இப்படியே வந்து நின்னு ஒரு கிறுக்கிசுத்தி பாடினேன்னு வச்சுக்கோ, ஊர் மொத்த ஜனமே கைதட்டும்.   ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம்; இப்பல்லாம் எங்க கூத்து நடக்குது, டிவி பெட்டி வந்து எல்லாத்தையும் முழுங்கிடுச்சி.  உனக்கு கூத்து பிடிக்குமா?  உன் வயசுல நான் கூத்து கத்துக்கிட்டேன்.  வாத்தியார் யார் தெரியுமா செஞ்சி துரைசாமி தம்பிரான்.  காணிக்கை எல்லாம் வச்சி குடுத்து சேர்ந்தேன்.   அவரு வீட்டுலேயே வச்சு அலகு கத்துக்கணும்.... சொந்த பிள்ளை மாதிரி வச்சி பாத்துக்கிட்டாரு.  பதினைஞ்சி வருஷம் அவரு கூடவே இருந்தேன்.  அப்பெல்லாம் கூத்து தொடர்ந்து பதினெட்டு நாட்கள் நடக்கும்.  ஜனங்க ராத்திரி பூராவும்  முழிச்சிருந்து பாப்பாங்க.  இன்னிக்கு அந்த பாட்டெல்லாம் காத்தோட போச்சு.   எப்பேர்பட்ட கலை!.. எத்தனைபேர் உயிரைகொடுத்து காப்பாத்தினது.  இப்ப யாருமில்லாம போச்சு.  என் மனசு கேட்காம உன்கிட்ட சொல்லுகிறேன்.  உனக்கு புரியுதோ, புரியல்லையோ..... என் வேதனைய பகிர்ந்துக்க யார் இருக்காங்க?  (இந்த வசனங்களை கோவிந்தன் பேசும்போது அவர் கண்களில் காட்டும் வேதனையை எழுத்தில் கொண்டுவருவது, ஓர் புனைகதை எழுத்தாளனுக்கே கூட சாத்தியமில்லாததுதான்.  அளவைமீராத கச்சிதமான உரையாடலும், தேர்ந்த அவரது நடிப்பும், ஜானகியின் முகபாவங்களும், எவர் இதயத்தையும் தாக்கக்கூடிய வல்லமை கொண்டவை.  இதே கதை வசனத்தை எழுதிய கைகள் சண்டைகோழி போன்ற முட்டாள்தனமான படங்களுக்கு எழுதுவதை தாங்கும் குணம் எனக்கு இல்லை).

இதே நேரத்தில், கடைக்காரன் குச்சியுடன் அடிப்பதற்காக வருவதை கண்ட ஜானகியும் கிண்டந்தனும் வேதனையுடன் பிரிகிறார்கள்.   அவன் அவளை அடித்தவாறே, "போனோமா வந்தோமான்னு  இல்லாம கண்டவனோட என்ன பேச்சு" என்கிறான்.  அதை கோவிந்தன் வேதனையுடன் பார்க்கிறார்; கூத்தில் கர்ணனாக அவர் கொள்ளும் உக்கிரம் அவருக்கு ஞாபகம் வருகிறது.  அதை காட்சி படுத்திய விதம் அருமையானது.

ஆனால் தன் இயலாமையை எண்ணி அவர் வேதனையுடன் தலையை கவிழ்ந்தவாரே பெஞ்சில் அமர்ந்திருக்கும்போது, மறுபடியும் ஜானகி அவரிடத்தில்  வருகிறாள்.  நடுங்கிய குரலுடன் நிமிரிந்து அவளை பார்த்து, அந்த ஆள் உன்னை ரொம்ப அடிச்சானா?  என்று கேட்கிறார்.  தான் அவருக்காக மறைத்துவைத்து கொண்டுவந்திருந்த இட்லிகளை சாப்பிடுவதற்காக அவரிடத்தில் தருகிறாள்.  அதை கடைக்காரன் கவனித்துவிடுவானோ என்று பயந்தபடியே, கடைக்காரன் வரவில்லை என்று உருதிபடித்திக்கொண்ட பின்பு சோகம் ததும்பும் கண்களுடன் இரு கைகளையும் ஏந்தி அவளிடமிருந்து இட்லிகளை வாங்கிக்கொள்கிறார்.
 
அப்போது பின்னணி இசையாக ஒலிக்கும் நாட்டுபுற பாடலான “கேட்ட போருளளிக்கும் வரம் பெற்ற கர்ண ராஜன் நான்," கர்ண வேஷம் போடும் இன்றைய கூத்து கலைஞன் தானமாக பெற்று மறைவாய் உண்ண வேண்டிய அவலத்தை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லுகிறது.  சாப்பிட்டு முடித்தவுடன், கோவிந்தன் ஜானகிக்கு கூத்து கற்றுக்கொடுக்கிறார்.  முதலில் குருவணக்கம் கற்றுகொடுத்த பின்பு, தாம்தக்க தக்கத்திக்க தாம்தக்க தக்கத்தை... என்று கூத்தாடியபடியே அவளையும் ஆடச்சொல்கிறார்.
 
