Wednesday, January 27, 2010

மாறுவேஷக்காரர்கள்

நேற்றைய குடியரசு தினவிழா பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் ஏராளமாக செய்தி தாள்களில் பிரசுரமாயின. குடியரசான பின்பு இந்தியா கொண்டாடிடும் 60-வது விழா இதுவாகும். எதில் முன்னேறி இருக்கோமோ இல்லையோ தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் (இல்லையெனில் தலைவர்கள் தாங்களே தங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்வதில்) மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பது மிகவும் பெருமைப்படும் படி உள்ளது. மெரினாவில் கூடிய மக்கள் கூட்டத்தை காணுகையில் சென்னைவாசிகளின் தேசபற்று வியப்பூட்டும் விதம் இருந்தது. கண்ணுக்கு தெரிபவை மட்டுமே காட்சி என்பதில் மக்களுக்கு உள்ள மயக்கம் வரவேற்க்கத்தக்கது.

தேசிய கொடியை சட்டையில் மாட்டுவதும், சல்யுட் அடிப்பதும், மெரினா போவதும், அங்கே தலைவர்களின் போலி கோசங்களை கொஞ்சம் கூட கேள்விக்கு உள்படுத்தாமல் தலையாட்டிவிட்டு அங்கே கொடுக்கப்படும் சாக்லேட்டுகளை சாப்பிடுவதும் இன்னும் பிறவும் மட்டுமே தேசப்பற்று என்று மக்களை மூளைச்சலவை செய்ததில் தலைவர்கள் சாதனை படைத்திருப்பது தமிழர்களை மிகவும் மகிழ்ச்சி படுத்தக்கூடிய விஷயங்களாகும்.

இன்றைய செய்திதாளில் தொண்டர்கள் "அவர்களது" தலைவர்களை போன்று வேஷங்களை தரித்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை செய்தியாக படத்துடன் போட்டிருந்தார்கள். பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது. அதை விட மிகப்பெரிய சந்தோசமான நிகழ்வு நான் பயணம் செய்த பேருந்தில் நடந்தது. விஷயம் இதுதான்; என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் கூட நெருடல் இல்லாமல் பொங்கி வந்த சிரிப்பை கண்களுக்குள் பதித்துக்கொண்டு மெல்ல என்னை நோக்கி திரும்பி "வேஷம் என்றே தெரியாத அளவுக்கு தத்ரூபமாக இருக்கு இல்ல" என்றார். கரிப்பு மிஞ்சிய புன்னைகையுடன் செய்தித்தாளை அவரிடமிருந்து வாங்கிகொண்டு என் நிறுத்தத்தில் இறங்கி கொண்டேன்.

Wednesday, January 6, 2010

ஞாநியும் திரிபுகளும்

சமீப காலங்களில் இணையம் உயிர்மை சம்பந்தப்பட்ட மூன்று நபர்களையும் அவர்களோடு இணைத்து பத்திரிக்கையாளர் ஞாநியையும் சேர்த்து வரும் செய்திகளில் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இதைப்பற்றிய சில எண்ணங்களை நாமும் வெளியிடலாம் என்று எண்ணியதன் விளைவே இந்த பதிவு.


ஞாநி பற்றிய பொதுவான கருத்துக்களாக இணையத்தில் கிடைப்பவை என்று பார்க்கும்போது என்னை பொறுத்தவரை, ஒன்றிரண்டைத்தவிர அனைத்துமே முழுதாக அவர் கூறும் கருத்துக்களை சிந்திக்காமல் எழுதப்படும் பதிவுகளே. ஞாநி பொதுவாக பொதுவெளியில் தன்னுடைய கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட தயங்குபவர் இல்லை. அவரது வார்த்தை பிரயோகம் முழுவதுமே அவரது மனதில் தனிக்கைசெய்யப்பட்ட பின்பே அவரால் வெளியிடப்படும்.

