Sunday, January 2, 2011

கி.ராஜநாராயணனின் கதவு

எங்கள் வீடு கட்டப்பட்டு குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டுகளாவது இருக்கும். வீடு என்று சொன்னால் கொஞ்சம் ஓவராக இருக்கும், ஒரே ஒரு அறை, அதை இரண்டாக பிரித்து சின்னஞ் சிறிய சமயலறை. வீட்டின் நீள அகலத்தை நான் அளவிட்டது இல்லை, வேண்டுமானால் இவ்வாறு சொல்லலாம். அதாவது, 30 மூட்டை நெல்லை அடுக்கிவைத்துவிட்டால், அனைவருமே வெளியேதான் படுத்து உறங்கவேண்டும். நானும் தம்பியும் அடுக்கப்பட்ட மூட்டைகளின் இடைவெளிகளில் ஏதேனும் ஒன்றை உறங்கப் பயன்படுத்திக் கொள்வோம். அரிப்பு தாங்கமுடியாது, ஆனால் எங்களுக்கென்று தனிப்பட்ட சுகம் அதில் கிடைத்தது. நெல் இல்லாத நாட்களில் அந்த ஒற்றை அறை மிகவும் விஸ்தாரமானதாகத் தோன்றும்.

வீடுகட்ட பயன்படுத்தப்பட்ட மரச் சாமான்கள் அனைத்துமே தேக்கால் ஆனவை. மாடி மட்டும் முன்னால் நீண்டபடி இருக்கும். அதன் நேர் கீழே அறை இல்லாமல் வெறும் முற்றம் மட்டுமே இருந்தது. எங்கள் வீட்டின் கதவு மிகவும் தடிமனானது. சாதாரணமாக அதைப் பூட்ட இயலாது. வேகமாக இழுத்து சடாரேன்று சாத்தவேண்டும். சுவர்கள் ஒவ்வொன்றும் அதிக அகலமாக இருக்கும். மேற்சுவர்களையும் அவ்வாறே அமைத்திருந்தார்கள். எங்கள் வீட்டைக் கட்ட பயன்படுத்திய செங்கற்களையும், தேக்குமரப் பலகைகளையும் வைத்து அதைப் போல் இரண்டு மடங்கு பெரிதான வீட்டைக் கட்டி முடித்துவிடலாம். இக்காலத்தில் வழக்கொழிந்து போன பல பொருட்கள் எங்கள் வீட்டில் இருந்தன. வெங்கலக் கின்னம், வெங்கல கும்பா, செப்பு (நான் பணம் இதில்தான் சேமித்து வைப்பேன்), மற்றும் பல.



பீடி சுற்றுதலே எங்க ஊர் பெண்களின் முக்கியமான தொழில் இன்றுவரையிலும். அப்போதைய நாட்களில் குழுவாக உட்கார்ந்து பீடி சுற்றுவார்கள். ஞாயிறு மட்டுமே விடுமுறை. அப்படியொரு விடுமுறை நாளில் என் அம்மாவுடன் பக்கத்து வீட்டுப் பெண்கள் எங்கள் வீட்டு முற்றத்தில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். நான் எனக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட புது மிதிவண்டியை துடைத்துக் கொண்டிருந்தேன். அரட்டை ரொம்பநேரம் நடந்துகொண்டிருந்தது. எப்போது எல்லோரும் கலைந்து சென்றார்களோ தெரியாது, நான் துடைத்து முடித்த என் மிதிவண்டியை, என் வீட்டை ஒட்டிய எங்களுக்குச் சொந்தமான சாவடியில் ஏற்றிவிட்டுக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் பூமியதிரும் சத்ததுடன் வீட்டின் முன்மாடி இடிந்து வீட்டின் முற்றத்தில் விழுந்தது. மாடி இடிந்துவிழுந்த சத்தம் கேட்டு அதிர்ந்த என் அம்மா பக்கத்து வீட்டிலிருந்து என் பேரை உரக்க சொல்லி அலறியபடியே வேகமாக ஓடிவந்தாள். எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்தபின் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு அவள் விட்ட பெருமூச்சின் வெப்பம் என் வாள்நாளில் மறக்கவே முடியாத ஒன்று. அரை மணி நேரம் முன்னால் இடிந்து விழுந்திருந்தால், குறைந்தபட்சம் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கக்கூடும்.

கி. ராஜநாராயணின் கதவு அப்படியான ஒரு தருணத்தை விவரிக்கும் கதை. மிகவும் ஏழ்மையான வீடு. அம்மா வயல் வேலை பார்க்கும் கூலி, அப்பாவும் கூலிதான். வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்றவன் நான்கு மாதங்களாகியும் வீடு திரும்பவில்லை. ஒரு கைக்குழந்தை, பெரிய பெண், சின்ன பையன். அம்மா கூலி வேலைக்கு சென்றபின் கைக்குழந்தையை அக்காவும் தம்பியுமே பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கும், சுற்றியுள்ள வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் அவர்களுடைய வீட்டின் கதவு தான் விளையாட்டுப் பொருள். கதவை பேருந்தாக உருவகித்துக்கொண்டு தினமும் அதில் ஏறிவிளையாடுகிறார்கள். கிடைக்கும் அழகிய படங்களை அதில் ஒட்டி அழகு பார்க்கின்றனர். வீட்டுத் தீர்வை நெடுநாட்களாகக் கட்டப்படாததால் ஊரின் தலையாரி குழந்தைகள் மட்டுமே இருக்கும் சமயம் வந்து கதவை கழற்றி எடுத்துச் சென்றுவிடுகிறான். என்ன நடக்கிறது என்று புரியாத குழந்தைகள் அவன் பின்னாலே செல்கின்றனர்.


