Tuesday, June 1, 2010

பக்கத்தில் வந்த அப்பா

சிறுவயது முதலே எனக்கு என் அப்பாவின் மீது எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.  வறுமை பீடித்த குடும்பமாய் இருந்தபடியால், கடனை அடைப்பது மட்டுமே அப்பாவின் இளவயது கனவாக இருந்தது.  கடுமையான வேலை; வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை தலையில் சுமந்தே விற்பனை செய்யும் தொழில்.  அவர் மளிகை சாமான்களை அடுக்கிவைத்து சுமந்து செல்லும் பெட்டியை அந்நாட்களில் என்னால் அசைக்க கூட முடிந்ததில்லை.



அப்பா கோவில் திருவிழாக்களில் கலந்துகொண்டதில்லை.  எஙகள் ஊரின் எந்த‌ டீக்கடை பெ‍‍‍ன்ஜிலும் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டே அரட்டை அடித்ததில்லை.  ஊர்கூட்டஙகளில் (பஞாயத்து) கலந்துகொண்டு கருத்து சொன்னதில்லை.  வியாபாரம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்துசேரவே இரவு மணி பதினொன்றைத் தாண்டிவிடும். முறுக்குதவிர வேறு திண்பண்டங்க‌ளை அவர் வாங்கிவந்ததே இல்லை.  கேரளாவிற்கு வியாபாரம் செய்ய சென்றுவந்த நாட்களில் பலாப்பழங்கள் வாங்கிவர ஆரம்பித்தார்.  அந்த வயதில் ஒருரூபாய் கிடைத்தால் போதும்; ஐந்து நாட்களுக்காவது எஙகளை கையில் பிடிக்கமுடியாது, ஆனால் அப்பா ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் முன்பு எனக்கும் தம்பிக்கும் ஆளுக்கு இரண்டு ரூபாய்களை தூக்கத்திலிருக்கும் எங்கள் கைகளில் வைத்துவிடடு செல்வார்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அப்பாவின் வருகைக்காக இரவு நெடு‌நேரம் விழித்திருப்போம்.  ஆனால் மறுநாள் எழுந்திருக்கும்போதுதான் தெரியும் அப்பா வருமுன்னரே தூங்கிவிட்டோம் என்று.  அம்மா மட்டுமே அப்பா இரவு வந்ததை அறிந்திருப்பாள்.  காலையில் எழுந்ததும் அல்லல்பட்டு 20 ரூபாய் தேத்துவோம்.  பண்டிகை கொண்டாட்டத்தில் அனைத்துமே காலியாகிவிடும்.  தனக்குமட்டும் பண்டிகை இல்லை என்று அப்பா எடுத்த தீர்மானம் அவரது ஆழ்ந்த தூக்கத்தில் நம்க்கு தெரியும்; வேலை களைப்பில் அசந்து தூங்கிக்கொண்டிருப்பார்.  அநநாட்களைத் தவிர வேறு நாட்களில் அப்பா தூங்கி நானோ அல்லது தம்பியோ பார்த்ததே இல்லை.

கடனே இல்லாத வாழ்க்கை வாழவேண்டுமென்ற பெருங்கனவு ஒன்றே அவருக்கு இருந்தது.  கடனை அடைததுவிடவேண்டுமென்று சுயநினைவின்றி பகலிலும் இரவிலும் அவரது நா அரற்றுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.  பின்பு வெளியில் சென்று வியாபாரம் செய்யலாம் என்று எண்ணி இளம் மனைவியான அம்மாவை விட்டுவிட்டு கேரளா சென்றுவிட்டார்.  என்று ஊருக்கு வருவேனென்று சொல்லிச் செல்கிறாரோ சொல்லிவைத்த மாதிரி அன்று வரவேமாட்டார். தொலைதொடர்பு இல்லாத அந்த நாட்களில் அம்மாவை பார்க்க பாவமாக இருக்கும்.