பெரும்பாலான வாசகர்கள் அவர் முற்றிலும் எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருப்பவர் என்றே தங்கள் பதிவுகளிலும், என் நண்பர்கள் பலர் என்னிடம் நேர்பேச்சிலும் கூறியிருக்கிறார்கள். நான்கு வருடமாக அவரை கூர்ந்து கவனித்துவரும் என்னால் (நான் அவரது கடந்த நான்கு வருட கட்டுரைகள் அனைத்தையுமே படித்ததன் காரணமாக), வாசகர்களின் அவர்மீதான இக்கருத்து முற்றிலும் தவறானது என்று அடித்துக்கூற முடியும்.


தமிழ் நாட்டை பொறுத்தவரை, அனைவருமே தங்கள் சிந்தனைக்கு ஏற்ப தங்கள் மனதில் குறைந்தபட்சம் ஒருவரையாவது தங்களது ஹீரோவாக, புனிதபசுக்களாக கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ரஜினி, கமல், இளையராஜா, கருணாநிதி, என்ற ஒரு நீண்ட வரிசை உண்டு. இலக்கிய நண்பர்களுக்கு பெரும்பாலும் புதுமைப்பித்தன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு என பலர் இருக்கலாம். இவர்களைப்பற்றி யாரேனும் ஒரு விஷயம் தவறாக சொல்லிவிட்டால், சொல்லப்பட்ட கருத்தை யாரும் பார்ப்பதில்லை. தன தலைவனை ஒருவன் குறை சொல்லிவிட்டான், அவன் நேர்மாறானவன் என்றே எண்ணுகின்றனர்


ஞாநிக்கு எவையுமே புனிதம் அல்ல, அனைத்துமே வெளிப்படையாகவும், விவாதத்திற்குள்ளகவுமே இருக்க வேண்டும். எவையுமே விமரிசனத்துக்கு
ப்பார்ற்பட்டவை என்று அவர் நினைப்பது இல்லை. எனவே அவரது கருத்துக்களுக்கும், விமரிசனங்களுக்கும் ஒரு பிரபலம் ஆளாகும்போதும், பிரபலத்தை சார்ந்த குழுக்கள் அவரது கருத்தை பார்க்காமல், அவர் எதிர்மரையானவர் என்று ஒரு சின்னத்தனமான வட்டத்துக்குள் அடைக்கத்தொடங்குகின்றனர்.

அவரது கருத்துக்களை சிந்தனை செய்து சரியா தவறா என்று விவாதிக்காத குழுக்களை பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால், அவரது கருத்துக்களை திரிப்பவர்களை நினைக்கும் போதுதான் மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. இதில் என்னால் சகிக்க முடியாத விஷயம் என்னவென்றால், அவரது கருத்துக்களை திரிப்பவர்கள் சாதாரண வாசகர்கள் இல்லை, வாயிலே நுழையாத பல எழுத்தாளர்களின் நுட்பமான இலக்கிய சிந்தனைகளையே வாசித்து உணர்ந்துகொள்ளும் அறிவுபெற்ற பெரும் படிப்பாளிகள் என்பதுதான்.


இங்கு எனக்கு ஒரு சந்தேகம் தோன்றுகிறது. ஞாநி சிக்கலான கருத்துக்கள் எதையுமே சொல்வதில்லை, சொன்னாலும் மிகவும் சுருக்கமாக, மிக மிக எளிய மொழியில், சின்ன சின்ன சொற்களில் எழுதுபவர். இதையே புரியாமல் திரிப்பவர்கள் பேரிலக்கியங்களை புரிந்து கொள்கிறார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது.


ஞாநியின் குறைகளாக நான் நினைப்பது, சிலமுறை அவர் சில கருத்துக்களை அவசர முன்முடிவுடன் வெளியிடுகிறார், அனால் அவற்றிற்கான காரணங்களை விரிவான விளக்கங்களுடன் எழுதுவதில்லை. இந்துத்துவத்தின் மீதான அவரது கோபம் ஒருபக்க பார்வையிலே அவரால் எழுதப்படுகிறது, மறுபக்கம் அவரால் தீர்க்கமாக நிராகரிக்கப்படுகிறது.