அம்மா வீட்டுக்கு வந்தபின் கதவில்லாததைக் கண்டு இடிந்து போகிறாள். அழுகையை அடக்க முற்பட்டு தோற்றுப்போய் வெடித்து அழுகிறாள். இப்போது வீட்டிற்கு கதவு இல்லாததால், யாருமற்ற சமயத்தில் பொங்கி வைத்திருந்த சோறை நாய் வந்து தின்றுவிட்டுப் போய்விடுகிறது. தெருவிலிருந்து எடுத்த்வந்த படத்தை எங்கு ஒட்டுவது என்று பையன் யோசித்தவாறே நாய் தின்று சிதறிய பருக்கைகளை பயன்படுத்தி சுவற்றில் ஒட்ட முற்படுகிறான், முடியவில்லை. சிறிது நாட்கள் கழித்து ஓரிடத்தில் அவர்களது கதவு இருப்பதைப் பார்த்து அக்காவிடம் சொல்கிறான். பதறியடித்துக் கொண்டு கதவைக் காண ஓடுகிறாள். கதவைக் கண்ட அவளது நெஞ்சம் விம்முகிறது. கறையான் அரித்திருந்த கதவின் பகுதியை சுத்தப்படுத்துகிறாள், பின்பு கதவோடு சாய்ந்து கொள்கிறாள் என்பதோடு கதை முடிகிறது.

நெஞ்சை உருக்கும் இக்கதை ஏகப்பட்ட உள் அர்த்தங்கள் கொண்டது. வருமானத்திற்கு வழியற்ற், அதே நேரத்தில் கடன் பட்ட ஏழைகளின் வாழ்வின் ஒரு சம்பவத்தை மிகத் துல்லியமாக விவரிக்கிறது. தகவல் தொடர்பற்ற அக்காலத்தில் வெளியூருக்கு சென்றுவிட்ட கணவனை எதிர் நோக்கும் பெண்ணின் அகவுலகம் கலைத்தன்மையுடன் கைகூடியிருக்கிறது இக்கதையில். சிறுவர்களில் விளையாட்டு உலகமும், வறுமையில் அவர்களது அபிலாஷைகளும் சிறுவர்களுக்கே உள்ள மனநிலையில் நின்று கதாசிரியரால் விவரிக்கப்படுவது இக்கதைக்கு மேலும் நம்பகத்தன்மையை அளிக்கிறது. எளியவர்களே வருத்தப்படுகிறார்கள் என்ற முகத்திலறையும் நிஜம் நேரடியாக சொல்லப்படாமல் பல்வேறு சம்பவங்களில் மூலம் வாசகனை அடைகிறது.

இக்கதையில் வரும் அப்பா வேறு யாருமல்ல என் அப்பாதான். இதில் வரும் அம்மாவிற்கும் என் அம்மாவிற்கும் ஒரே வேறுபாடுதான். அவள் வயல்வேலை செய்பவள், என் அம்மா பீடி சுற்றுபவள். என்று தன் கணவர் வீட்டுக்கு வருவார் என்று தெரியாத அப்பெண்ணின் உலகம் தான் என் அம்மாவின் உலகமும். கதையில் கதவை ஒருவன் பெயர்த்து எடுத்துச் சென்றுவிடுகிறான், ஆனால் எங்கள் வீடே இடிந்தது. அச்சமயத்தில் கணவன் என்று வருவான் என்று தெரியாத பெண்ணின் மனம் எவ்வாறெல்லாம் பயந்திருக்கும் என்ற அனுபவத்தை இக்கதை நேரடியாக அளிக்கிறது.

சிறிது வருடங்கள் கழித்து, பொருளாதாரத்தில் மேம்பட்ட பின்பு வீட்டை ஒட்டிய நிலத்தையும் வாங்கி பழைய வீட்டை இடித்துக் கட்டினோம். அதீத எடையுள்ள தேக்கினால் ஆன எங்கள் வீட்டின் கதவை மறு சீரமைப்பு செய்து குறைந்தபட்ச எடையுள்ள கதவாக மாற்றி ஒரு அறைக்கு பொருத்தினார்கள். இப்போதும் ஊருக்குச் செல்லும் நாட்களில் அக்கதவை காணும்போது மனம் தானாகவே பழைய பெருங்கதவை நினைத்து ஏங்கத்தான் செய்கிறது. இக்கதை படித்தவுடன் சுந்தர ராமசாமி உடனே இக்கதையை எழுதிய கி.ராவை பாராட்டவேண்டும் என்று எண்ணி தந்தி அடித்து தன் பாராட்டைத் தெரிவித்தாராம். இன்றும் அப்படியே தந்தி அடித்து கி.ராவை பாராட்ட வேண்டும் என்று தோன்றினாலும், அவரைப் பாராட்ட எந்த வார்த்தையை தான் தேர்ந்தெடுப்பது?

1 comment: