Sunday, February 6, 2011

நண்பேண்டா

 பழைய அலுவலகத்தில் இலக்கிய நணபர்கள் அதிகம் இல்லையென்றாலும் சினிமா, பாடல்கள் போன்ற கலை உணர்வுகள் கொண்ட நண்பர்கள் இருந்தனர். தொடர்ந்த விவாதங்கள் கொஞ்சமேனும் ஆரோக்கியமானதாக நடந்ததுண்டு. அதில் மோகன் என்ற நண்பர் ஞாநியின் கேணி கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு இலக்கிய ஆர்வம் கொண்டவர். சுஜாதா முதல் சுந்தர ராமசாமி வரை, மணிரத்னம் முதல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வரை அரை அறிவோடாவது அல்லது முதிர்ச்சியற்ற மனநிலையோடாவது தொடர்ந்து விவாதிப்போம். திடீரென்று நான் கொண்ட அலுவலக மாற்றம் இலக்கிய நண்பர்கள் இல்லாமல் நரகம் போன்று காட்சியளித்தது.

முதிர்ச்சியற்ற பெண் பித்தர்களையும், இளவயது அலுவலர்களையுமே நண்பர்களாக்கிக் கொள்ளும் சூழல் அமைந்துவிட்டது. கிடைத்த ஒன்றிரெண்டு தோழிகளும் இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வத்தை மதித்தார்களே தவிர மருந்துக்கும் அதன் அருகில் கூட வரவில்லை. வெறுப்புடனையே வேலைக்கு சென்றுவரும்படி ஆனது என்னை சோர்வடையச் செய்தது. இந்நிலையில் தான் ராபர்ட்டை சந்தித்தேன். ஒழுங்கற்ற உடை, ஒல்லியான தேகம், பனைமரம் போன்ற உயரம் கொண்டவன். முதல் சந்திப்பிலேயே கலகலவென பேசிக்கொண்டிருந்தான். குழுவாகப் பேசிக்கொண்டிருந்தபோது, சுஜாதாவின் மரணம் பற்றிய பேச்சு வந்தது. அதில் நான் கலந்துகொண்ட விஷயத்தை சொன்னதும், அனைவருக்குமே சிறு ஆச்சர்யம் தோன்றியது. ராபர்ட் இன்னும் வெகுவாக என்னிடம் நெருங்கி என்னைப் பற்றி விசாரிக்கத்தொடங்கினான். ஐந்து நிமிடத்தில் அவனும் சுந்தர ராமசாமியின் தீவிர வாசகன் என்ற உண்மை தெரியவந்தது.

என்னவென்றே தெரியவில்லை அந்த நிமிடம் முதல் அலுவலகம் எனக்குப் பிடிக்கத்தொடங்கியது. பேசப் பேச அதிர்ச்சிகள் தந்துகொண்டேயிருந்தான். பேச்சு உலக இலக்கியம் வரை நீண்டது. அதில் நான் ஜீரோ என்றாலும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். அதன் பிறகு பிறருடன் பேசும் ஆர்வம் குறைந்துவிட்டது. இலக்கியம், சினிமா, பாடல்கள் என தொடர்ந்து ராபர்ட்டுடன் விவாதிக்கத்தொடங்கினேன். எதையுமே ஆழத்திற்கு அப்பாற் சென்று யோசிக்கும் திறனை இயற்கையிலேயே பெற்றிருந்தான். காஃப்கா, ஆல்பெர் காம்யு என பலரையும் படித்திருக்கிறான்.

பலமுறை அவனை என் வீட்டிற்கு அழைத்தும் அவன் வந்ததேயில்லை. இந்த வாரம் நான் அழைக்காமலேயே வந்தான். இருவரும் ஆடுகளம் திரைப்படம் பார்க்கப் போவது என்று முடிவெடுத்து Sky Walk சென்றோம். மாலைக் காட்சி இல்லை, இரவும் ஒன்பது மணி காட்சிதான் இருந்தது. வேறு படம் பார்க்க இருவருக்குமே விருப்பம் இல்லை. அழகான பெண்கள் அதிகம் வலம் வந்ததால் காம்ப்ளெக்ஸை சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து லேண்ட்மார்க் உள்ளே நுழைந்தோம்.

பாப் இசைக்கோவைகளைப் பார்வையிடத் தொடங்கினான். அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து பாடகர்களையுமே அவன் தெரிந்து வைத்திருந்தான். அவர்கள் தந்த அனுபவங்களை வெகு தீவிரமாக உற்சாகமாக பகிர்ந்து கொண்டிருந்தான். பிண்ணனியில் அருமையான பாடல்களை ஒலிக்கவிட்டிருந்தார்கள். பாடல்கள் பற்றிய கருத்துக்களினூடே கற்பு, காதல், தனிமை, இசை, பாப் என பல விஷயங்களை அனாயசமாக விவரித்தான். உற்சாகமான பாப் இசை தந்த அனுபவத்தை அவன் சொல்ல கேட்டபொழுது நானும் பாப் ஆல்பங்களை கவனிக்கத்தொடங்கினேன்.