அவரது பலூன் நாடகத்தை அலையன்ஸ் பிரான்சே அரங்கில் சில நாட்களுக்கு முன்பாக நடத்தினார். சிறப்பான கரு கொண்ட அந்த நாடகத்தில், மோசமான குணம் கொண்ட பாத்திரங்கள் அனைவருமே இந்து மத அடையாளங்களுடன் இருந்தார்கள், ஆனால் நல்லவர்கள் அனைவருமே வேற்று மதத்தினராகவோ அல்லது மத மறுப்பை கொண்டவர்களாகவோ இருந்தனர். ஒருவர் நான் பறையன், நான் பறையன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். இது சாதி, மத மறுப்பை கொண்டிருப்பவர்களுக்கு கொஞ்சம் அசொவ்கரியமாகவே இருந்தது. மற்றபடி, நாடகத்தில் எனக்கு உவப்பற்ற விஷயங்கள் இருந்தாலும், தேர்ந்த நடிப்புடன், சிறப்பான கதை களத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.


ஞாநி எந்த விஷயத்தையும் அதன் புத்திசாலிதனத்துக்காக பாராட்டுவதில்லை; மாறாக அதில் நேர்மை இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறார். புத்திசாலித்தனமான அயோக்கியத்தை அவர் வெறுப்பதற்கு அளவே இல்லை. எனக்கு தெரிந்து கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், நேர்மைக்காக ஏற்றுக்கொள்ளப்படுவதும்; நேர்மையாகவும் எளிமையாகவும் இருப்பதற்கு கூட விமரிசிக்கப்படுவதும் எழுத்தாளர்களில் இவர் ஒருவரே.


உயிரோசையில் வெளிவந்த manushyaputthiranin கட்டுரையில் அவர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில், எஸ். ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு விழாவில் ஞாநியின் பேச்சுக்கு எதிராக, அவருக்கு கண்டனம் தெரிவிக்க சொல்லி நிறைய sms வந்ததாகவும், அவர் தன விருந்தினர் என்பதால் கண்டனம் தெரிவிக்கவில்லை, சபையை திசை திருப்ப விரும்பவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். குறுஞ்செய்திகள் அதிகம் வந்ததினாலும், சாரு அதை முற்றிலுமாக திரித்து இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாலும், தானே அந்த விழாவின் ஏற்பாளர் என்பதாலும், ஞாநியின் பேசுபற்றி ஒரு வரியேனும் சொல்லவேண்டிய கட்டாயம் manushya புத்திரனுக்கு இருக்கிறது, ஆனால் அதைப்பற்றி, அவர் வாயே திறக்கவில்லை. அனால் இன்று தனது பெருந்தன்மையாக இதை குறிப்பிடுகிறார். உண்மையில் அன்று ஞாநி பேசியதில் தவறே இல்லை, அவர் பேசியதின் மையப்புள்ளியை முற்றிலும் வேறான திசைக்கு கொண்டு சென்றவர் எஸ். ராமகிருஷ்ணன்தான். எஸ். ராமகிருஷ்ணன் பேச்சின் மைய புள்ளியையும், ஞாநியின் பேச்சின் மைய புள்ளியையும் இணைத்து பார்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

இதில் அதிகமும் மன அவஸ்தைக்கு உள்ளானவர் சாருதான்; என் போன்ற புதிதாக இலக்கியத்துக்குள் நுழையும் வாசகர்கள் சாருவையும் ஜெயமோகனையும் ஒரே நேரத்தில் படிக்க நேர்ந்தால் மேம்போக்கான, வெறும் பரபரப்பை மட்டும் விரும்பும் வாசகர்கள் மட்டுமே தங்குவார்கள் என்பதும், நாளடைவில் அவர்களும் ஒருவேளை அவர் அறிமுகப்படுத்தும் புத்தகங்களை படித்தால் மாறிவிடுவார்கள் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக சாரு நிறைய.