அவள் ஆடத்தொடங்கிய அடுத்த கணம், கடைக்காரன் கோபமாக வந்து அவள் முகத்தில் காப்பியை ஊற்றிவிட்டு, நாலு இட்லி வாங்க காசில்லாம தெருத்தெருவா சுத்திகிட்டு இருக்கிறாய், இதுல கூத்து கத்துகொடுத்து வேற இவள கெடுக்க போறியா?  போயா உன் வேலையை பார்த்துக்கிட்டு என்று அவளை கூட்டி சென்றுவிடுகிறான்.  வேதனை தோய்ந்த முகத்துடன் தலையை கவிழ்ந்து கொள்கிறார். அவரது பழைய நாடக காட்சி அவர் கண்முன் விரிகிறது. அதிலே, அவர் கர்ணனாக பேசும் வசனம் இதோ: ஹேய் காவலா, என்னிடம் யார் வந்து எந்த பொருளை கேட்டாலும், அந்த பொருளை இல்லை என்று சொல்லாமல், வாரி வாரி வழங்கி கொடை வள்ளல் என்று பெயர் பெற்றவன்.  என்னிடம் தானம் பெற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

"அஞ்சை பஞ்சைகள்  பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பாருங்கோ கீர்த்தி வடைத்தேன் 
தன கர்ணன் என்று"

பின்பு சோகமாக திரும்பி அவர் சென்றுகொண்டிருக்கும்போது, அவரை பார்த்த கதிர், “ஐயோ கூத்தாடி வந்துட்டார் என்று சொல்லிக்கொண்டே அவரை நோக்கி வருகிறான். அப்பொழுது பாத்திரம் துலக்கிகொண்டிருந்த ஜானகி, அதை பாதியிலே விட்டுவிட்டு, வேகமாக ஓடிவந்து மூச்சிரைத்தவாறே நின்று அவருக்காக தான் கொண்டு வந்த ஒரு ரூபாய் அணாவை கொடுக்கிறாள்.  அப்போது பின்னணியில் ஒலிக்கும் ஒரு மோசமான  (இது என் கருத்து) இசையை, உடனே அவள் குருவணக்கம் செய்யும்போது ஒலிக்கும் மனதை வருடும் இசை சீராக சமன் செய்கிறது.

ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு  திரும்பிப்பாராமல் அவள் ஓடுவதை கண்ணீர் மல்க கோவிந்தன் பார்த்துக்கொண்டே நிற்கிறார்.  பெருமதிப்புடைய வெகுமதியை (ஒரு உண்மையான கலைஞனுக்கு உண்மையான  ரசிகனிடமிருந்து  கிடைக்கும் பரிசைவிட உயரியது எது?) பெற்றுக்கொண்ட பெருமையுடன் பிரின்சிபாலின் வீட்டை நோக்கி நடக்கிறார். 

"அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பாருங்கோ கீர்த்தி வடைத்தேன்
தன கர்ணன் என்று..."
என்ற நாட்டுபுற பாடலுடன் படம் முடிவடைகிறது.

உண்மையான கலை தவறான அதிகாரத்தை எதிர்ப்பது அல்லது அதற்கெதிரான தீவிர மௌனத்தை கோருவது. இதையும் இன்றைய சூழியலுக்கு எதிரான அழகியலாகவே நான் காண்கிறேன்.

இந்த குறும்படத்தில் சொல்லப்பட்டது ஒரு கதை மட்டுமல்ல. ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்தப்பட்டவை சமூகத்தின் இறுக்கங்களும், வேதனைகளும், சக மனித துவேசங்களும் தான். அனைத்து காட்சிகளுமே சமூக அவலம் அல்லது சமூக உன்னதங்களின் படிமங்கள் தான்.

காட்சி வாரியாக விவரிக்கும ஆவல் என்னிடம் உள்ளது, ஆனால் படத்தை பார்க்கும் ஒருவர் பெரும் அனுபவம் அதைவிட  அலாதியானது என்றே நான் கருதுகிறேன்.

இதை இயக்கிய முரளி மனோகரும், கோவிந்தனாக நடித்த ஜார்ஜும், கதிர், ஜானகி, மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பாராட்டதாக்கவர்கள். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, Titling மற்றும் இன்னபிற  தொழில்நுட்பங்கள் பற்றி நான் பேசப்போவதில்லை.   அது ஒவ்வொருவரும் படம் பார்த்து அனுபவிக்கவேண்டியது.  அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

http://www.youtube.com/watch?v=3W87_I79JKA
http://www.youtube.com/watch?v=PgcqGpl3OqM


http://www.sramakrishnan.com/view.asp?id=374&PS=1