குடும்பம் என்ற ஒற்றை அமைப்பைவிட சமுதாயம் என்ற கூட்டு அமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார் அப்பா.  சமுதாயத்தில் ஒரு கௌரவமான வாழ்க்கைக்காக வெறிகொண்டு உழைத்தார்.  சொந்தமாக தொழில் தொடங்கும் அளவிற்கு பணம் சேர்ந்தது.  பக்கத்து ஊரான சுரண்டையில் மார்கெட்டில் கடை ஆரம்பித்தோம். இதற்குள் கல்லூரிப்பருவத்தை நானும் தம்பியும் எட்டியிருந்தோம்.  நேரடியாக‌ அப்பாவின் பாசத்தை நாங்கள் அனுபவித்தது மிகவும் குறைவே.  அம்மாவின் அபிரிமிதமான அன்பால் பக்கத்தில் அப்பா இல்லாத தனிமை எங்களை அமிழ்த்தியதில்லை.  ஆனாலும் இன்றும் அப்பா தன் குழந்தைகளோடு மகிழ்சசியாய் உரையாடும் பழ‌க்கத்தை அறியவேயில்லை.

நேற்று சுந்தர ராமசாமியின் பக்கத்தில் வந்த அப்பா என்ற் அற்புதமான கதையை வாசித்தேன்.  சு.ரா. தன் குழந்தைப் பருவம் குறித்த தீவிர அவதானிப்பைக் கொண்டவர்.  அப்பாவைப் பற்றிய தன் விமரிசனங்களை புனைகதைகளிலும் கட்டுரைகளிலும் தொடர்ந்து செய்துவந்தவர்.

இக்கதையில் வரும் ராஜு பெரியப்பாவும் பாலுவின் அப்பாவும் ஒன்றுவிட்ட சகோதரர்களாக இருந்தாலும் உடன்பிறந்தோரைப் போன்று பரஸ்பரம் பாசம் கொண்டவர்கள்.  அப்பா இளம் வயதில் தன் புது மனைவியான அம்மாவுடன் வியாபார‌ நொடியால் நிர்க‌தியாக‌ நின்றிருந்த‌ வேளையில் ராஜு பெரிய‌ப்பா த‌ன் பெய‌ருக்கு இருந்த‌ ஏஜென்சியை அப்பா பெய‌ருக்கு மாற்றி கொடுத்த‌ உத‌வியை நிர‌ந்த‌ர‌மாக‌ நினைத்த‌ப‌டியே இருக்கிறார்.

ராஜி பெரியப்பா வருடத்திற்கு ஒருமுறை பாலுவின் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு செல்வார். அவரை உபசரிப்பதற்கு தடாலடியான ஏறபாடுகளை  செய்வார் அப்பா.  பாலுவும், ரமணியும் பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்க போட்டி போடுவார்கள்.

ர‌ம‌ணி மீது அப்பாவிற்கு அதீத‌ பாச‌ம் உண்டு. வீட்டில் க‌டுமையான‌வ‌ராக‌ இருந்தாலும் கூட‌ சில‌ வேளைக‌ளில் ர‌ம‌ணியை ம‌ட்டும் ம‌டியில் வைத்துக்கொண்டு செல்ல‌ம் கொஞ்சுவார் அப்பா. வீட்டில் இருக்கும் அந்த‌ ச‌ம‌ய‌ங்க‌ளிலெல்லாம் அவ‌ர‌து ந‌ட‌வ‌டிக்கைக‌ள் தாங்க‌ முடியாம‌ல் பாலு ம‌ட்டும் த‌ன் வீட்டில் இருக்கும் வேப்ப‌ம‌ர‌த்தின் உச்சிக்கு ஏறிவிடுவான். அங்கிருந்து அப்பாவின் ம‌டியிலிருக்கும் ர‌ம‌ணியை பார்த்துக்கொண்டிருப்பான். இவ‌ன் பார்ப்ப‌து எப்போதும் ர‌ம‌ணிக்கு தெரியும். அவ‌னை பார்த்து அவள் அதுபோன்ற‌ ச‌மய‌ங்க‌ளில் முக‌ச்சேட்டை காட்டுவாள். தானும் அப்பாவிட‌ம் நெருங்க‌வேண்டும், அவ‌ர‌து பாச்ம் த‌னக்கும் கிடைக்க ‌வேண்டுமென‌ பாலு ஆசைப‌டுவான்.



