Thursday, November 25, 2010

கேணி-மனோகர் தேவதாஸ்

முந்தைய நாளின் இரவு வேலையின் காரணமாக காலையில் கண்விழித்தபோது மணி 11யைக் கடந்து 12ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. "Volunteers needed urgently to clean Keni Garden" என்று பதிவர் நண்பர் கிருஷ்ணபிரபு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.  சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஞாநி வீட்டின் கேணி மிகவும் முக்கியமானதாகும்.  உற்சாகமாக புறப்படத் தயாரானேன்.  குளித்துமுடித்துவிட்டு வந்து பார்த்தால் கிருஷ்ணபிரபு மறுபடியும் தொலைபேசியில் அழைத்து அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விட்டார்கள்; மெதுவாகவே வா என்றார்.  மிகுந்த ஏமாற்றமாக போய்விட்டது; பின்பு மெதுவாக கிளம்பி 3:30 மணிவாக்கில் கேணியை அடைந்தேன்.  கேணி வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது.

 

நான், பிரபு, கேணி நண்பர்கள் இருவர், மற்றும் மைனா பட துணை நடிகர் என ஐவர் மட்டும் பேசிக்கொண்டிருந்தோம்.  கிருஷ்ணபிரபுவின் பேச்சு மிகவும் சுவாரசியமாக இருந்தது.  வீட்டின் உள்ளே மனோகர் தேவதாஸ் வரைந்த ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன, அனைவரும் கண்டிப்பாக காணவேண்டும், உள்ளே வாருங்கள் என்று ஞாநி அழைத்தார்.  இயற்கைகாட்சிகள், மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கோபுரங்கள், என பல்வேறு வகையான ஓவியங்கள் ப்ரேம் செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன.  அவற்றில் பெரும்பாலானவை கறுப்பு வெள்ளை ஓவியங்களேயாயினும் பார்வையாளனை கவர்ந்திளுக்கும் தன்மை கொண்டவை.  மிக மிக நுட்பமான அவ்வோவியங்களை அதீதமான கலைத்திறனும் மிகுந்த ஆர்வமும் இல்லாமல் ஓவியன் வரைவது சாத்தியமே இல்லை எனலாம்.  ஓவியத்தின் கோடுகளை-பெரிய கோடுகளை விட சிறியவை எண்ணிக்கையில் மிக அதிகம்-கூர்ந்து பார்த்தபடியே இருந்தேன், மனம் தானாகவே அவற்றை எண்ணிக்கொண்டிருந்தது.  ஏதோ ஒரு புள்ளியில் ஒருவிதமான அழுத்தம் பீடிக்க ஓவியங்களிலிருந்து பார்வையை விலக்கியபோது அது தந்த மனப்பதிவு அசாத்தியமானதாக இருந்தது.   அபாரமான ஓவியங்கள் அவை; எவ்வளவு உன்னிப்பாக கவனித்தாலும் ஓவியங்களை முழுமையாக உள்வாங்கவே முடியவில்லை; அதன் பிரும்மாண்டத்தை உள்வாங்குவது அத்தனை எளிதான விஷயமாகவும் இருக்கவில்லை.  மேலும் மனோகர் எழுதிய அனைத்து புத்தகங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.  அதன்பின் மீண்டும் கேணி வளாகத்தை அடைந்தோம்.  அழியாச்சுடர்கள் வலைப்பதிவர் ராம் வந்திருந்தார், நான் விரும்பி வாசிக்கும் வலைப்பதிவர் என்பதால் என்னுடைய வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தேன்.  வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.  கேணி ஆரம்பமானது.




இந்தமாதம் கேணி கூட்டத்தின் சிறப்பு விருந்தினர் மனோகர் தேவதாஸ் என்று அறிவிக்கப்பட்டபோது, எனக்குள் எவ்வித எதிபார்ப்பும் ஏற்படவில்லை.  ஊருக்குச் செல்லும் நாட்களைத் தவிர கேணி நாட்களில் சென்னையில் இருந்தால், கண்டிப்பாக கலந்து கொள்வது வழக்கம் என்பதால், வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேன்டாமே என்ற காரணத்தினாலேயே கலந்துகொண்டேன்.  சரியாக 4 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.  ஞாநியின் உரை வழக்கம்போலவே சுருக்கமானதாகவும் சுவாரசியமானதாகவும் இருந்தது.  ஞாநி மனோவை (மனோஹர் தேவதாஸ் இனி மனோ) வாசகர்களிடையே அறிமுகப்படுத்தி வைத்தார்.  அவரது பேச்சின் பொதுவான சாரம் கீழே:

முதலில் அடுத்தடுத்த மூன்று மாதஙளுக்குக் கேணியில் கலந்துகொள்ளப்போகும் ஆளுமைகளை அறிவித்தார்.  நான் (ஞாநி) சமீப காலஙளில் உடல் நிலை மற்றும் சமூக நிலை பற்றிய மிகுந்த மனச்சோர்வில் இருந்தேன்.  மனம் சொல்லுவதைக் கேட்கும் உடல் வாய்க்கவில்லையே என்ற வருத்தம் மிகுந்த மனச்சோர்வை அளித்தது.  நாம் எழுதுவதன் பயன் மற்றும் அதன் விழைவுகள் பற்றி மனம் அவ நம்பிக்கை கொண்டிருந்ததது.  மனோவை எனக்கு முப்பது வருடங்களாகத் தெரியும்.  மேலும் அவரது ஓவியஙளைத் தொடர்ந்து கவனித்து வருபவன் நான் என்றாலும் அவருடன் நெருங்கிப் பழகியதில்லை.  அவரது ஓவியங்கள் வெகுஜன இதழ்களில் அதிகமாக வருவதில்லை என்றாலும், சிறுபத்திரிக்கை உலகிலும், சென்னைக்கென்றே (ஒரு பத்திரிக்கை என்றால் எப்படி இருக்கவேன்டுமோ அப்படி) நடத்தப்பட்ட சென்னை வீக்லி போன்ற பத்திரிக்கைகளில் மிகவும் பிரபலம்.  இந்நிலையில்தான் மனோ பள்ளியொன்றில் கலந்துகொன்டு உரையாற்றுகிறார் என்று கேள்விப்பட்டேன்.  உடல்நிலை ஒத்துழைக்காவிட்டாலும் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் முடிவெடுத்தேன், கலந்து கொண்டேன்.  அன்று அவரது பேச்சு எனக்கு புது உத்வேகத்தை அளித்தது.  அப்போதே கேணிக்கு அவரை கண்டிப்பாக அழைக்கவேண்டும், வாசகர்களும் அந்த அனுபவத்தைப் பெறவேண்டும் என்று முடிவெடுத்தேன்.  இனி மனோ உங்களுடன் தொடர்ந்து பேசுவார் என்று முடித்துக்கொண்டார்.

மனோவிற்கு ஒரு கண்ணில் பார்வை கிடையாது.  மறுகண்ணில் பார்வை மங்கியிருந்தது.  லேசாக தலையை தூக்கி அண்ணாந்து பார்த்தவாறே பேசத்துவங்கினார்.  நமது சூழலில் எவ்வளவு அவலங்கள் நிறைந்திருந்தாலும் இந்தியா முன்னேறுகின்ற நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கு நல்லவர்கள் நிரம்ப சூழ்ந்திருப்பதே என்று நான் வெகுவாக நம்புகிறேன் என்று அவர் ஆரம்பித்தபோது, ஒரே தத்துவமாக பேசி போரடிக்கப்போகிறாரோ என கொஞ்சம் பயந்துதான் போனேன்.  மிக நுட்பமான நகைச்சுவை இழையோட, வெள்ளந்தியான, அழுக்கற்ற ஒரு வாழ்கையையே கேட்கப்போகிறோம் என என் மனம் அப்போது அறிந்திருக்கவில்லை.  நான் கலந்துகொண்ட கேணி கூட்டஙளிலேயே நாஞ்சில் நாடனின் பேச்சுதான் என்னை மிகவும் கவர்ந்தது.  தமிழின் சொற்பிரயோகம் பற்றிய அற்புதமான உரை அது.  அதற்கு நிகரான, ஆனால் ஓவியம் என்ற தளத்தில், முற்றிலும் மாறான அனுபவத்தை மனோ தன் பேச்சு மூலம் கேணி வாசகர்களுக்கு அளித்தார்.