அப்போது ஒலி தந்த அனுபவத்தை வீட்டிலிருந்து பின்னரவில் தனிமையாக யோசித்தபோது மயக்கமூட்டுவதாக இருந்தது. வேறு நாட்டு கலாச்சாரங்களையும், அவர்கள் வாழ்வில் தொடர்ந்து இசை ஆற்றும் பங்குகளையும் சிந்தனை செய்யவைத்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு பீடித்திருந்த மன குழப்பங்களுக்கு அந்த இசையும், ராபர்ட்டின் சிந்தனைகளும் சுத்தமான தீர்வை அளித்தன. கேணியும் தொடர்ந்து இசை சம்பந்தமான சந்திப்புகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டு இருப்பதால் ராபர்ட்டை அதில் கலந்து கொள்ளும்படி அழைத்தேன். அவனது சம்மதம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது

Sunday, January 2, 2011

கி.ராஜநாராயணனின் கதவு

எங்கள் வீடு கட்டப்பட்டு குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டுகளாவது இருக்கும். வீடு என்று சொன்னால் கொஞ்சம் ஓவராக இருக்கும், ஒரே ஒரு அறை, அதை இரண்டாக பிரித்து சின்னஞ் சிறிய சமயலறை. வீட்டின் நீள அகலத்தை நான் அளவிட்டது இல்லை, வேண்டுமானால் இவ்வாறு சொல்லலாம். அதாவது, 30 மூட்டை நெல்லை அடுக்கிவைத்துவிட்டால், அனைவருமே வெளியேதான் படுத்து உறங்கவேண்டும். நானும் தம்பியும் அடுக்கப்பட்ட மூட்டைகளின் இடைவெளிகளில் ஏதேனும் ஒன்றை உறங்கப் பயன்படுத்திக் கொள்வோம். அரிப்பு தாங்கமுடியாது, ஆனால் எங்களுக்கென்று தனிப்பட்ட சுகம் அதில் கிடைத்தது. நெல் இல்லாத நாட்களில் அந்த ஒற்றை அறை மிகவும் விஸ்தாரமானதாகத் தோன்றும்.

வீடுகட்ட பயன்படுத்தப்பட்ட மரச் சாமான்கள் அனைத்துமே தேக்கால் ஆனவை. மாடி மட்டும் முன்னால் நீண்டபடி இருக்கும். அதன் நேர் கீழே அறை இல்லாமல் வெறும் முற்றம் மட்டுமே இருந்தது. எங்கள் வீட்டின் கதவு மிகவும் தடிமனானது. சாதாரணமாக அதைப் பூட்ட இயலாது. வேகமாக இழுத்து சடாரேன்று சாத்தவேண்டும். சுவர்கள் ஒவ்வொன்றும் அதிக அகலமாக இருக்கும். மேற்சுவர்களையும் அவ்வாறே அமைத்திருந்தார்கள். எங்கள் வீட்டைக் கட்ட பயன்படுத்திய செங்கற்களையும், தேக்குமரப் பலகைகளையும் வைத்து அதைப் போல் இரண்டு மடங்கு பெரிதான வீட்டைக் கட்டி முடித்துவிடலாம். இக்காலத்தில் வழக்கொழிந்து போன பல பொருட்கள் எங்கள் வீட்டில் இருந்தன. வெங்கலக் கின்னம், வெங்கல கும்பா, செப்பு (நான் பணம் இதில்தான் சேமித்து வைப்பேன்), மற்றும் பல.



பீடி சுற்றுதலே எங்க ஊர் பெண்களின் முக்கியமான தொழில் இன்றுவரையிலும். அப்போதைய நாட்களில் குழுவாக உட்கார்ந்து பீடி சுற்றுவார்கள். ஞாயிறு மட்டுமே விடுமுறை. அப்படியொரு விடுமுறை நாளில் என் அம்மாவுடன் பக்கத்து வீட்டுப் பெண்கள் எங்கள் வீட்டு முற்றத்தில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். நான் எனக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட புது மிதிவண்டியை துடைத்துக் கொண்டிருந்தேன். அரட்டை ரொம்பநேரம் நடந்துகொண்டிருந்தது. எப்போது எல்லோரும் கலைந்து சென்றார்களோ தெரியாது, நான் துடைத்து முடித்த என் மிதிவண்டியை, என் வீட்டை ஒட்டிய எங்களுக்குச் சொந்தமான சாவடியில் ஏற்றிவிட்டுக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் பூமியதிரும் சத்ததுடன் வீட்டின் முன்மாடி இடிந்து வீட்டின் முற்றத்தில் விழுந்தது. மாடி இடிந்துவிழுந்த சத்தம் கேட்டு அதிர்ந்த என் அம்மா பக்கத்து வீட்டிலிருந்து என் பேரை உரக்க சொல்லி அலறியபடியே வேகமாக ஓடிவந்தாள். எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்தபின் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு அவள் விட்ட பெருமூச்சின் வெப்பம் என் வாள்நாளில் மறக்கவே முடியாத ஒன்று. அரை மணி நேரம் முன்னால் இடிந்து விழுந்திருந்தால், குறைந்தபட்சம் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கக்கூடும்.

