நேற்று புத்தக விழாவில் கூட்டம் அதிகமாகவே இருந்தது, பேசாமல் வேலைநாட்களிலேயே சென்றிருந்திருக்கலாம் என்றே தோன்றியது. இருந்தாலும் மக்கள் நெருக்கடிக்குள்ளே, அவர்கள் கலைத்துப்போட்ட பல புத்தகங்களிலிருந்து நமக்கு பிடித்தமான எழுத்தாளருடைய புத்தகங்களை கண்டெடுப்பதும் சுகமாகத்தான் இருக்கிறது. என் மனதில்பல புத்தகங்களுக்கான பட்டியல்கள் இருந்தாலும் என் பட்ஜெட் வெறும் 1000 ரூபாய்கள் மட்டுமே என்பதனால் முக்கியமான புத்தகங்களை வாங்குவதென்பதும், வாங்கமுடியாதவற்றை குறிப்பெடுத்துக்கொண்டு, பணம் சேர்ந்த பின்பு அப்பதிப்பாளர்களிடமே நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் முடிவெடுத்திருந்தேன்.
பொதுவாக என் விருப்ப பதிப்பாளர்களாக உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு, அன்னம், விஜயா என பல இருந்தாலும் இந்த ஆண்டில் சாருநிவேதிதா அவர்களின் அக்கப்போர் காரணமாக உயிர்மையில் வாங்கக்கூடாது என முடிவெடுத்திருந்தேன். சாரு அதன் உரிமையாளர் இல்லையே என நினைக்கலாம், ஆனால் தன பதிப்பகம் வெளியிட்ட ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை, புத்தக வெளியீட்டு விழா மேடையிலே சாரு கிழித்து எரிந்ததை கண்டிக்காமல் மனுஷ்யபுத்திரன் சிரிதுக்கொண்டிருந்ததாக கேள்விப்பட்ட பொழுது துக்கமாக இருந்தது. மேலும், சாருவின் ஜால்ராக்களை ஜெயலலிதா போன்று மனுஷ்யபுத்திரன் சமீப காலங்களில் ரசிப்பதும் உயிர்மையை நிராகரிக்க வேண்டியதின் அவசியத்தை அதிகப்படுத்தியது.
ஞானி என் பிரியத்திற்குரிய பத்திரிக்கையாளர் என்பதால் முதலில் நான் தேடியது ஞானபானு பதிப்பகத்தைதான். நான் சென்ற சமயம் ஞானி அங்கு இல்லை. சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அவரது புதிய எழுத்து எதுவும் புத்தகமாகவில்லை. குமுதத்தில் அவரது கட்டுரைகளை படித்துவிடுவதால் புதிதாக வந்த தொகுப்பை நான் வாங்கவில்லை, சென்ற ஆண்டு வாங்கி என் நண்பருக்கு பரிசாக கொடுத்துவிட்டேன். வழக்கம்போல் இந்த ஆண்டும் தினசரி தேர்தலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்றதுக்கு ஒட்டு மட்டும் போட்டுவிட்டு கடந்து சென்றுவிட்டேன்.
இந்த ஆண்டு நான் மனதில் நினைத்திருந்த புத்தகங்கள், ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, ஜெயமோகனின் ரப்பர், சுந்தர ராமசாமி புத்தகங்களில் நான் படிக்காதவை அனைத்தும், நாஞ்சில் நாடனின் சூடிய பூக்கள் சூடற்க, நகுலனின் நினைவுப்பாதை, கோணங்கியின் மதினிமார்கள் கதை, மற்றும் அசோகமித்திரனின் சில புத்தகங்கள் போன்றவைகளாகும்.
கிழக்கு பதிப்பகத்திற்குள் நுழைந்த பின்பு திட்டம் தவிடுபொடியாகிவிட்டது. கண்ணில் பட்ட அசோகமித்திரனின் அனைத்து புத்தகங்களையும் வாங்கினேன், மேலும கார்டூனிஸ்ட் மதியின் அடடே முதல் பாகமும், வண்ணநிலவனின் ரெயினீஸ் அய்யர் தெரு நாவலும் வாங்கியதில் பட்ஜெட் 600 ரூபாயை தாண்டிவிட்டது. பின்பு நேராக காலச்சுவடு பத்திப்பக ஸ்டாலுக்கு சென்றேன். அங்கு ஒரு புத்தகம் வாங்கினால் அதைவிட குறைவான விலை கொண்ட மற்றொரு புத்தகம் இலவசம் என்ற அறிவிப்பினால் குஷியாகிவிட்டேன்
அங்கு, சுந்தர ராமசாமியின் ஆளுமைகளும் mathippeedukalum என்ற புத்தகத்தை வாங்கி, காலச்சுவடு கண்ணனிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டேன். சித்திர பாரதி, ஜீவா நினைவோடை, புதுமைப்பித்தன் மதிப்புரை, சி.சு. செல்லப்பா நினைவோடை, மற்றும் சில பழைய காலச்சுவடு இதழ்களையும் வாங்கினேன்.
ஞானி மற்றும் ஜெயமோகனின் எந்த புக்கையும் வாங்காமல் திரும்பியதும் மிகுந்த வருத்தத்தைஅளித்தது. ஜெயமோகனின் அனைத்து எழுத்துக்களையும் நெட்டில் படித்துவிடுவதால் நெட்டில் கிடைக்காத எழுத்தை மட்டும் வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன், முடியவில்லை. எஸ். ராமகிருஷ்ணன் பிடித்த எழுத்தாளர்கள் பட்டியலிலிருந்து விடை பெற்றுவிட்டதால் அவரது எந்த புத்தகத்தையும் வாங்கவில்லை. அவரது உறுபசி அளித்த மிகுந்த மனசோர்வும் ஒரு காரணம்.
மூன்று மாத காலங்களுக்கு இந்த புத்தகங்களே போதும் என்பதால் அடுத்த பட்டியலை பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு என் முதல் வாசிப்பை சுந்தர ராமசாமியிலிருந்து ஆரம்பிக்கிறேன்....
No comments:
Post a Comment