மனோ அடிப்படையில் ஒரு வேதியியல் நிபுணர், ஆராய்ச்சியாளராக தொடர்ந்து 40 வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்.  கல்லூரியில் பயிலும்போது வேதியியல் பேராசிரியராவதே அவருக்கு லட்சியமாக இருந்தது என்றாலும் குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக முதுகலை படிக்காமல் வேலைக்கு செல்லும்படி ஆகிவிட்டது.  ஆஸ்பிடாஸ் பொருத்தப்பட்ட, வேதிப்பொருட்களின் நெடியடிக்கும் அறையில், வியர்வையில் குளித்தவாறே வேலை செய்வதை அவர் மனம் விரும்பாவிட்டாலும், கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கடுமையாக உழைக்கத்துவங்கினார்.  சிறிதுகாலத்தில் அவரது அண்ணன் நல்ல வேலையில் அமர்ந்ததால், குடும்பம் மெள்ள மெள்ள சீரான நிலைமையை அடைந்தது.  எனவே மனோ வேலையை விட்டுவிட்டு மேற்படிப்பு படிக்கவேன்டும் என்று விரும்பினார்.  அவர் வேலையை விட்டு நிற்பதை அவரது உயரதிகாரிகள் விரும்பவில்லை, அவர் தொடர்ந்து அங்கேயே வேலை செய்தால் அவரை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.  இந்த காலத்தைப் போன்று வெளிநாடு செல்வது அக்காலத்தில் அத்தனை எளிதானதாக இல்லை.  ஒருவர் வெளிநாடு சென்று திரும்பினார் என்று வைத்துக்கொள்வோம், அவர் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்போது, இவர் பாரின் ரிட்டன் என்ற சொற்பதம் கண்டிப்பாக இருக்கும்.  சொன்னபடியே வெளிநாடு அனுப்பிவைக்கப்பட்டார்.  கொஞ்ச நாட்களில் வெளிநாடுகளில் பயிற்சியை முடித்துவிட்டு தாயகம் திரும்பினார்.  ஓவியம் வரைவதிலிருந்த ஆர்வம் காரணமாக அதிக அளவில் ஓவியங்கள் வரையத்துவங்கினார்.

மனோவின் நண்பர் இவரது ஓவியஙள் பற்றி தனது உறவினரான "மஹிமாவிடம்" தினமும் பகிர்ந்து கொள்வார்.  பைன் ஆர்ட்ஸ் மாணவியான மஹிமாவுக்கு மை தொட்டு வரையப்பட்ட வாட்டர் கலர் ஓவியங்கள் மிகவும் பிடித்திருந்தன.  ஓவிய படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பதால் அவரால் மனோவின் ஓவியங்களின் நுட்பங்களை துல்லியமாக உணர முடிந்தது.  மனோவும் மஹிமா பற்றி தெரிந்துகொண்டபின் அவரை சந்திக்கவேண்டுமென்று விரும்பினார்.  அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவருக்கும் காதல் அரும்பியதால் இருவரும் தத்தம் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.  மனோவின் வீட்டில் எவ்வித பிரச்சனையும் இல்லை, ஆனால் மஹிமாவினால் அவ்வளவு எளிதில் வீட்டில் சம்மதம் பெற முடியவில்லை.  கடைசியில் மாப்பிள்ளை பாரின் ரிட்டன் என்ற ஒரே காரணத்திற்காக மஹிமாவின் பெற்றோர் சம்மதம் தந்தனர்.  திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால் மஹிமாவை அவரது வீட்டில் வைத்து தனிமையில் சந்தித்து பேசவும், சினிமா அல்லது கோயிலுக்கு அழைத்துச்செல்லவும், கடிதங்கள் எழுதவும் மனோவிற்கு அனுமதி கிடைத்தது.  தினமும் கடிதஙள் எழுதத்தொடங்கினார்.  அவற்றில் தவறாமல் ஓவியங்கள் வரைவார்.  கடிதங்கள் எழுத எழுத, ஓவியங்கள் வரைய வரைய, அவரது ஓவியங்களின் தரம் அதிகரித்துக்கொண்டே சென்றது.



ஓருநாள் மாலைவேளையில் மஹிமாவை சந்திக்க அவரது வீட்டிற்கு மனோ சென்றிருந்தார்.  மஹிமா இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் கொன்டவர்.  அந்த மாலை வேளையின் அழகை மாடியில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார்.  மஹிமா தனியே மாடியில் நிற்பதை மனோ அறிகிறார். அழகான இந்த வேளையில் காதலியை தனியே சந்தித்துப்பேச கிடைத்த இந்த வாய்ப்பு மனோவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.   மனோ மாடிக்கு செல்கிறார்.  அங்கே ஜப்பானிய உடையணிந்து கையில் தேநீர் கோப்பையுடன் வானத்தை ரசித்தபடி மஹிமா நின்றுகொண்டிருந்தார்.  அந்த உடையில் மஹிமா மனோவிற்கு ஒரு தேவதை போல் தெரிந்தார்.  அந்த உடை மஹிமாவிற்கு மிகவும் அழகாக  இருப்பதாக மனோ மஹிமாவிடம் சொல்கிறார்.  நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, வீடு திரும்புகையில் மஹிமாவிற்கு மனோ ஒரு முத்தத்தை பரிசாக அளிக்கிறார்.  வீட்டை அடைந்தவுடனேயே மீன்டும் மஹிமாவிற்கு கடிதம் எழுதுகிறார்.  காதல் ரசம் சொட்ட எழுதப்பட்ட அந்த கடிதத்தில் ஜப்பானிய உடை அணிந்த மஹிமாவின் ஓவியம் வரையப்பட்டிருந்தது.

மஹிமாவின் மாமாவிற்கு மனோவை கொஞமும் பிடிக்கவில்லை; மதுரையிலிருந்து வந்த ஒரு காட்டான் என்றார்.  மனோவிற்கும் அவரை கொஞ்சமும் பிடிக்காது, அவரை ஒரு தலைக்கணம் பிடித்தவர் என்றே நினைத்தார்.  மனோவை அவர் காட்டான் என்று அழைத்தது மனோவின் குடும்பத்தாரை மிகவும் கோபமடையச் செய்தது.  மனோவிற்கு தர்மசங்கடமான நிலையாகப் போய்விட்டது.  ஏனெனில், பதிலுக்கு இவர் ஏதாவது செய்தால் மஹிமாவின் குடும்பத்தினர் கோபம் கொள்ளலாம், ஒன்றுமே செய்யாவிட்டாலோ கல்யாணத்துக்கு முன்னமே பெண் வீட்டாருக்கு ஜால்ரா அடிக்கிறானே என்று இவரது வீட்டில் பேசுவார்கள்.  என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்திலிருந்த மனோ அன்று மீண்டும் மஹிமாவிற்கு கடிதம் எழுதினார், மேலும் அதில் ஒரு காட்டுவாசி ஜப்பானிய உடை அணிந்த தேவதை போன்ற பெண்ணை திருமணம் செய்து அழைத்துச் செல்வதுபோல் ஒரு ஓவியத்தையும் வரைந்து அனுப்பினார்.  சூசகமான இந்த பதிலை மஹிமாவுடன், அவரது மாமாவும் வெகுவாக ரசித்தார்.  அன்று முதல் அவரது மாமாவும் மனோவும் மிகவும் நெருக்கமானவர்களாக மாறிவிட்டனர்.  மஹிமாவும், கூர்மையான ஓவிய அறிவும், சமயோசிதமான நகைச்சுவையுணர்வும் கொண்ட மனோவை வெகுவாக ரசித்தார்.

திருமணமான சிறிது நாட்களில் மனோ மேற்படிப்பிற்காக மஹிமாவுடன் அமெரிக்கா சென்றார்.  மஹிமாவிற்கு அங்கே ஓர் ஓவிய கல்லூரியில் வேலை கிடைத்தது.  இருவரும் மிக மகிழ்ச்சியாக அமெரிக்க வாழ்வை கழித்தனர்.  மஹிமா மனோகர் வரைந்த ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்தினார்.  அங்கே அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.  அங்கே நடத்தப்படும் நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கும் ஓவியங்கள் வரையத்துவங்கினார்.  புதுமையான அவ்வகை ஓவியங்கள் அமெரிக்கர்களை வெகுவாக கவர்ந்தது.  அவரது படிப்பு முடிந்தபின்பு இருவரும் இந்தியா திரும்பினர்.  மனோ தம் வாழ்வை மதுரையில்தான் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார்.  அதன்படி இருவரும் மதுரைக்கு காரில் வந்துகொண்டிருந்த சமயத்தில்-அனாதையாக நின்றுகொண்டிருந்த கார் மீது ஒரு லாரி மோதி, அந்த கார் மனோவின் கார் மீது மோதியது.  மனோவிற்கு சிறிய காயங்களே ஏற்பட்டாலும், மஹிமா மிகவும் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.  அவரது கால்களும் தண்டுவடமும் செயலிழந்துவிட்டிருந்தன.