கி. ராஜநாராயணின் கதவு அப்படியான ஒரு தருணத்தை விவரிக்கும் கதை. மிகவும் ஏழ்மையான வீடு. அம்மா வயல் வேலை பார்க்கும் கூலி, அப்பாவும் கூலிதான். வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்றவன் நான்கு மாதங்களாகியும் வீடு திரும்பவில்லை. ஒரு கைக்குழந்தை, பெரிய பெண், சின்ன பையன். அம்மா கூலி வேலைக்கு சென்றபின் கைக்குழந்தையை அக்காவும் தம்பியுமே பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கும், சுற்றியுள்ள வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் அவர்களுடைய வீட்டின் கதவு தான் விளையாட்டுப் பொருள். கதவை பேருந்தாக உருவகித்துக்கொண்டு தினமும் அதில் ஏறிவிளையாடுகிறார்கள். கிடைக்கும் அழகிய படங்களை அதில் ஒட்டி அழகு பார்க்கின்றனர். வீட்டுத் தீர்வை நெடுநாட்களாகக் கட்டப்படாததால் ஊரின் தலையாரி குழந்தைகள் மட்டுமே இருக்கும் சமயம் வந்து கதவை கழற்றி எடுத்துச் சென்றுவிடுகிறான். என்ன நடக்கிறது என்று புரியாத குழந்தைகள் அவன் பின்னாலே செல்கின்றனர்.


அம்மா வீட்டுக்கு வந்தபின் கதவில்லாததைக் கண்டு இடிந்து போகிறாள். அழுகையை அடக்க முற்பட்டு தோற்றுப்போய் வெடித்து அழுகிறாள். இப்போது வீட்டிற்கு கதவு இல்லாததால், யாருமற்ற சமயத்தில் பொங்கி வைத்திருந்த சோறை நாய் வந்து தின்றுவிட்டுப் போய்விடுகிறது. தெருவிலிருந்து எடுத்த்வந்த படத்தை எங்கு ஒட்டுவது என்று பையன் யோசித்தவாறே நாய் தின்று சிதறிய பருக்கைகளை பயன்படுத்தி சுவற்றில் ஒட்ட முற்படுகிறான், முடியவில்லை. சிறிது நாட்கள் கழித்து ஓரிடத்தில் அவர்களது கதவு இருப்பதைப் பார்த்து அக்காவிடம் சொல்கிறான். பதறியடித்துக் கொண்டு கதவைக் காண ஓடுகிறாள். கதவைக் கண்ட அவளது நெஞ்சம் விம்முகிறது. கறையான் அரித்திருந்த கதவின் பகுதியை சுத்தப்படுத்துகிறாள், பின்பு கதவோடு சாய்ந்து கொள்கிறாள் என்பதோடு கதை முடிகிறது.

நெஞ்சை உருக்கும் இக்கதை ஏகப்பட்ட உள் அர்த்தங்கள் கொண்டது. வருமானத்திற்கு வழியற்ற், அதே நேரத்தில் கடன் பட்ட ஏழைகளின் வாழ்வின் ஒரு சம்பவத்தை மிகத் துல்லியமாக விவரிக்கிறது. தகவல் தொடர்பற்ற அக்காலத்தில் வெளியூருக்கு சென்றுவிட்ட கணவனை எதிர் நோக்கும் பெண்ணின் அகவுலகம் கலைத்தன்மையுடன் கைகூடியிருக்கிறது இக்கதையில். சிறுவர்களில் விளையாட்டு உலகமும், வறுமையில் அவர்களது அபிலாஷைகளும் சிறுவர்களுக்கே உள்ள மனநிலையில் நின்று கதாசிரியரால் விவரிக்கப்படுவது இக்கதைக்கு மேலும் நம்பகத்தன்மையை அளிக்கிறது. எளியவர்களே வருத்தப்படுகிறார்கள் என்ற முகத்திலறையும் நிஜம் நேரடியாக சொல்லப்படாமல் பல்வேறு சம்பவங்களில் மூலம் வாசகனை அடைகிறது.