ஒருநாள் காலை தொலைபேசி அலுவலகத்திலிருந்து தொலைபேசி அலுவலக சேவகன் வந்து அவருக்கு கொச்சியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக சொல்லி விட்டு செல்கிறான். தொலைபேசி பிரபலமாகாத காலமென்பதால் அந்த செய்தி அப்பாவை மெதுவாக பதட்டமடையச் செய்கிறது. அவரது பல காரியங்களை எப்போதுமே அவர் செய்வதில்லை; முறையே தபால் நிலையம், மின்சார நிலையம், அல்லது பலசரக்குக் கடை என எங்குமே செல்பவரல்ல அப்பா.

கட்டாயம் வந்துவிட்டதால் ஆவேசத்துடன் தொலைபேசி நிலையத்தை நோக்கி அப்பா வேகமாக நடக்கத்தொடங்குகிறார்.  அம்மா பாலுவையும் கூடவே அனுப்பிவைக்கிறாள்.  உதவாக்கரை என்று சொல்லும் அம்மாவே அப்பாவுக்கு துணையாக தன்னை போகச் சொன்னது பாலுவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.  அவரது குடையை தூக்கிக்கொண்டு அவரது பின்னாலேயே ஓடுகிறான்.  அக்குடையை அப்பாவைத் தவிர யாருமே தொட்டதுகூட கிடையாது என்பதால் கிளர்ச்சியுடன் குடையை அணைத்துக்கொள்கிறான்.  அவசரத்தில் சட்டைகூட போடாமல் விரைந்து வந்துவிட்ட பாலுவைப் பார்த்து அப்பா "சட்டையை போட்டுக்கொள்வதெற்கு என்னெடா மண்டு" என்று கேட்கிறார்.  இது அவர் வழக்கமாக அவனைத் திட்டுவதற்காக சொல்லப்பட்ட மண்டு அல்ல.  உடனே பாலு "இதோ போட்டுண்டு வரேன்" என்று சொல்லிவிட்டு பின் திரும்பிப்பாய ஆயத்தமாக, "சரி, சரி வேண்டாம் சின்னப்பயல்தானே நீ" என்கிறார்.  பாசத்துடன் அவர் சொன்ன சின்னப்பயல் என்ற வார்த்தை அவனுள் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்துகிறது.

இருவ‌ரும் தொலைபேசி நிலைய‌த்தை அடைகின்ற‌ன‌ர்.  அப்பாவுக்கு ரொம்ப‌வும் உத‌வியாக‌ இருந்து த‌ன்னை மெச்சி சில‌ வார்த்தைக‌ளை அவ‌ர் த‌ன் அம்மாவிட‌ம் சொல்லும்ப‌டி செய்துவிட‌வேண்டுமென்று தீவிரமாகிறான்.  தொலைபேசி நிலைய பெண் அப்பாவை பேச அழைக்கிறாள்.  அப்பா தொலைபேசியை வாங்கி மிகுந்த பதட்டத்துடன் "நான் தான், நான் தான்" என்று உரக்க கத்துகிறார்.  அப்போது பாலு "அப்பா பெயரைச் சொல்லுங்கோ" என்கிறான்.  ஏழெட்டு தடவை "நான்தான் சங்கரன்" என்று கத்தியபின்பும் எதிர்முனையில் பேசப்படுவது அவருக்கு கேட்காததால் பாலுவை நோக்கி "ஒண்ணுமே கேட்கலியேடா பாலு" என்று மிகவும் சோகமாக சொல்லுகிறார்.  அப்பா தன் கவலையை பாலுவிடம் பகிர்ந்ததை எண்ணி பாலு ஆர்வமாகி,

"நான் பேசட்டுமா அப்பா"

"பேசு, பேசு."

"ஹலோ! ஹலோ!"

