Wednesday, January 27, 2010

மாறுவேஷக்காரர்கள்

நேற்றைய குடியரசு தினவிழா பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் ஏராளமாக செய்தி தாள்களில் பிரசுரமாயின. குடியரசான பின்பு இந்தியா கொண்டாடிடும் 60-வது விழா இதுவாகும். எதில் முன்னேறி இருக்கோமோ இல்லையோ தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் (இல்லையெனில் தலைவர்கள் தாங்களே தங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்வதில்) மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பது மிகவும் பெருமைப்படும் படி உள்ளது. மெரினாவில் கூடிய மக்கள் கூட்டத்தை காணுகையில் சென்னைவாசிகளின் தேசபற்று வியப்பூட்டும் விதம் இருந்தது. கண்ணுக்கு தெரிபவை மட்டுமே காட்சி என்பதில் மக்களுக்கு உள்ள மயக்கம் வரவேற்க்கத்தக்கது.

தேசிய கொடியை சட்டையில் மாட்டுவதும், சல்யுட் அடிப்பதும், மெரினா போவதும், அங்கே தலைவர்களின் போலி கோசங்களை கொஞ்சம் கூட கேள்விக்கு உள்படுத்தாமல் தலையாட்டிவிட்டு அங்கே கொடுக்கப்படும் சாக்லேட்டுகளை சாப்பிடுவதும் இன்னும் பிறவும் மட்டுமே தேசப்பற்று என்று மக்களை மூளைச்சலவை செய்ததில் தலைவர்கள் சாதனை படைத்திருப்பது தமிழர்களை மிகவும் மகிழ்ச்சி படுத்தக்கூடிய விஷயங்களாகும்.

இன்றைய செய்திதாளில் தொண்டர்கள் "அவர்களது" தலைவர்களை போன்று வேஷங்களை தரித்துக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை செய்தியாக படத்துடன் போட்டிருந்தார்கள். பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது. அதை விட மிகப்பெரிய சந்தோசமான நிகழ்வு நான் பயணம் செய்த பேருந்தில் நடந்தது. விஷயம் இதுதான்; என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு கொஞ்சம் கூட நெருடல் இல்லாமல் பொங்கி வந்த சிரிப்பை கண்களுக்குள் பதித்துக்கொண்டு மெல்ல என்னை நோக்கி திரும்பி "வேஷம் என்றே தெரியாத அளவுக்கு தத்ரூபமாக இருக்கு இல்ல" என்றார். கரிப்பு மிஞ்சிய புன்னைகையுடன் செய்தித்தாளை அவரிடமிருந்து வாங்கிகொண்டு என் நிறுத்தத்தில் இறங்கி கொண்டேன்.

2 comments:

  1. நிறைய படிக்கிறீங்க... உங்களது ஆசை நிச்சயம் நிறைவேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Dear Krishna, thank you for ur comment. I also your reader, regularly reading your articles... very good...

    ReplyDelete