இக்கதையில் வரும் அப்பா வேறு யாருமல்ல என் அப்பாதான். இதில் வரும் அம்மாவிற்கும் என் அம்மாவிற்கும் ஒரே வேறுபாடுதான். அவள் வயல்வேலை செய்பவள், என் அம்மா பீடி சுற்றுபவள். என்று தன் கணவர் வீட்டுக்கு வருவார் என்று தெரியாத அப்பெண்ணின் உலகம் தான் என் அம்மாவின் உலகமும். கதையில் கதவை ஒருவன் பெயர்த்து எடுத்துச் சென்றுவிடுகிறான், ஆனால் எங்கள் வீடே இடிந்தது. அச்சமயத்தில் கணவன் என்று வருவான் என்று தெரியாத பெண்ணின் மனம் எவ்வாறெல்லாம் பயந்திருக்கும் என்ற அனுபவத்தை இக்கதை நேரடியாக அளிக்கிறது.

சிறிது வருடங்கள் கழித்து, பொருளாதாரத்தில் மேம்பட்ட பின்பு வீட்டை ஒட்டிய நிலத்தையும் வாங்கி பழைய வீட்டை இடித்துக் கட்டினோம். அதீத எடையுள்ள தேக்கினால் ஆன எங்கள் வீட்டின் கதவை மறு சீரமைப்பு செய்து குறைந்தபட்ச எடையுள்ள கதவாக மாற்றி ஒரு அறைக்கு பொருத்தினார்கள். இப்போதும் ஊருக்குச் செல்லும் நாட்களில் அக்கதவை காணும்போது மனம் தானாகவே பழைய பெருங்கதவை நினைத்து ஏங்கத்தான் செய்கிறது. இக்கதை படித்தவுடன் சுந்தர ராமசாமி உடனே இக்கதையை எழுதிய கி.ராவை பாராட்டவேண்டும் என்று எண்ணி தந்தி அடித்து தன் பாராட்டைத் தெரிவித்தாராம். இன்றும் அப்படியே தந்தி அடித்து கி.ராவை பாராட்ட வேண்டும் என்று தோன்றினாலும், அவரைப் பாராட்ட எந்த வார்த்தையை தான் தேர்ந்தெடுப்பது?

சுடச் சுட விமர்சனம்

இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட இந்நாட்களில் அதில் வலைப்பூக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. தணிக்கை கிடையாது என்பதால் பதிவர் தன் மனதில் என்னவெல்லாம் நினைக்கிறாரோ அனைத்தையுமே பதிவிட்டுவிட முடியும். நல்ல விஷயம் தான். ஆனால் ஃபாஸ்ட் ஃபுட் காலத்தில் வாழ்வதால் இணையத்தையும் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் வடிவமாகவே பயன்படுத்தும் பழக்கம் வந்துவிட்டதோ என்று எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடிவதில்லை. ஒரு படம் வெளிவந்தால் மறுநாளே விமர்சனம் வந்துவிடுகிறது. ஒரு நாவல் வெளிவந்தால் இரண்டொரு நாட்களில் விமர்சனம் வந்துவிடுகிறது (அல்லது ஏதோ ஒரு நாவலைப் படித்துவிட்டு மிக எளிதாக சூடான விமர்சனத்தினை உடனே தயாரித்துவிடுகிறார்கள்). இதில் மிகப் பெரிய தவறுகள் இருப்பதாக நான் கருதவில்லை; ஆனால் அந்த படைப்பாளிக்கு நாம் கொடுக்கும் கவுரவம் இதன் மூலம் மிகவும் குறைகிறது என்பதே என் கருத்து.

எத்தகைய படைப்பும் வாசகனுக்கு எந்தவிதமான தாக்கத்தை அளித்தது என்பது மிகவும் முக்கியம். அப்படைப்பு அளிக்கும் நுட்பமான விஷயங்களையும் அவதானிக்கும் தேர்ந்த வாசிப்பை விமர்சகன் கொண்டிருக்கவேண்டும் என்பதும் மிக அவசியம். விமர்சனம் என்பது படைப்பை சுருங்கச் சொல்லுவது அல்ல, அப்படைப்பு அளித்த அனுபவங்களை சார்பின்றி பகிர்ந்து கொள்ளுவது மட்டுமே. பல நாட்களாக தம் மனதைப் பாதித்த விஷயங்களை படைப்புகளாக படைப்பாளி வாசகர் முன்பு வைக்கிறார். அதை வாசிக்கும் விமர்சகர் அது அளிக்கும் உணர்வுகளை கொஞ்ச நாட்களுக்காவது அனுபவிக்கவேண்டாமா, கலைத் தன்மையை உணர அந்த அனுபவம் மிகவும் உதவும் என்பதை உணர வேண்டாமா. எனின் மட்டுமே நல்ல விமர்சனம் உதயமாகும் என்றே நினைக்கிறேன்.