எதிர்பாராத இந்த கணத்தில் அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையே முற்றிலுமாக சிதைந்துவிட்டிருந்தது.  முழுக்க அதிலிருந்து மீளவும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவுமே நெடுநாட்களாகிவிட்டிருந்தன.  நடந்தது நடந்துவிட்டது, இனி அதை நினைத்து எந்த பிரயோசனமும் இல்லை, மீதமுள்ள வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ளப் போகிறோம் என்று மஹிமா சிந்திக்கத் தொடங்கினார்.  காலம் அவர்களுக்குக் காட்டிய வினோதமான இந்த பரிமாணம், வாழ்க்கை பற்றியும், மற்றவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பற்றியும் மஹிமாவை அதிகமாக சிந்திக்க தூண்டியது.  மற்றவர்களுக்கு தம்மாலான உதவியை செய்வதன் மூலம் இந்த சோர்வை தாம் வெல்ல முடியும் என தீவிரமாக நம்பினார்.  எனவே இனி ஓவியங்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் பிறருக்கு உதவி செய்வதிலேயே செலவிடவேண்டுமென்று முடிவு செய்தனர்.  மனோ தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தார்.  பல்வேறு பத்திரிக்கைகளில் அவை வெளியாயின.  இந்து பத்திரிக்கை ராம் கூட மனோவை அவரது ஓவியஙளுக்காக வெகுவாக பாராட்டியிருக்கிறார்.  வாழ்த்து அட்டைகளுக்கு மனோ வரைந்த ஓவியங்கள் சிறிது சிறிதாக பிரபலமடையத் துவங்கின.  சிறிய அளவில் ஆரம்பித்த இந்த முயற்சி, பிந்நாட்களில் பெரிய வருவாயை ஈட்டிக்கொடுத்தது.  அதிலிருந்து கிடைத்த அனைத்து வருவாயையும் தொண்டுநிறுவனங்களுக்கும் அரவிந்த் போன்ற கண் மருத்துவமனைகளுக்கும் அளித்தனர்.  அவர்கள் நெடுங்காலமாக தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் பணி இது.

மனோ தனது 33வது வயதில் தன் கண்களில் பார்வை குறைபாடு இருப்பதாக உணர்ந்தார்.  அப்போது அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  வேலைக்குச் செல்வதிலும் ஓவியங்கள் வரைவதிலுமே மிகுந்த ஊக்கத்துடன் செயல்பட்டார்.  நாட்கள் செல்லச் செல்ல அவரது இடது கண்ணின் பார்வை வேகமாக மங்கத் தொடங்கியது.  மருத்துவ பரிசோதனையில் அவரை Ophthalmic Retinopathy தாக்கியிருப்பது தெரியவந்தது.  இனி மனோவின் கண்கள் பார்வையை இழப்பதை தவிர்க்கமுடியாது என்பதை அறிந்த மஹிமா மிகவும் வேதனையடைந்தார்.  வேதனையிலேயே நாட்கள் சென்றுகொண்டிருந்தன.  இன்னாட்களில் மஹிமா மனோவிற்கு அளித்த ஊக்கம் அளப்பரியது.  குறைவான நாட்களே மிஞ்சியிருப்பதால் அதிகமான ஓவியங்கள் வரைய மனோவை தூண்டிக்கொண்டேயிருந்தார்.

மனோவிற்கு புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.  எனவே அவர் ஓவியம் வரையும் போது மஹிமா அவருக்காக அவருக்கு கேட்கும்படிக்கு சத்தமாக Wheelchair-ல் அமர்ந்தபடியே புத்தகங்கள் வாசித்துக்காட்டிக்கொண்டிருப்பார்.  [இச்சித்திரம் என் மனதில் தோன்றிய அந்த வேளையில் சொல்லொனாத்துயரம் என்னை ஆட்கொண்டிருந்தது, ஆனால் மனோ கொஞ்சமும் தன்னிரக்கம் வேண்டாமல் எளிதாக அவற்றை கடந்துசென்றுகொண்டிருந்தார்].  இந்நிலையில் மதுரையின் தனது பால்யகால சூழல்களை ஓவியங்களாக பதிவு செய்யவேண்டும் என்று மனோ விரும்பினார்.  மஹிமாவுடன் மீண்டும் மதுரைக்கு திரும்பினார்.  மதுரையின் சுற்றுப்புறங்களை நிறைய வரைந்தார்.  மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுரங்களையும் மண்டபங்களையும் நுணுக்கமாக வரைந்தார்.  ஞாநி வீட்டில் நாங்கள் நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பு பார்த்தவை அவ்வோவியங்களைத்தாம்.  நினைக்கையில் சிலிர்ப்பாக இருந்தது.  கோயிலின் உட்பிரகாரத்தை வரைந்த கணம் ஏறத்தாழ மனோ தன் பார்வையை இழந்துவிட்டிருந்தார்.  அதிலுள்ள சிற்பங்களை மனதில் பதிவு செய்வதற்காக தடவிப் பார்க்கையில்தான் ஒரு சிம்ம சிற்பத்தையே அது இருப்பதை உணர்ந்திருக்கிர்றார்.  அவ்வோவியங்களை அவர் வரைய உதவிய அனைவரையுமே நன்றியோடு நினைவுகூர்ந்தார்.  அவர்களின் உதவி இல்லாவிடில் இவ்வோவியஙளை தாம் வரைவதுபற்றி கனவுகூட கண்டிருக்க முடியாது என்றார்.  அச்சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் கலைத்திறனை வியந்து பாராட்டி அதைப் பற்றிய தமது கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.

வடக்குமாசி வீதியிலிருந்த ஒரு வீட்டையும், மதுரையை சுற்றிய இயற்கைகாட்சியில் ஒரு மேகத்தையும் வரைய அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை மிகவும் சுவாரசியமாக எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.  அந்த வீட்டை வரைய அவர் பயன்படுத்திய திரிகோணமிதி கணக்கீடுகள் எங்களுக்கு காட்டப்பட்டன.  நுட்பமாக வரைவதற்கு அவர் எடுத்த சிரத்தைகளை மனதளவில் நினைத்துப் பார்த்தபொழுது வியப்பாக இருந்தது.  மதுரையை சுற்றிய இயற்கை காட்சிகளை வரையும்போது, மேகங்களை கறுப்பு வெள்ளையில் வரைவதின் சிக்கல்களையும், ஒரு ஓவியத்தில் அவர் அச்சிக்கலை எவ்வாறு கடந்துவந்தார் என்பதையும் செயல்முறை விளக்கமாக திரையில் நாங்கள் பார்த்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டிக்கொண்டேயிருந்தோம்.  கைதட்டல் அடங்கவே வெகுநேரமாகியது.





வீட்டில் அனைத்து வேலைகளையும் கவனித்துக்கொள்வது மனோ தான்.  மஹிமாவிற்கு மாடியில் அமர்ந்து இயற்கையை ரசிப்பது மிகவும் பிடிக்கும்.  மனோ தினமும் மஹிமாவை Wheelchair-ல் அமர்த்தியபடியே மாடிக்கு கொண்டுசெல்வார்.  ஒரு காலை வாகனத்திற்கு முட்டுகொடுத்துக்கொண்டு அதன் கைப்பிடியை இறுக்க பற்றி காலால் நெம்பும்போது வாகனத்தை ஒருபடியிலிருந்து இன்னொரு படிக்கு ஏற்றமுடியும்.  இவ்வாறு ஒவ்வொரு படியாக கடந்து மாடியை அடைய எவ்வளவு நேரம் ஆகியிருந்திருக்கும் என்பதை நாம் நினைத்தால் அதன் கஷ்டத்தை உணர முடியும்.  மாடிக்கு ஏற்றுவது கூட அவ்வளவு கடினமல்ல, மாடியிலிருந்து கீழே இறக்குவதை நினைத்தபோதுதான் எனக்கு பகீரென்றிருந்தது.   தீராத காதல் என்றால் என்ன என்பதை நான் அன்றுதான் உணர்ந்தேன்.