"ஹலோ" என்ற வார்த்தையை அப்பா அதுவரை உபயோகப்படுத்தியிருக்கவில்லை.  தான் எடுத்த எடுப்பிலேயே ஹலோ என்று சொன்னது அப்பாவை புல்லரிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறான்.

"ஜோராக கேட்கிறதே அப்பா, "பெரியப்பா செத்துப்போயிட்டாராம்; அண்ணா சொல்கிறான்," பாலு.

அப்பா மிகவும் துக்கப்படுகிறார்.  அவ்வேளையில் பாலுவை ஒரு கையால் இழுத்து அணைத்துக் கொள்கிறார்.  அவனுக்கு பெரியப்பா செத்தமைக்கு வருத்தமும், அப்பாமேல் பிரியமும் ஏற்படுகிறது.  ஏதாவது பெரிய காரியம் செய்து அப்பாவை ஆறுதல்படுத்திவிட வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறான்.

வீட்டிற்கு வந்ததும் வீட்டின் பின்புறத்திலுள்ள கிண‌ற்றில் குளிக்கிறார். தன்னிலை புரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பாலுவையும் குளிப்பாட்டிவிட ஆரம்பிக்கிறார்.  அது அவனுக்கு மிகுந்த கூச்சத்தை ஏற்படுத்துகிறது.  இதையெல்லாம் ரமணி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.

அப்பா உறங்கியவுடன் தன் சமயோஜிதத்தையும், அதனால் ஏற்பட்ட அப்பாவின் வியப்பையும் ஒன்றுவிடாமல் ரமணியிடமும் அம்மாவிடமும் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கிறான்.

மறுநாள் காலையில் எழுந்தவுடன் அப்பா நடந்தவை அனைத்தையும் விவரிக்கிறார்.  ஆனால் அவரது பேச்சில் பாலுவைப் பற்றி ஒரு வார்த்தை கூட வரவில்லை.  அனைத்தையும் அவரே சமாளித்ததுபோல் அவரது பேச்சின் தோணி இருக்கிறது.

பாலு குடையைத் தூக்கிக்கொண்டு வந்தானே என்று அம்மா கேட்க, அப்பா அதற்கு, "அவன் எதுக்கு, என்னால தூக்கிகொண்டுவர முடியாதா? அவனுக்கென்ன தெரியும் குழந்தை, டெலிபோனைக் கண்டானா கவர்மெண்ட் ஆபீச கண்டானா, பின்னால ஓடிவந்தது பாவம்."

பாலுவால் இந்த வார்த்தைகளை கேட்கவே முடியவில்லை; ஏமாற்றம் அவனால் தாங்கிக்கொள்ள முடியாததாய் இருந்த்து. அதுமட்டுமல்லாது வீட்டுக்கு வரும் அனைவரிடமும் அப்பா தமது சாமர்த‌தியமாகவே நிகழ்வை பிரஸ்தாபிக்க பாலுவால் நிம்மதியாகவே இருக்கமுடியவில்லை.

இப்போது அப்பாவுக்கு பாலு வராந்தாவில் நின்று தம்மைப் பார்ப்பதுகூட தர்மசங்கடமாகப் பட்டது.  "போடா உள்ளே; போய் புஸ்தகத்தை எடுதுதுப் படி."  அப்பா பழைய அப்பாவாக மாறுவது பாலுவை வேதனையில் ஆழ்த்தியது.

பாலு பின்பக்கம் வழியாக சென்று பழையபடி வேப்பமரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்கிறான்.  இதைக்கண்ட ரமணியும் மரத்தில் ஏற முயற்சி செய்கிறாள, பாலு உதவி செய்கிறான்.  இந்தமுறை ரமணியின் வார்த்தைகள் நக்கலாக வந்து விழுகின்றன.

"புழுகு மூட்டை, எல்லாத்தையும் அவிழ்த்து விட்டால் ரொம்ப நேரத்துக்கு நிக்காது."

"அனுமார் சத்தியமாக நான் டெலிபோனில் பேசினேன்; அப்பா என்னை அணைச்சுண்டார்" என்று பாலு கத்துகிறான்.