அந்த அனுபவத்திற்குப் பின் மீள்வாசிப்பும் விமர்சனம் எழுதுவதற்கு அவசியமானதாகும். விமர்சனம் மூலம் எந்த படைப்பும் கலைத் தன்மையை அடைவதில்லை, போலவே எந்த கிளாசிக்கும் வீழ்த்தப்படுவதும் இல்லை. காலம்தான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. ஆனாலும் எந்தவொரு படைப்பையும் பல்வேறு முனைகளிலிருந்து படிவேறு ரசனைகொண்ட வாசகர்கள் விவாதிக்க வேண்டும், விவாதம் வெற்று அரட்டையாகவோ தத்தம் புத்திசாலித்தனத்தை நிரூபிபதாகவோ இல்லாமல் ஆழ்ந்த அனுபவமாக இருப்பின் மிகவும் நல்லது. பல்வகையான விவாதங்கள் கூடிவரும் போது ஒரு பிம்பத்தை படைப்பு அடைகிறது அதுவே விமர்சனத்தை வாசிக்கும் வாசகன் பெறவேண்டியது. சுடச்சுட விவாதிக்கும் போது மேம்போக்கான விமர்சனங்களே எழுத்தில் தங்குகின்றன.

சரி, ஒரு படமோ அல்லது இலக்கிய படைப்போ வெளியாகி-படித்து அல்லது பார்த்து-குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது கழிந்து விட்டால் விமர்சித்து என்ன பயன் என்று எண்ணலாம். உண்மையில் இதனால் வீணாவது ஒன்றுமே இல்லை. படைப்பை முழுமையாக உள்வாங்காமல் உடனடியாக விமர்சிப்பதில்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன. வேண்டுமானால் தான் படித்த படைப்போ அல்லது பார்த்த படமோ நல்ல அல்லது மோசமான அனுபவத்தை தந்தது என்ற குறிப்பை மட்டும் பதிவிடலாம்.

இன்றைய தேதிக்கு தொலைத்தொடர்பு முழுமையும் ஒரே இடத்தில் தேங்கிவிட்டதால், அனைவருமே தங்கள் கருத்துக்களை பதிவிடுதல் மிகவும் அவசியம். எந்திரன் போன்ற படங்கள் தொடர்ந்த விளம்பரப் "படுத்தல்கள்" மூலம் சிறந்த படைப்பாக மக்கள் மத்தியில் நிறுவப்பட்டுவரும் இந்நாட்களில் உண்மை அதுவல்ல என்று எதிர்கால சந்ததியினருக்கு அறிவிக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. தமிழறிஞர்கள் தம் படைப்புகள் மூலமன்றி அதிகாரத்தின் மூலம் அதிகமாக தம்மை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதையும் பதிவிடவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்பதும் உண்மையே.

எனவே விமர்சனம் உடனடியாக ஆழமின்றி அளிக்கப்படுவதை விட, நிதானமாக நிதர்சனமாகப் பதிவிடப்படலாம். தீராத வாசிப்பு மற்றும் தொடர்ந்த கருத்துப் பகிர்தல் மூலம் விரைவாகவே படைப்பை உள்வாங்கும் திறனை அனைவருமே பெறலாம். அன்று மட்டுமே உண்மையான படைப்பாளிக்கு தேர்ந்த விவாதத்தை மரியாதையாக அளிக்கமுடியும். இல்லையேல் அனைத்துமே வீண் என்பதே உண்மை

இந்திய அமெரிக்க மருத்துவம்- சில ஒப்பீடுகள்

படித்தது இளங்கலை கணிதம் என்றாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக  Healthcare BPO-ல் வேலை செய்துவருவதால், கணிதத்துக்கும் எனக்குமான தொடர்பு முற்றிலும் அறுந்துவிட்டது என்றே கொள்ளலாம். உயிரியல் படிக்கவில்லையென்றாலும், மருத்துவம் சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்வது மனநிறைவான விஷயம்தான். நம் உடலே பூமியை விட புதிர் நிறைந்தது. தம் உடலை கூர்ந்து நோக்கும் ஒருவனால் இயற்கையின் மகத்துவத்தை முழுமையாய் உணர முடியும். ஆகவே அனைவருமே தத்தம் உடலைப் பற்றியும் உடலைப் பாதுகாக்கும் மருத்துவம் பற்றியும் பெருமளவில் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியமானது. வியப்பூட்டும் இப்போதைய மருத்துவத்துறையை நாமும் அமெரிக்கர்களும் எவ்வாறு கையாளுகிறோம், மனிதததுவததை மருத்துவத்தில் கடைபிடிப்பதில் இருநாடுகளுக்கிடையேயான வேறுபாடுகள் என்னென்ன, என்பது பற்றி சிறிதேனும் சிந்திப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