ஒருவர்மேல் ஒருவர் கொண்ட மிதமிஞ்சிய அன்பால் எவ்வித அலுப்பும் இல்லாமல் வாழ்க்கை மிக மிக சுவாரசியமாகவே சென்றுகொண்டிருந்தது.  ஒருநாள் திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மஹிமாவை அழைத்துக்கொண்டு திருமண மஹாலுக்கு சென்றார் மனோ.  உன்னதமான தம்பதிகளான இந்த தம்பதியர் விலையுயர்ந்த ஆடைகள் அணிந்திருந்தனர்.  மஹிமா பட்டுப்புடவையிலும், மனோ கோட் சூட்டிலும் மிகவும் அழகாய் இருப்பதாக பரஸ்பரம் உணர்ந்து, மயக்கமூட்டிய அந்த சூழலை வெகுவாய் ரசித்துக்கொண்டிருந்தனர்.  மனோ அணிந்திருக்கும் கோட்டில் ஒரு ரோஜா குத்தப்பட்டிருந்தால் மிகவும் அழகாயிருக்கும் என்று நினைத்து மஹிமா மனோவிற்கு ரோஜா அணிவிக்கிறார்.  வாழ்வில் தன்னால் மறக்கவே முடியாத உன்னத தருணமாக இதை கருதுவதாக மனோ எஙளுடன் பகிர்ந்துகொன்டார். விழா முடிந்து வீட்டிற்கு கிளம்புவதற்காக காரை வரவழைத்திருந்தார் மனோ.  மஹிமாவை wheelchair-ல் அமர்த்தி வெளியே தள்ளிக்கொண்டு வரும்போது வாசலை கடக்குமிடத்தில் படிக்கட்டுகள் அமைந்திருந்தன.  அதை கடப்பது கொஞம் கடினமாக இருந்த நேரத்தில் இரு இளைஞர்கள் இவர்களை கவனித்துக்கொண்டிருந்தனர்.  மனோவிற்கு உதவி செய்யலாம் என்று முடிவெடுத்து மனோவிடம் நாங்கள் உதவி செய்கிறோம் என்று கூறியவாறே நெருங்கிவந்தனர்.  மனோ அவர்களது உதவியை மறுத்தும் கேளாமல் Wheelchair-இன் கைப்பிடியை பற்றினர்.  மூவருக்கிடையேயான தவறான புரிதலால் மஹிமாவை சுமந்திருந்த வாகனம் தள்ளாடியது.  அந்நேரத்தில் அதை பிடிக்க முற்பட்ட மனோ சரியான பிடி கிடைக்காமல் தவறி விழுந்துவிட்டார்.  விழுந்த அந்நொடியில் மஹிமாவிற்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற பதட்டத்திலேயே விரைந்து எழுந்தார்.  நடக்க முடியாத முதிர்வயது பெண்மணியை அழைத்துவந்துவிட்டு இவ்வளவு கவனக்குகுறைவாக இருந்துவிட்டானே என்று மற்றவர்களும் சொல்வார்களே என்று பதறினார்.  நல்லவேளையாக மஹிமாவிற்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.  நிம்மதிப்பெருமூச்சுடன் மஹிமாவை வெளியே அழைத்து வந்தார்.  சில்லென்று குளிர்காற்று வீசியது.  மழை வருவதுபோல் மேகம் கறுத்துக்கொண்டு வந்தது.  ஏதொ ஒரு அசூயையை உணர்ந்தவாறே சூட்டின் பின்பக்கம் தடவிப்பார்த்த போதுதான் அவரது சூட் பின்பக்கமாக கிழிந்திருப்பது தெரியவந்தது.  அந்நிகழ்வையும் அவர் ஓவியமாக பதிவு செய்திருக்கிறார்.  கருப்பு சூட் அணிந்திருந்த முதியவர் அது லேசாக கிழிந்ததினால் வெள்ளை உள்ளாடை தெரிய மூன்று சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் பெண் பக்கத்தில் நின்றிருப்பது போன்ற அவ்வோவியம் மனோவின் நகைச்சுவை உணர்வினையும், அதே நேரத்தில் அவரது கற்பனைத் திறனையும் எஙளுக்கு உணர்த்தியது.

திருமணத்திற்கு முன்பு மனோ ஒருமுறை மஹிமாவை அழைத்துக்கொண்டு சினிமாவிற்கு சென்றிருந்திருக்கிறார்.  அந்த திரைப்படத்தில் கதாநாயகி கரடி பொம்மையுடன் தூங்குவதுபொல் ஒரு காட்சி வருகிறது.  மனோ மஹிமாவிடம், "மஹி... நீ இவ்வாறு பொம்மையுடன் தூங்குவதை விரும்புவாயா" என்ட்ரு கேட்க, மஹிமாவும் சிரித்துக்கொண்டே, "இந்தமாதிரியான சின்ன கரடி பொம்மையுடன் தூங்கி பழக்கமில்லை, ஆனால் இன்னும் சிறிது நாட்களில் ஒரு பெரிய உயிருள்ள கரடி பொம்மையுடன் தூங்கப்போவதை நினைத்தால்தான் பயமாயிருக்கிறது" என்றிருக்கிறார்.  இந்த சொல்லாடல் மனோவை மிகவும் கவரவே, தனது கடிதத்தில் ஒரு கரடி பொம்மை அழகான சிறுமியை வெள்ளந்தியாக ரசித்து பார்த்துக்கொண்டிருப்பது போலவும், சிறுமி கரடி பொம்மையை வெக்கத்துடன் ஓரக்கண்ணால் பார்ப்பது போலவும் ஓவியம் வரைந்து மஹிமாவிற்கு அனுப்பியிருக்கிரார்.  காதல் ததும்பிய அந்த ஓவியத்தை நாங்கள் வெகுவாய் ரசித்தோம்.

மூன்று வருடஙளுக்கு முன் ஒருநாள் தூக்கத்திலேயே மஹிமாவின் உயிர் பிரிந்துவிட்டது.  திரும்பவே பெறமுடியாத இந்த இழப்பு மனோவை நிலைகுலையச் செய்தது.  மஹிமாவின் நினைவுகளை மீட்டியபடியே தன் வாழ்நாளை இன்றுவரை கழித்துவருகிறார்.  ஓருநாள் மஹிமாவின் கல்லறைக்கு தன் மகளுடன் சென்றுவிட்டு வேடு திரும்பும்போது, அவரது மகள் கல்லறைக்கு மிக அருகில் பட்டுப்பூச்சியின் லாவாவை பார்த்திருந்திருக்கிறார்.  ஒரு லாவா எவ்வாறு ஒரு அழகான பட்டுப்பூச்சியாக உருமாற்றமடைகிறது, என்பதை தன் மகனுக்கு நேரடியாக விளக்கலாமே என்ட்ரு அந்த லாவாவை வேட்டுக்கு எடுத்து வந்து பாதுகாத்து வந்திருக்கின்றார்.  மஹிமாவுடனான தனது கடந்தகால வாழ்க்கையை நினைத்தவாறு நாற்காலியில் அமர்ந்தவாறே லாவாவை பார்த்துக்கொன்டிருந்த அக்கணத்தில் அந்த லாவா அழகான பட்டுப்பூச்சியாக உருமாறி மனோ வீட்டு தோட்டத்திற்குள் புகுந்து மறைந்துவிட்டது.  இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த மனோ விளக்கமுடியாத வலியில் மனம் தத்தளிப்பதை உணர்ந்தார்.  அந்த பட்டாம்பூச்சி மஹிமாதான் என்று அவர் மனம் உறுதியாக நம்பியது.  நினைவுகளை மீட்டி அந்த கணத்தில் ஒரு ஓவியம் வரைந்தார்.  அதில் அதே கரடிபொம்மை சொல்லொனாத்துயரை கண்களில் அடக்கியவாறு சிறுமியை இழந்த ஏக்கத்துடன் கையில் ஒரு அழகான பட்டாம்பூச்சியை வைத்து பார்த்துக்கொண்டிருந்தது.  சிறுமியை பட்டாம்பூச்சியாக அவர் செய்த கற்பனை என்னை கிறங்கடித்துவிட்டது.  கணத்த இதயத்துடன் தான் நாங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தோம்.

அதன்பின் வாசகர்களின் கேள்விநேரம் தொடங்கியது.  அங்கு கேட்கப்பட்ட கேள்விகளிலேயே ஞாநியின் கேள்வி மிகவும் முக்கியமானது.  "இவ்வளவு மோசமான சூழல்கள் உங்களைத் தாக்கியபோதும், நீங்கள் ஏன் கடவுள் நம்பிக்கை, மதம் என செல்லவில்லை."  அதற்கு மனோ அளித்த பதிலும் சிறப்பானதுதான்.  "கடவுளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் மஹிக்கு இருக்கத்தான் செய்தது.  ஆனால் இங்கு வழிபாடுகளில் பணமும் முன்னிறுத்தப்படுவது எனக்கு உகந்ததாய் இல்லை.  எனவே வீட்டிற்கு யாராவது ஜெபம் செய்ய வந்தால், கடவுள் எங்கும் இருக்கிறார்தானே, நீங்கள் ஏன் உங்கள் இருப்பிடத்தில் இருந்துகொண்டே எங்களுக்காக கடவுளை பிரார்த்திக்கக் கூடாது" என்று கேட்டு அனுப்பிவிடுவேன் என பதிலளித்தார்.  ஒரு துறையில் ஜீனியசாக இருப்பவர்கள் கடவுள் விஷயத்தில் மொன்னையாக இருப்பார்கள், எப்போதுமே எனக்கு சோர்வுதரும் விஷயம் இது.  மனோவின் கோட்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  கலந்துரையாடல்களுக்கிடையே மனோ தான் வரைந்த அனைத்து ஓவியஙளையும் வைத்து ஒரு ஓவிய கண்காட்சி நடத்திய பொழுது மஹிமாவை பெருமைப்படுத்தும் விதமாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டமை குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.