இப்போது ரமணியின் வார்த்தைள் தடிக்கின்றன.  "உன்னுடைய லொட்டு லொடக்குக்கெல்லாம் அனுமாரை இழுக்காதே."  ரொம்ப ஏளெனமாக உதட்டை சுழித்துக்கொள்கிறாள். 

பொங்கும் ஆத்திரத்துடன் பாலு, "இன்னொரு பெரியப்பா வருவாரே ரமணி, அவர் ராஜு பெரியப்பாவை விட சின்னவரா பெரியவரா?"

"ரொம்ப‌ப் பெரியவர்" என்றாள் ரமணி.

"அவர் செத்துப் போகும்போதும் போன் வரும், அப்பவும் நான் அப்பாகூட போவேன். வந்து பாரு, அப்ப தெரியும் உனக்கு."

"முட்டாள் உளராதே" என்றாள் ரமணி.

கதையின் எந்தவொரு இடத்திலும் கதாசிரியர் சிறுவர் உலகைவிட்டு வரவேயில்லை.  சிறுவர் மொழியிலும் அதே நேரததில் தீவிரமாகவும் கதை சொல்லப்பட்டிருப்பது இக்கதை இதன் தளத்தை அடைய முக்கிய காரணமாகும். டிபிக்கல் சு.ரா. பாணியான கவித்துவ பேச்சுவழக்கு கதை முழுவதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. அப்பாவிடம் நெருங்கமுடியாமையின் பாலுவின் வேதனை, நெருங்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகள், மற்றும் ரமணியின் கிண்டல்கள் என் அனைத்தும் சிறு சிறு குறிப்புகளாக வரையப்பட்டு ஏதோ ஒரு மர்மப்புள்ளியில் அவை கதையை உன்னத தளத்திற்கு கொண்டு செல்கின்றன.

குடும்ப விழாக்கள் அல்லது பண்டிகைகள் என முக்கிய நாட்களுக்கு மட்டுமே ஊருக்கு செல்லும் நிலை வந்துவிட்ட இந்நாட்களில் அப்பாவைப் பற்றி நினைக்குந்தோறும் நான் வாசிப்பது சு.ரா.வின் இந்த மகத்தான கதையைத்தான்.  சு.ரா.வும் தன்னுடைய் அப்பாவுடனான தன் அனுபவத்தை எழுதி எழுதி தணித்துக் கொண்டவர்.  தன் அப்பாவின் கண்டிப்பே அவருக்கு கசப்பானதாக இருந்தது.  ஆனால் என் அப்பா கண்டிப்பானவர் இல்லை; சாதுவானவர், பயந்த சுபாவம் கொண்டவர், அவரிடமிருக்கும் குறைகளில் முக்கியமானது பாசத்தை வெளிப்படுத்துவதில் அவர் குறைபாடு கொண்டவர் என்பது மட்டுமேயாகும்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு அபூர்வ தருணத்தில், ஒரு பின்னிரவில், அப்பா எஙகளுடன் வெகுநேரம் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். அம்மா தந்த பால் இல்லாத தேநீர் அன்று அதீத சுவையானதாய் இருந்தது.  அப்பாவிடம் அபாரமான நகைச்சுவை உண்ர்ச்சி உண்டு என்பதை நான் நேரில் உணர்ந்த நாள் அது.  தனித்த எழுத்தாளரைப் போன்று அவருக்கென்று பிரத்யேகமான வார்த்தைப் பிரயோகங்களை தன் பேச்சில் கொண்டிருந்தார். அவர் எப்போதுமே வாழ விரும்பும் கடனற்ற வாழ்க்கை இந்நாட்களில் அவருக்கு வாய்த்திருப்பது அவரை மேலும் உற்சாகமாக்கியிருக்கிறது.  அளவற்ற தன்னம்பிக்கையோடு அப்பா எஙகளோடு உரையாடும் இன்றைய நாட்களில் சு.ரா. இக்கதையின் மூலம் இன்னும் நெருக்கமாக என் அருகில் வருவதை என் அகம் அறிகிறது.