இதில் காமெடி என்னவென்றால் மநுஷ்யபுத்திரனின் கட்டுரையில், அவர் தான் ஊனத்தை குறையாக கருதவில்லை, அனால் அதை வைத்து இலக்கியத்தில் அரசியல் சிலர் பண்ணுவதுதான் வேதனை அளிக்கிறது என்று குறிப்பிடுகிறார். சாருவுக்கே இந்த அரசியலில் கேவலமான முதலிடத்தை தர முடியும். ஆனால் தன்னை பற்றிதான் ஒருவர் வேதனைப்படுகிறார் என்றே தெரியாமல் தன எதிரியை விமரிசிப்பதால் தன் வலை தளத்தில் போட்டிருக்கிறார்.
ஞாநி கருணாநிதியை விமரிசிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டிருக்கிறார் என்பது போன்ற தவறான் பிரசாரங்கள் இன்று தொடர்ந்து பரப்பபடுகிறது. ஒரு அரசியல் விமரிசகர் அரசியலை விமரிசிக்கும் போது அந்த சூழ்நிலையில் முதல்வராய் இருப்பவர் செய்யும் செயல்களையே பெரும்பாலும் விமரிசிக்கவேண்டிய கட்டாயமே இருக்கிறது. அது சமூகத்தில் ஏற்படும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி. அவர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது இவாறாக கருணாநிதியை விமரிசித்தால் குறை சொல்வதற்கு வழி இருக்கிறது.


ஞாநி ஜெயலலிதாவை விமரிசிப்பதில்லை; இதுவும் தவறான பிரசாரமே. ஜெயலலிதாவுக்கு அரசியல்வாதியாக கூட இருக்க தகுதியில்லை என்று எழுதியவர் அவர்.

Monday, January 4, 2010

புத்தகக் கண்காட்சி 2010

நேற்று புத்தக விழாவில் கூட்டம் அதிகமாகவே இருந்தது, பேசாமல் வேலைநாட்களிலேயே சென்றிருந்திருக்கலாம் என்றே தோன்றியது. இருந்தாலும் மக்கள் நெருக்கடிக்குள்ளே, அவர்கள் கலைத்துப்போட்ட பல புத்தகங்களிலிருந்து நமக்கு பிடித்தமான எழுத்தாளருடைய புத்தகங்களை கண்டெடுப்பதும் சுகமாகத்தான் இருக்கிறது. என் மனதில்பல புத்தகங்களுக்கான பட்டியல்கள் இருந்தாலும் என் பட்ஜெட் வெறும் 1000 ரூபாய்கள் மட்டுமே என்பதனால் முக்கியமான புத்தகங்களை வாங்குவதென்பதும், வாங்கமுடியாதவற்றை குறிப்பெடுத்துக்கொண்டு, பணம் சேர்ந்த பின்பு அப்பதிப்பாளர்களிடமே நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்திருந்தேன்.

பொதுவாக என் விருப்ப பதிப்பாளர்களாக உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு, அன்னம், விஜயா என பல இருந்தாலும் இந்த ஆண்டில் சாருநிவேதிதா அவர்களின் அக்கப்போர் காரணமாக உயிர்மையில் வாங்கக்கூடாது என முடிவெடுத்திருந்தேன். சாரு அதன் உரிமையாளர் இல்லையே என நினைக்கலாம், ஆனால் தன பதிப்பகம் வெளியிட்ட ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை, புத்தக வெளியீட்டு விழா மேடையிலே சாரு கிழித்து எரிந்ததை கண்டிக்காமல் மனுஷ்யபுத்திரன் சிரிதுக்கொண்டிருந்ததாக கேள்விப்பட்ட பொழுது துக்கமாக இருந்தது. மேலும், சாருவின் ஜால்ராக்களை ஜெயலலிதா போன்று மனுஷ்யபுத்திரன் சமீப காலங்களில் ரசிப்பதும் உயிர்மையை நிராகரிக்க வேண்டியதின் அவசியத்தை அதிகப்படுத்தியது.