இறுதியாக பாஸ்கர்சக்தியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.  ஒவ்வொருமுறை காலம் தன்னை நிலைகுலைய வைத்தபோதும் பிறருக்கு உதவுவது மூலம் அந்த துன்பத்தை மனோவும் மஹியும் கடந்து வந்தார்கள் என இந்த பதிவில் என்னால் சிறப்பாக விளக்க முடியவில்லையெனினும், ஞாநி மனோவை கேணிக்கு அழைத்துவந்ததன் நோக்கம் அதுதான்.  மீன்டும் அவர் வரைந்த ஓவியங்களையும் அவர் எழுதிய புத்தகஙளையும் பார்த்தேன்.  உயிரோட்டமான மஹிமாவின் புகைப்படம் ஒரு புத்தகத்தின் அட்டைப்படமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.  இவவளவு அழகான பெண் எவ்வாறு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஊணமாகவே கழித்தார் என்று நினைத்தபோது துக்கமாக இருந்தது.  நம்பிக்கையூட்டும் விஷயமாக எனக்கு தோன்றியது அந்த துக்கத்தை கடப்பதற்கு அவர் பிறருக்கு உதவுவதையே தேர்ந்தெடுத்தார் என்பதுதான்.

சில படைப்புகளை படித்த பின்போ அல்லது சில திரைப்படங்களை பார்த்தபின்போ கொஞ்சநாட்களுக்கு அதைப்பற்றிய நினைவுகளே நம்மைப் பீடித்திருக்கும், வேறெதிலும் மனம் கொஞ்சம் கூட ஆர்வம் காட்டாது.  அதே மனநிலையில் அன்று நான் இருந்ததால் அதே மாலையில் ஞாநி வெளியிடவிருந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.  கணத்த இதயத்துடன் வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.  என்னை மிக மிக வசீகரித்த ஆளுமைகளில் ஞாநியும் ஒருவர் என்பதால் நிகழ்ச்சிக்கு செல்லாததும் வருத்தமாகத்தான் இருந்தது.  ஆனாலும் வேறு வழியில்லை.  இரவெல்லாம் மனோ-மஹியின் உன்னதமான காதல் நெஞ்சில் நிறைந்திருந்தது.









(பதிவு என் ஞாபகத்திலிருந்து எழுதப்பட்டது.  தகவல்பிழைகளுக்கு நானே காரணம்.   அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட நண்பர்கள் தவறை சுட்டிக்காட்டினால் தவறை திருத்திவிடுகிறேன்)   

Tuesday, June 1, 2010

பக்கத்தில் வந்த அப்பா

சிறுவயது முதலே எனக்கு என் அப்பாவின் மீது எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.  வறுமை பீடித்த குடும்பமாய் இருந்தபடியால், கடனை அடைப்பது மட்டுமே அப்பாவின் இளவயது கனவாக இருந்தது.  கடுமையான வேலை; வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை தலையில் சுமந்தே விற்பனை செய்யும் தொழில்.  அவர் மளிகை சாமான்களை அடுக்கிவைத்து சுமந்து செல்லும் பெட்டியை அந்நாட்களில் என்னால் அசைக்க கூட முடிந்ததில்லை.



அப்பா கோவில் திருவிழாக்களில் கலந்துகொண்டதில்லை.  எஙகள் ஊரின் எந்த‌ டீக்கடை பெ‍‍‍ன்ஜிலும் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டே அரட்டை அடித்ததில்லை.  ஊர்கூட்டஙகளில் (பஞாயத்து) கலந்துகொண்டு கருத்து சொன்னதில்லை.  வியாபாரம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்துசேரவே இரவு மணி பதினொன்றைத் தாண்டிவிடும். முறுக்குதவிர வேறு திண்பண்டங்க‌ளை அவர் வாங்கிவந்ததே இல்லை.  கேரளாவிற்கு வியாபாரம் செய்ய சென்றுவந்த நாட்களில் பலாப்பழங்கள் வாங்கிவர ஆரம்பித்தார்.  அந்த வயதில் ஒருரூபாய் கிடைத்தால் போதும்; ஐந்து நாட்களுக்காவது எஙகளை கையில் பிடிக்கமுடியாது, ஆனால் அப்பா ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும் முன்பு எனக்கும் தம்பிக்கும் ஆளுக்கு இரண்டு ரூபாய்களை தூக்கத்திலிருக்கும் எங்கள் கைகளில் வைத்துவிடடு செல்வார்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அப்பாவின் வருகைக்காக இரவு நெடு‌நேரம் விழித்திருப்போம்.  ஆனால் மறுநாள் எழுந்திருக்கும்போதுதான் தெரியும் அப்பா வருமுன்னரே தூங்கிவிட்டோம் என்று.  அம்மா மட்டுமே அப்பா இரவு வந்ததை அறிந்திருப்பாள்.  காலையில் எழுந்ததும் அல்லல்பட்டு 20 ரூபாய் தேத்துவோம்.  பண்டிகை கொண்டாட்டத்தில் அனைத்துமே காலியாகிவிடும்.  தனக்குமட்டும் பண்டிகை இல்லை என்று அப்பா எடுத்த தீர்மானம் அவரது ஆழ்ந்த தூக்கத்தில் நம்க்கு தெரியும்; வேலை களைப்பில் அசந்து தூங்கிக்கொண்டிருப்பார்.  அநநாட்களைத் தவிர வேறு நாட்களில் அப்பா தூங்கி நானோ அல்லது தம்பியோ பார்த்ததே இல்லை.

கடனே இல்லாத வாழ்க்கை வாழவேண்டுமென்ற பெருங்கனவு ஒன்றே அவருக்கு இருந்தது.  கடனை அடைததுவிடவேண்டுமென்று சுயநினைவின்றி பகலிலும் இரவிலும் அவரது நா அரற்றுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.  பின்பு வெளியில் சென்று வியாபாரம் செய்யலாம் என்று எண்ணி இளம் மனைவியான அம்மாவை விட்டுவிட்டு கேரளா சென்றுவிட்டார்.  என்று ஊருக்கு வருவேனென்று சொல்லிச் செல்கிறாரோ சொல்லிவைத்த மாதிரி அன்று வரவேமாட்டார். தொலைதொடர்பு இல்லாத அந்த நாட்களில் அம்மாவை பார்க்க பாவமாக இருக்கும்.

குடும்பம் என்ற ஒற்றை அமைப்பைவிட சமுதாயம் என்ற கூட்டு அமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார் அப்பா.  சமுதாயத்தில் ஒரு கௌரவமான வாழ்க்கைக்காக வெறிகொண்டு உழைத்தார்.  சொந்தமாக தொழில் தொடங்கும் அளவிற்கு பணம் சேர்ந்தது.  பக்கத்து ஊரான சுரண்டையில் மார்கெட்டில் கடை ஆரம்பித்தோம். இதற்குள் கல்லூரிப்பருவத்தை நானும் தம்பியும் எட்டியிருந்தோம்.  நேரடியாக‌ அப்பாவின் பாசத்தை நாங்கள் அனுபவித்தது மிகவும் குறைவே.  அம்மாவின் அபிரிமிதமான அன்பால் பக்கத்தில் அப்பா இல்லாத தனிமை எங்களை அமிழ்த்தியதில்லை.  ஆனாலும் இன்றும் அப்பா தன் குழந்தைகளோடு மகிழ்சசியாய் உரையாடும் பழ‌க்கத்தை அறியவேயில்லை.

நேற்று சுந்தர ராமசாமியின் பக்கத்தில் வந்த அப்பா என்ற் அற்புதமான கதையை வாசித்தேன்.  சு.ரா. தன் குழந்தைப் பருவம் குறித்த தீவிர அவதானிப்பைக் கொண்டவர்.  அப்பாவைப் பற்றிய தன் விமரிசனங்களை புனைகதைகளிலும் கட்டுரைகளிலும் தொடர்ந்து செய்துவந்தவர்.