தத்தம் உடலை பற்றிய விழிப்புணர்வு அனைத்து மனிதர்களுக்குமே இருக்கவேண்டிய ஒன்றாகும். இந்த விழிப்புணர்வு குழந்தைப்பருவம் முதற்கொண்டே படிப்படியாக அமெரிக்கர்களுக்கு அளிக்கப்படுகிறது. பள்ளிகளும் அவர்களது வாழ்க்கை முறைமைகளும் இதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. வாழ்க்கை கல்வியை ஏட்டோடு நிறுத்திவிடாமல் செய்முறையாக அளிப்பதற்கே அங்குள்ள கல்விக்கூடங்கள் முன்னுரிமை அளிக்கின்றன. இங்கே நாம் உடற்கல்வி படிப்பை செக்ஸ் கல்வி என்று தவறாக புரிந்துகொண்டு அதை பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுத் தருவதா வேண்டாமா என்று குழம்பிக்கொண்டு இருக்கிறோம். (செக்ஸ் கல்வி என்பதே கூட தவறான வார்த்தை அல்ல என்பதே என் புரிதல் என்பது வேறு விஷயம்).

நம்மிடையே பலருக்கும் நம் உடலின் பல பாகங்களின் பெயர்களோ அல்லது அப்பாகங்கள் என்னென்ன வேலைகள் செய்கின்றன என்றோ தெரிவதில்லை. நம் ஏட்டுக்கல்வி அது பற்றிய புரிதலை நமக்கு அளிக்கவில்லை என்பது வேதனையான விஷயம்தான். இந்நிலை அங்கு இல்லை. நம் உடலைத் தாக்குவதில் நுண்ணிய கிருமிகளின் பங்கு என்ன, அவற்றின் தாக்குதல்களிலிருந்து நம் உடலை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற விளிப்புணர்வு அங்கு மிகவும் அதிகம். வாழ்க்கைகல்வி என்ற பிரிவில் சுத்தம் என்ற சொல் முக்கிய பங்காற்றுகிறது. தம் உடலை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்வது என்று குழந்தைகளுக்கு கூட தெளிவாக கற்பிக்கப்படுகிறது. மருத்தவம் சம்பந்தமான குறியீட்டு சொற்கள் வெளியில் சகஜமாக பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், வாந்தி, பேதி போன்றவை நோய்கள் அல்ல, ஏதோவொரு வரப்போகும் நோய்க்கு அறிகுறி (Symptoms) என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். உடலில் ஏதேனும் நோய்க்கான அறிகுறி தென்பட்டால் என்னென்ன முதலுதவிகள் செய்யப்படவேண்டும் என்பதை குழந்தைகள் கூட அறிந்து வைத்திருக்கின்றன. என்னென்ன மருந்துகள் உட்கொள்ளப்படவேண்டும் என்பது ஏறத்தாழ அங்கு அனைவருமே தெரிந்துவைத்திருக்கும் விஷயமாகும்.

அமெரிக்காவில் அனைத்துமே Insurance மயம்தான். அனைவருக்குமே மருத்துவ காப்பீடு என்பது அமெரிக்க நியதியாகும். அதன்படி, பிறக்கும் எந்த குழந்தையையுமே மருத்துவக் காப்பீடு செய்யாமல் மருத்துவமனையை விட்டு வெளியே கூட கொண்டுவரமுடியாது. அனைவருமே மருத்துவ காப்பீட்டுக்கு பணம் செலுத்த வேண்டும் என்பது அங்கே கண்டிப்பான விதிமுறைகளில் ஒன்றாகும். அதன்பின் குழந்தையின் மரணம் வரை அதன் மருத்துவம் சம்பத்தப் பட்ட அனைத்து விஷயங்களுக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனமே பொறுப்பு. பணம் அதிகமாக புழங்கும் முக்கியமான துறைகளில் மருத்துவம் அமெரிக்காவில் முக்கிய பங்கை வகிக்கிறது.

மக்களிடமிருந்து மருத்துவத்திற்காக நேரடியாக ஒரு பைசா கூட வசூலிக்கப்படுவதில்லை; அனைத்தையுமே ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களே கவனித்துக்கொள்கின்றன. ஒருவர் எவ்வகையான காப்பிடைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதும் மிகவும் முக்கியம். ஒருசில நோய்களுக்கான காப்பீடுகள் சரிவர எடுத்திருக்கப்படவில்லையெனின் தயவுதாட்சன்யமே இல்லாமல் மருத்துவர் மருத்துவம் செய்யாமல் அடுத்த நோயாளியை கவனிக்க சென்றுவிடுவார் என்பதும் இங்கே கவனிக்கப்படவேண்டியது. ஆனால் இவ்வாறு ஆவதின் சதவீதம் மிகவும் குறைவுதான். இங்கே நம்மூரில் எடுக்கப்படும் எந்த பாலிசியிலும் தில்லாலங்கடிகள் அவசியம் இருக்கும். அதையும் மீறி காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பணத்தை பெறுவதற்குள் நாம் பட வேண்டிய கஷ்டங்களும் அதிகம், இதில் எனக்கு நேரடியாகவே அனுபவம் உண்டு.

தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகளே அங்கு உயர்தரமான மருத்துவத்தை மக்களுக்கு அளிக்கின்றன. சுத்தமானதும் மற்றும் தரமானதுமான மருந்துகளுக்காக அரசு எடுக்கும் முயற்சிகள் அளப்பரியது. மருத்துவத்திற்காக வரும் நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிக்கவேண்டியது மருத்துவமனைகளின் மிக முக்கியமான பொறுப்பாகும். இந்தவிஷயத்தில் அமெரிக்கர்கள் தவறுவதேயில்லை. நோயின் அனைத்து தன்மைகளும் நோயாளிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மிக தெளிவாக எழுத்துவடிவமாகவே (Medical Document) அளிக்கப்படுகிறது. மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்த பின்பு தனது அவதானிப்புகளை ஒலி வடிவமாக சேகரித்து மருத்துவ பிரதியெடுக்கும் நிறுவனங்களுக்கு அனுப்புகிறார். ஒலி வடிவத்தில் மருத்துவர் என்ன பேசியிருக்கிறாரோ அதை அப்படியே தட்டச்சு செய்து மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திற்கும் அதே மருத்துவருக்கும் அந்த நிறுவனங்கள் அனுப்புகின்றன. பொதுவாக அந்த வேலை இந்தியாவிற்கே வருகிறது. காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைத்த தகவல் வடிவத்தை (Medical Reports) Medical Coding நிறுவனங்களுக்கு அனுப்புகின்றன (தற்பொழுது நான் வேலை செய்து வருவது Medical Coding நிறுவனத்தில் தான்). ஒவ்வோரு நோய்க்கும் ஒவ்வொரு எண்களை குறியீடுகளாக பயன்படுத்துகிறார்கள்.




உதாரணமாக நோயாளி உயர் ரத்த அழுத்ததிற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தால், அதற்கான குறியீட்டு எண் 401.9 என்பதாகும். 401.9 என்ற குறியீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட பண மதிப்பு உண்டு. ஒருவேளை 401.9 என்பதற்கு 5$ மதிப்பு என்று வைத்துக்கொண்டால், 5$ மருத்துவரின் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளப்படும். இதுவே ஒரு மருத்துவர் தனது சம்பளத்தை பெறும் முறையாகும். இவ்வாறாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான நோய்களுக்கு குறியீட்டு எண்களை பயன்படுத்துகிறார்கள். நோய்களுக்கு ஆங்கிலத்திலேயே பெயர் வைக்கிறார்கள். தொடர்ந்து அச்சொற்களை புழங்குவதின் மூலம் மக்களும் எளிமையாக அதை புரிந்துகொள்கின்றனர். நாம் எத்தனை நோய்களை தமிழிலேயே அழைக்கிறோம் என்று சிந்தனை செய்தால் சோர்வே மிஞ்சும். நாம் தமிழை வளர்ப்பவர், காப்பாற்றுபவர் என்று அழைக்கப்பட விரும்புகிறோம், ஆனால் அதற்காக உழைப்பை சிந்துவதில்லை. அதைவிட கொடுமை பெரும் தமிழ் உளைப்பாளிகளை மரியாதை செய்வதில்லை. (ஒரு மூத்த அரசியல்வாதியின் பிறந்தநாள் வாழ்த்தாக நம் முதலமைச்சர் சொல்கிறார், பிறந்தநாள் கொண்டாடும் தம் நண்பர் தமிழின் மணிமகுடம் என்று. அந்த நபர் தமிழுக்கு என்ன செய்தார் என்று யோசித்தால்...யோசிக்க வேண்டாம் என்பதே என் பரிந்துரை). ஒருவனுடய தாய் மொழியை வெறுமனே அவனுடைய உணர்ச்சியைத் தூண்டிவிட மட்டுமே பயன்படுத்துபவர்கள் அறிஞர்களாக போற்றப்படும் விந்தை தமிழில் சாதாரணம்.

வழிமுறைகள் மிகவும் எளிமையானது போல தோன்றினாலும், மருத்துவர்கள் இதிலும் ஊழல் செய்ய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே அதைத் தடுப்பதற்கு கடுமையான சட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அனைத்து விஷயங்களும் வெளிப்படையாக இருப்பதால், தம் நோயின் தீவிரம் நோயாளிக்கு தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. பொய்யான மருத்துவம் செய்து நோயாளிகளிடம் மருத்துவமனைகள் ஒரு பைசா கூட வசூலிக்க முடியாது. ஒருவேளை தவறான அவதானிப்புகளை ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களுக்கு மருத்துவர் அளித்து பணம் வசூலிக்க நினைத்தால், ஆயுள் முழுவதையும் அவர் சிறையிலே கழிக்கவேண்டிய பாக்கியத்தை பெற நேரலாம். இத்தகைய சில விதிமுறைகளால் மிகப்பெரிய நன்மைகள் நோயாளிகளுக்கு இருக்கின்றன. தம் உடலில் எந்த பாகமும் அறுவை சிகிச்சை என்ற முறையில் திருடுபோக வாய்ப்பே இல்லை. தரமான சிகிச்சை கிடைக்கிறது. அதிக பணம் வசூலிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. மருத்துவரின் ஒவ்வொரு செயல்முறையும் எழுத்து வடிவில் நோயாளிக்கும் கிடைத்துவிடுவதால், தன் உடலைப் பற்றிய புரிதல் நோயாளிக்கு கிடைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவமனை பற்றிய பயம் நோயாளிக்கு அறவே இல்லாமல் போகிறது.

அனைத்து விஷயங்களையும் நாம் வெளிப்படையாக செய்யும் வழக்கம் இருந்தால், மருத்துவத்துறையில் மட்டுமல்ல இன்னும் பெருவாரியான பல துறைகளிலும் முன்னேற்றம் மிக எளிதாக சாத்தியம்தான். மருத்துவம் சம்பந்தமான நமது குறைபாடுகள் என்னென்ன?

1. சுத்தம் மற்றும் உடல் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு.

2. அரசு மருத்துவமனைகளின் நம்பமுடியாத அக்கறையின்மை. நான்கு அரசு மருத்துவமனைகளுக்கு ஒருவேளை யாரேனும் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், நம் சமூக நோயின் வீரியத்தை உணரமுடியும்.

3. மருத்துவர்களின் பணத்தாசை. இதற்கு நிரந்தர தீர்வு வழங்க அரசு இதுவரை எந்த திட்டமும் உருப்படியாக தீட்டவில்லை, அல்லது செயல்படுத்தவில்லை.

இதற்கு தீர்வுதான் என்ன?

1. சுகாதார மையங்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

2. மருத்துவ காப்பீட்டை அவசியமானதாக மாற்றவேண்டும்.

3. அதிகாரம் ஒரு இடத்தில் குவியாமல் வட்டாரமயமாக்கப்பட வேண்டும். இதன்மூலம் அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் வட்டாரத்திற்குள்ளேயே அதை தீர்த்துக் கொள்ள முடியும்.

4. அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவை ஒழுங்காக செயல்படுகின்றனவா என்று தீவிரமாக கவனிக்கப்படவேண்டும்.

5. மருத்துவர்கள் நோயாளிகளை கனிவுடன் நடத்துகிறார்களா என்று அறியப்பட வேண்டும் (அரசின் ஒவ்வொரு துறையிலுமே இது தேவைப்படுகிறது).

எனது சித்தப்பாவிற்கு சில வருடங்களுக்கு முன்பு தண்டுவடத்தில் வலி ஏற்பட்டது. Scan எடுப்பதற்காக ராயப்பேட்டை ESI மருத்துவமனைக்கு சென்றோம். நோயாளிகள் நோயினால் மட்டுமல்ல மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களால் கூட அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்பதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீழ் வடியும் கையுடன் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை எவ்வித சலனமும் இல்லாமல் மிக எளிதாக திட்டியபடியே கடந்து சென்ற மருத்துவரை அங்கு நான் கண்டேன். சுத்தமில்லை, எங்கெங்கு நோக்கினும் மருந்து நாற்றம், அளவுக்கதிகமான கூட்டம். இத்தகைய சூழலில் பணிபுரியும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மனம் மறத்தவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அந்த சூழல் கொடுக்கும் அருவறுப்பே வெளிநாடுகளை நோக்கி நம் மருத்துவர்களை படையெடுக்கச் செய்கிறதோ என்று தோன்றியது. இச்சூழலிலிருந்து அவர்களுக்கும்தான் விடுதலை தேவை. இதனால் அரசு மருத்துவமனைகள் தரமானதாகவும், பரவலாகவும் அதேவேளையில் எண்ணிக்கையில் அதிகமாகவும் ஆக்கப்படவேண்டியது அவசியமாகிறது.