ஞானி என் பிரியத்திற்குரிய பத்திரிக்கையாளர் என்பதால் முதலில் நான் தேடியது ஞானபானு பதிப்பகத்தைதான். நான் சென்ற சமயம் ஞானி அங்கு இல்லை. சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அவரது புதிய எழுத்து எதுவும் புத்தகமாகவில்லை. குமுதத்தில் அவரது கட்டுரைகளை படித்துவிடுவதால் புதிதாக வந்த தொகுப்பை நான் வாங்கவில்லை, சென்ற ஆண்டு வாங்கி என் நண்பருக்கு பரிசாக கொடுத்துவிட்டேன். வழக்கம்போல் இந்த ஆண்டும் தினசரி தேர்தலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்றதுக்கு ஒட்டு மட்டும் போட்டுவிட்டு கடந்து சென்றுவிட்டேன்.

இந்த ஆண்டு நான் மனதில் நினைத்திருந்த புத்தகங்கள், ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, ஜெயமோகனின் ரப்பர், சுந்தர ராமசாமி புத்தகங்களில் நான் படிக்காதவை அனைத்தும், நாஞ்சில் நாடனின் சூடிய பூக்கள் சூடற்க, நகுலனின் நினைவுப்பாதை, கோணங்கியின் மதினிமார்கள் கதை, மற்றும் அசோகமித்திரனின் சில புத்தகங்கள் போன்றவைகளாகும்.

கிழக்கு பதிப்பகத்திற்குள் நுழைந்த பின்பு திட்டம் தவிடுபொடியாகிவிட்டது. கண்ணில் பட்ட அசோகமித்திரனின் அனைத்து புத்தகங்களையும் வாங்கினேன், மேலும கார்டூனிஸ்ட் மதியின் அடடே முதல் பாகமும், வண்ணநிலவனின் ரெயினீஸ் அய்யர் தெரு நாவலும் வாங்கியதில் பட்ஜெட் 600 ரூபாயை தாண்டிவிட்டது. பின்பு நேராக காலச்சுவடு பத்திப்பக ஸ்டாலுக்கு சென்றேன். அங்கு ஒரு புத்தகம் வாங்கினால் அதைவிட குறைவான விலை கொண்ட மற்றொரு புத்தகம் இலவசம் என்ற அறிவிப்பினால் குஷியாகிவிட்டேன்

அங்கு, சுந்தர ராமசாமியின் ஆளுமைகளும் mathippeedukalum என்ற புத்தகத்தை வாங்கி, காலச்சுவடு கண்ணனிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டேன். சித்திர பாரதி, ஜீவா நினைவோடை, புதுமைப்பித்தன் மதிப்புரை, சி.சு. செல்லப்பா நினைவோடை, மற்றும் சில பழைய காலச்சுவடு இதழ்களையும் வாங்கினேன்.

ஞானி மற்றும் ஜெயமோகனின் எந்த புக்கையும் வாங்காமல் திரும்பியதும் மிகுந்த வருத்தத்தைஅளித்தது. ஜெயமோகனின் அனைத்து எழுத்துக்களையும் நெட்டில் படித்துவிடுவதால் நெட்டில் கிடைக்காத எழுத்தை மட்டும் வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன், முடியவில்லை. எஸ். ராமகிருஷ்ணன் பிடித்த எழுத்தாளர்கள் பட்டியலிலிருந்து விடை பெற்றுவிட்டதால் அவரது எந்த புத்தகத்தையும் வாங்கவில்லை. அவரது உறுபசி அளித்த மிகுந்த மனசோர்வும் ஒரு காரணம்.

மூன்று மாத காலங்களுக்கு இந்த புத்தகங்களே போதும் என்பதால் அடுத்த பட்டியலை பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு என் முதல் வாசிப்பை சுந்தர ராமசாமியிலிருந்து ஆரம்பிக்கிறேன்....