இக்கதையில் வரும் ராஜு பெரியப்பாவும் பாலுவின் அப்பாவும் ஒன்றுவிட்ட சகோதரர்களாக இருந்தாலும் உடன்பிறந்தோரைப் போன்று பரஸ்பரம் பாசம் கொண்டவர்கள்.  அப்பா இளம் வயதில் தன் புது மனைவியான அம்மாவுடன் வியாபார‌ நொடியால் நிர்க‌தியாக‌ நின்றிருந்த‌ வேளையில் ராஜு பெரிய‌ப்பா த‌ன் பெய‌ருக்கு இருந்த‌ ஏஜென்சியை அப்பா பெய‌ருக்கு மாற்றி கொடுத்த‌ உத‌வியை நிர‌ந்த‌ர‌மாக‌ நினைத்த‌ப‌டியே இருக்கிறார்.

ராஜி பெரியப்பா வருடத்திற்கு ஒருமுறை பாலுவின் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு செல்வார். அவரை உபசரிப்பதற்கு தடாலடியான ஏறபாடுகளை  செய்வார் அப்பா.  பாலுவும், ரமணியும் பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்க போட்டி போடுவார்கள்.

ர‌ம‌ணி மீது அப்பாவிற்கு அதீத‌ பாச‌ம் உண்டு. வீட்டில் க‌டுமையான‌வ‌ராக‌ இருந்தாலும் கூட‌ சில‌ வேளைக‌ளில் ர‌ம‌ணியை ம‌ட்டும் ம‌டியில் வைத்துக்கொண்டு செல்ல‌ம் கொஞ்சுவார் அப்பா. வீட்டில் இருக்கும் அந்த‌ ச‌ம‌ய‌ங்க‌ளிலெல்லாம் அவ‌ர‌து ந‌ட‌வ‌டிக்கைக‌ள் தாங்க‌ முடியாம‌ல் பாலு ம‌ட்டும் த‌ன் வீட்டில் இருக்கும் வேப்ப‌ம‌ர‌த்தின் உச்சிக்கு ஏறிவிடுவான். அங்கிருந்து அப்பாவின் ம‌டியிலிருக்கும் ர‌ம‌ணியை பார்த்துக்கொண்டிருப்பான். இவ‌ன் பார்ப்ப‌து எப்போதும் ர‌ம‌ணிக்கு தெரியும். அவ‌னை பார்த்து அவள் அதுபோன்ற‌ ச‌மய‌ங்க‌ளில் முக‌ச்சேட்டை காட்டுவாள். தானும் அப்பாவிட‌ம் நெருங்க‌வேண்டும், அவ‌ர‌து பாச்ம் த‌னக்கும் கிடைக்க ‌வேண்டுமென‌ பாலு ஆசைப‌டுவான்.



ஒருநாள் காலை தொலைபேசி அலுவலகத்திலிருந்து தொலைபேசி அலுவலக சேவகன் வந்து அவருக்கு கொச்சியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக சொல்லி விட்டு செல்கிறான். தொலைபேசி பிரபலமாகாத காலமென்பதால் அந்த செய்தி அப்பாவை மெதுவாக பதட்டமடையச் செய்கிறது. அவரது பல காரியங்களை எப்போதுமே அவர் செய்வதில்லை; முறையே தபால் நிலையம், மின்சார நிலையம், அல்லது பலசரக்குக் கடை என எங்குமே செல்பவரல்ல அப்பா.

கட்டாயம் வந்துவிட்டதால் ஆவேசத்துடன் தொலைபேசி நிலையத்தை நோக்கி அப்பா வேகமாக நடக்கத்தொடங்குகிறார்.  அம்மா பாலுவையும் கூடவே அனுப்பிவைக்கிறாள்.  உதவாக்கரை என்று சொல்லும் அம்மாவே அப்பாவுக்கு துணையாக தன்னை போகச் சொன்னது பாலுவுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.  அவரது குடையை தூக்கிக்கொண்டு அவரது பின்னாலேயே ஓடுகிறான்.  அக்குடையை அப்பாவைத் தவிர யாருமே தொட்டதுகூட கிடையாது என்பதால் கிளர்ச்சியுடன் குடையை அணைத்துக்கொள்கிறான்.  அவசரத்தில் சட்டைகூட போடாமல் விரைந்து வந்துவிட்ட பாலுவைப் பார்த்து அப்பா "சட்டையை போட்டுக்கொள்வதெற்கு என்னெடா மண்டு" என்று கேட்கிறார்.  இது அவர் வழக்கமாக அவனைத் திட்டுவதற்காக சொல்லப்பட்ட மண்டு அல்ல.  உடனே பாலு "இதோ போட்டுண்டு வரேன்" என்று சொல்லிவிட்டு பின் திரும்பிப்பாய ஆயத்தமாக, "சரி, சரி வேண்டாம் சின்னப்பயல்தானே நீ" என்கிறார்.  பாசத்துடன் அவர் சொன்ன சின்னப்பயல் என்ற வார்த்தை அவனுள் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்துகிறது.

இருவ‌ரும் தொலைபேசி நிலைய‌த்தை அடைகின்ற‌ன‌ர்.  அப்பாவுக்கு ரொம்ப‌வும் உத‌வியாக‌ இருந்து த‌ன்னை மெச்சி சில‌ வார்த்தைக‌ளை அவ‌ர் த‌ன் அம்மாவிட‌ம் சொல்லும்ப‌டி செய்துவிட‌வேண்டுமென்று தீவிரமாகிறான்.  தொலைபேசி நிலைய பெண் அப்பாவை பேச அழைக்கிறாள்.  அப்பா தொலைபேசியை வாங்கி மிகுந்த பதட்டத்துடன் "நான் தான், நான் தான்" என்று உரக்க கத்துகிறார்.  அப்போது பாலு "அப்பா பெயரைச் சொல்லுங்கோ" என்கிறான்.  ஏழெட்டு தடவை "நான்தான் சங்கரன்" என்று கத்தியபின்பும் எதிர்முனையில் பேசப்படுவது அவருக்கு கேட்காததால் பாலுவை நோக்கி "ஒண்ணுமே கேட்கலியேடா பாலு" என்று மிகவும் சோகமாக சொல்லுகிறார்.  அப்பா தன் கவலையை பாலுவிடம் பகிர்ந்ததை எண்ணி பாலு ஆர்வமாகி,

"நான் பேசட்டுமா அப்பா"

"பேசு, பேசு."

"ஹலோ! ஹலோ!"

"ஹலோ" என்ற வார்த்தையை அப்பா அதுவரை உபயோகப்படுத்தியிருக்கவில்லை.  தான் எடுத்த எடுப்பிலேயே ஹலோ என்று சொன்னது அப்பாவை புல்லரிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறான்.

"ஜோராக கேட்கிறதே அப்பா, "பெரியப்பா செத்துப்போயிட்டாராம்; அண்ணா சொல்கிறான்," பாலு.

அப்பா மிகவும் துக்கப்படுகிறார்.  அவ்வேளையில் பாலுவை ஒரு கையால் இழுத்து அணைத்துக் கொள்கிறார்.  அவனுக்கு பெரியப்பா செத்தமைக்கு வருத்தமும், அப்பாமேல் பிரியமும் ஏற்படுகிறது.  ஏதாவது பெரிய காரியம் செய்து அப்பாவை ஆறுதல்படுத்திவிட வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறான்.

வீட்டிற்கு வந்ததும் வீட்டின் பின்புறத்திலுள்ள கிண‌ற்றில் குளிக்கிறார். தன்னிலை புரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பாலுவையும் குளிப்பாட்டிவிட ஆரம்பிக்கிறார்.  அது அவனுக்கு மிகுந்த கூச்சத்தை ஏற்படுத்துகிறது.  இதையெல்லாம் ரமணி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.

அப்பா உறங்கியவுடன் தன் சமயோஜிதத்தையும், அதனால் ஏற்பட்ட அப்பாவின் வியப்பையும் ஒன்றுவிடாமல் ரமணியிடமும் அம்மாவிடமும் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கிறான்.

மறுநாள் காலையில் எழுந்தவுடன் அப்பா நடந்தவை அனைத்தையும் விவரிக்கிறார்.  ஆனால் அவரது பேச்சில் பாலுவைப் பற்றி ஒரு வார்த்தை கூட வரவில்லை.  அனைத்தையும் அவரே சமாளித்ததுபோல் அவரது பேச்சின் தோணி இருக்கிறது.

பாலு குடையைத் தூக்கிக்கொண்டு வந்தானே என்று அம்மா கேட்க, அப்பா அதற்கு, "அவன் எதுக்கு, என்னால தூக்கிகொண்டுவர முடியாதா? அவனுக்கென்ன தெரியும் குழந்தை, டெலிபோனைக் கண்டானா கவர்மெண்ட் ஆபீச கண்டானா, பின்னால ஓடிவந்தது பாவம்."

பாலுவால் இந்த வார்த்தைகளை கேட்கவே முடியவில்லை; ஏமாற்றம் அவனால் தாங்கிக்கொள்ள முடியாததாய் இருந்த்து. அதுமட்டுமல்லாது வீட்டுக்கு வரும் அனைவரிடமும் அப்பா தமது சாமர்த‌தியமாகவே நிகழ்வை பிரஸ்தாபிக்க பாலுவால் நிம்மதியாகவே இருக்கமுடியவில்லை.

இப்போது அப்பாவுக்கு பாலு வராந்தாவில் நின்று தம்மைப் பார்ப்பதுகூட தர்மசங்கடமாகப் பட்டது.  "போடா உள்ளே; போய் புஸ்தகத்தை எடுதுதுப் படி."  அப்பா பழைய அப்பாவாக மாறுவது பாலுவை வேதனையில் ஆழ்த்தியது.

பாலு பின்பக்கம் வழியாக சென்று பழையபடி வேப்பமரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்கிறான்.  இதைக்கண்ட ரமணியும் மரத்தில் ஏற முயற்சி செய்கிறாள, பாலு உதவி செய்கிறான்.  இந்தமுறை ரமணியின் வார்த்தைகள் நக்கலாக வந்து விழுகின்றன.

"புழுகு மூட்டை, எல்லாத்தையும் அவிழ்த்து விட்டால் ரொம்ப நேரத்துக்கு நிக்காது."

"அனுமார் சத்தியமாக நான் டெலிபோனில் பேசினேன்; அப்பா என்னை அணைச்சுண்டார்" என்று பாலு கத்துகிறான்.

இப்போது ரமணியின் வார்த்தைள் தடிக்கின்றன.  "உன்னுடைய லொட்டு லொடக்குக்கெல்லாம் அனுமாரை இழுக்காதே."  ரொம்ப ஏளெனமாக உதட்டை சுழித்துக்கொள்கிறாள். 

பொங்கும் ஆத்திரத்துடன் பாலு, "இன்னொரு பெரியப்பா வருவாரே ரமணி, அவர் ராஜு பெரியப்பாவை விட சின்னவரா பெரியவரா?"

"ரொம்ப‌ப் பெரியவர்" என்றாள் ரமணி.

"அவர் செத்துப் போகும்போதும் போன் வரும், அப்பவும் நான் அப்பாகூட போவேன். வந்து பாரு, அப்ப தெரியும் உனக்கு."

"முட்டாள் உளராதே" என்றாள் ரமணி.

கதையின் எந்தவொரு இடத்திலும் கதாசிரியர் சிறுவர் உலகைவிட்டு வரவேயில்லை.  சிறுவர் மொழியிலும் அதே நேரததில் தீவிரமாகவும் கதை சொல்லப்பட்டிருப்பது இக்கதை இதன் தளத்தை அடைய முக்கிய காரணமாகும். டிபிக்கல் சு.ரா. பாணியான கவித்துவ பேச்சுவழக்கு கதை முழுவதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. அப்பாவிடம் நெருங்கமுடியாமையின் பாலுவின் வேதனை, நெருங்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகள், மற்றும் ரமணியின் கிண்டல்கள் என் அனைத்தும் சிறு சிறு குறிப்புகளாக வரையப்பட்டு ஏதோ ஒரு மர்மப்புள்ளியில் அவை கதையை உன்னத தளத்திற்கு கொண்டு செல்கின்றன.

குடும்ப விழாக்கள் அல்லது பண்டிகைகள் என முக்கிய நாட்களுக்கு மட்டுமே ஊருக்கு செல்லும் நிலை வந்துவிட்ட இந்நாட்களில் அப்பாவைப் பற்றி நினைக்குந்தோறும் நான் வாசிப்பது சு.ரா.வின் இந்த மகத்தான கதையைத்தான்.  சு.ரா.வும் தன்னுடைய் அப்பாவுடனான தன் அனுபவத்தை எழுதி எழுதி தணித்துக் கொண்டவர்.  தன் அப்பாவின் கண்டிப்பே அவருக்கு கசப்பானதாக இருந்தது.  ஆனால் என் அப்பா கண்டிப்பானவர் இல்லை; சாதுவானவர், பயந்த சுபாவம் கொண்டவர், அவரிடமிருக்கும் குறைகளில் முக்கியமானது பாசத்தை வெளிப்படுத்துவதில் அவர் குறைபாடு கொண்டவர் என்பது மட்டுமேயாகும்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு அபூர்வ தருணத்தில், ஒரு பின்னிரவில், அப்பா எஙகளுடன் வெகுநேரம் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். அம்மா தந்த பால் இல்லாத தேநீர் அன்று அதீத சுவையானதாய் இருந்தது.  அப்பாவிடம் அபாரமான நகைச்சுவை உண்ர்ச்சி உண்டு என்பதை நான் நேரில் உணர்ந்த நாள் அது.  தனித்த எழுத்தாளரைப் போன்று அவருக்கென்று பிரத்யேகமான வார்த்தைப் பிரயோகங்களை தன் பேச்சில் கொண்டிருந்தார். அவர் எப்போதுமே வாழ விரும்பும் கடனற்ற வாழ்க்கை இந்நாட்களில் அவருக்கு வாய்த்திருப்பது அவரை மேலும் உற்சாகமாக்கியிருக்கிறது.  அளவற்ற தன்னம்பிக்கையோடு அப்பா எஙகளோடு உரையாடும் இன்றைய நாட்களில் சு.ரா. இக்கதையின் மூலம் இன்னும் நெருக்கமாக என் அருகில் வருவதை என் அகம் அறிகிறது.

Thursday, March 18, 2010

ஞாநியின் பதில்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பாராட்டி ஞாநி குமுதத்தில் எழுதிய ஓ பக்கங்களை பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை "ஞாநிக்கு கடிதம்" என்ற பெயரில் பதிவிட்டிருந்தேன்.   மேலும் ஞாநிக்கு அதை மெயில் மூலம் தெரியப்படுத்தியிருந்தேன்.  அவர் இரு தினங்களில் எனக்கு பதில் அனுப்பினார்.  அப்பதிலை இங்கு பதிவிடுகிறேன்.

அன்புள்ள பிரபாகரன்

உங்கள் கருத்துகள் சுவாரஸ்யமாக இருந்தன. கோலம் அமைப்பின் நோக்கம், வேலை விண்னைத்தாண்டி வருவாயா போன்ற படங்களை எடுப்பது அல்ல என்பதில் உங்களைப் போலவே நானும் தெளிவாக இருக்கிறேன். கோலம் வணிக சினிமா சூழலுக்கு வெளியே இருக்கும் இயங்கும் திட்டம்.

தமிழ் வணிக சினிமாவின் சூழலில் , விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் அவற்றின் குறைகளை மீறி ஆதரிக்கப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. அ ப்போதுதான் முழுக்குப்பைகளாக தயாரித்து வெளியிடப்பட்டு வரும் பெரும்பான்மை படங்களிலிருந்து அடுத்த அடி நோக்கி நகர முடியும். ஓ பக்கங்களை வாசிக்கும் வெகுஜன ரசனை உள்ள வாசகர்/பார்வையாளர்களை இன்னொரு திசை நோக்கி அடி எடுத்து வைக்கச் செய்யும் முயற்சியே என் எழுத்துகள். நம் ரசனைகள் வேறுபடலாம். நோக்கங்களிலும் லட்சியங்களிலும் வேறுபாடு இல்லை.


அன்புடன்
 
ஞாநி

Monday, March 15, 2010

கேணி-நாஞ்சில் நாடன் சந்திப்பு

  கேணி நடத்தும் பத்தாவது சந்திப்பு இது.  இதில்
கலந்துகொண்ட ஆளுமைகளை  ஒப்பீட்டளவில்  நோக்கும்போது, கேணி தனது வாசகர்களுக்கு அளிக்க விரும்பும் வீச்சை புரிந்துகொள்ள முடியும்.  இலக்கிய வட்டாரத்தில் சுந்தர ராமசாமி அணி நகுலன் அணி என்ற இரண்டு அணிகளாக பல இலக்கியவாதிகள் சிலரால் பிரிக்கப்படுவதை கவனித்திருக்கிறேன்; ஒருக்கால் அது உண்மையெனின், சு.ரா. அணி மீதே எனக்கு ஒரு மயக்கம் உள்ளது.  நாஞ்சில் நாடன் கதையுலகம் மற்றும் நாவல் உலகம் பற்றிய சு.ராவின் கட்டுரையை சமீபத்தில் அவரது ஆளுமைகள் மதிப்பீடுகள் என்ற நூலில் படிக்க நேர்ந்தது.   நாஞ்சில் நாடனை பற்றிய சிறந்த பதிவுகளில் அதுவும் ஒன்றாகவே இருக்கக்கூடும் என்றே நான் கருதுகிறேன்.  நாஞ்சிலை முழுதும் படிக்காமல் முடிவுக்கு வருவது தவறென்றே அவரது "சூடிய பூ சூடற்க" தொகுப்பின் முதல் மூன்று கதைகளை படித்தபின்பு உணர்கிறேன்.


            தமிழின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரை சந்திக்கப்போகிறோம் என்கிற ஆர்வம் அறிவிக்கப்பட்ட நாட்களிலிருந்தே இருந்தாலும், அன்று கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது.  அரை மணிநேரம் முன்னதாகவே சென்றுவிட்டபடியால் இரண்டாவது வரிசையிலே இடம் கிடைத்தது.  சந்திப்பு சரியாக 3:40 க்கு தொடங்கியது.

      நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப்பேசிய ஞாநி கேணியின் வருங்காலத்திட்டங்கள் பற்றியும் நாஞ்சில் நாடனுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.  தனது படைப்புகளுக்கு வித்தியாசமான பெயர்கள் சூட்டுவதில் ஜெயகாந்தனும் நாஞ்சில் நாடனும் தன்னை கவர்ந்தவர்கள்.  நாஞ்சில் நாடனின் மாமிசப்படைப்பு படித்தது முதற்கொண்டே நாஞ்சில் நாடனை நினைக்கும் போதெல்லாம் அவரது படைப்பின் தலைப்புகளும் நினைவுக்கு வருவதை குறிப்பிட்டார்.

ஞாநியின் உரையைத்தொடர்ந்து நாஞ்சில் நாடன் தனது பேச்சை துவக்கினார்.  என் வாழ்நாளில் மொழியை இவ்வளவு லாவகமாக கையாளக்கூடிய ஒருவரை அல்லது பேச்சை கேட்டதில்லை.  நாஞ்சிலுக்கு எந்த தலைப்பும் கொடுக்கப்படவில்லை; அவராகவே மொழி பற்றிய தனது தரவுகளை "சுதந்திரமாக"  பேசினார்.  அவரது பேச்சின் சாராம்சத்தின் சிறு  பகுதியை அளிக்கிறேன்.

ஒரு எழுத்தாளனுக்கு ஊர் சுற்றுதல் என்பது அவரது எழுத்திற்கான வேர் ஆகும்.
என்னை,  ஜெயமோகனை உருவாக்கியது இந்த ஊர் சுற்றல்தான்.  பல்வேறு மனிதர்களையும், சூழல்களையும், பிரதேசங்களையும் காணும்தோறும் மனது கற்பனைகளை விவரித்துக்கொண்டே செல்கிறது.  தன் சொந்த மண்ணையும் புதிதாக காணும் நிலத்தின் கூறுபாடுகளையும் ஒரு எழுத்தாளன் தன் மனதிற்குள் பின்னிக்கொண்டே செல்கிறான்.  புதிய வெளிகள் புகுத்தப்பட்டு ஒரு தேர்ந்த எழுத்தாளனால் இலக்கியம் செரிவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

தான் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக பாம்பேயில் வாழ்ந்ததை பற்றி கூறியபின் தன் மண் மீதான பிடிப்பு எவ்வாறு உருக்கொண்டது  என்பதை பகிர்ந்துகொண்டார்.  பம்பாயில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மகாபாரதத்தை முறையாக ஒரு குருவிடம் கற்றிருக்கிறார்.  இடையிடையே தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி, மற்றும் பல்வேறு சங்க இலக்கியங்களை தனது குருவிடமிருந்து கற்றிருக்கிறார்.

எப்போதோ எழுதிய தனது கதையை எதேச்சையாக ஒரு சிறுபத்திரிக்கைக்கு அனுப்ப அது பிரசுரமானது மட்டுமின்றி அவ்வாண்டின் சிறந்த கதையாகவும்
தேர்வுபெற்றிருக்கிறது.  அதிலிருந்து தொடங்கியது நாஞ்சிலின் இலக்கிய பங்களிப்பு.  ஆரம்பக்கட்டத்தில் தீவிர திராவிட இயக்க அபிதாபியாக இருந்த நாஞ்சில் நாடன், பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்ததன் பொருட்டு, பலவகையான மொழிகளின் கூறுபாடுகளை கூர்ந்து நோக்கி, தமிழ் மட்டுமல்ல அனைத்து மொழிகளுமே தனித்தனி சிறப்புகளை கொண்டவையே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.  காளிதாசன் விளையாடிய ஒரு மொழியையோ, காண்டேகர் பயன்படுத்திய ஒரு மொழியையோ, பஷீர் எழுதிய ஒரு மொழியையோ தான் எவ்வாறு வெறுப்பது; அம்மொழிகளை பேசுவோரிடம் எனக்கு கருத்து மோதல்கள் உண்டு, ஆனால் மொழியுடன் எந்த பகைமையும் இல்லை என்றே கூறினார்.

ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கென கொண்டிருக்கவேண்டிய மொழிக்கட்டமைப்பு, தொழில்நுட்பம் பற்றிய நாஞ்சிலின் அவதானிப்பு விரிவாக அவரால் விளக்கப்பட்டது.
தான் பயன்படுத்தும் மொழி பற்றிய பிரஞ்ஞையை விரிவான விளக்கங்களுடன்
வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.  பொதுத்தமிழில் அன்றாடம் பயன்படுத்தப்படும்
சுமார் 1200 வார்தைகளைத்தாண்டி எழுத்தாளன் கையாளவேண்டிய வார்த்தை பிரயோகங்களை தான் பயன்படுத்தும் மொழிகொண்டே விளக்கினார்.  வார்த்தைகள் மீதான அவரது காதலை மிக ஆழமாகவே ஒரு வாசனாக என்னால் உணரமுடிந்தது.  வையாபுரி பிள்ளை போன்றோரால் தொகுப்பட்ட ஒருலட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகளுக்கும் அதிகமான வார்த்தைகளுக்கு பொருள் கொண்ட  தமிழகராதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படாமலே நிராகரிக்கப்படுகிறது மற்றும் தான் அவைகளிலிருந்து பெற்றுக்கொண்டது என்ன என்பதுபற்றி வெகு விரிவாகவே பேசினார்.  பெருமாள் முருகன் முதலான பலரும் தொகுத்துள்ள அகராதிகள் பற்றியும் அவற்றிலுள்ள சொற்கள் எவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து தற்காலம் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது பற்றியும் அவர் கூறிய செய்திகள் ஆழமும் விரிவும் கொண்டவை. 

நாஞ்சில் நாடனின் விரிவான உரைக்குப்பின்பு வாசகர்களின் கேள்விநேரம் தொடங்கியது.  வழக்கம்போலவே மிகமிக பொதுப்படையான ஆழமற்ற கேள்விகளே கேட்கப்பட்டன.  சில வாசகர்களின் கேள்விகள் கண்டிப்பாக சிந்திக்கத்தூண்டின.  அதில் என்னைக்கவர்ந்தது, ஒரு ஆசிரியை கேட்ட கேள்விகளே.  இன்றைய தமிழாசிரியர்கள் பலரும் தமிழில் குறைவாகவே புலமை வாய்க்கப்பெற்றவர்களே.  இதை மாற்றுவதற்கு என்ன வழிகள்?  இதற்கான நாஞ்சிலின் பதிலும் மிகவும் சிறப்பாகவே இருந்தது.

ஞாநி ஒரு கேள்வி கேட்டார்; ஒரு தேர்ந்த படைப்பாளியுடைய எழுத்து வீரியமாக இருந்தாலும் அவருடைய மோசமாக இருக்கிறது, ஆனால் மிகமிக சாதாரண எழுத்தைக்கொண்ட ஒருவருடைய படைப்பு பொதுமொழியில் எழுதப்பட்டபோதும் சிறப்பான கருத்தை கொண்டிருக்கிருக்கிறது, எனில் கொண்டாடப்படுவது எது?   எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லாத கேள்வி இது.  தேர்ந்த எழுத்துடன் மிக மோசமான புனைவுகளை எழுதும் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படவேண்டிய அதே நேரத்தில் மிகமிக பொதுமொழியில் எழுதும் எழுத்தும் கொண்டாடப்படவேண்டும் என்று அவசியம் இல்லை.   வாசகனுக்கு புரியவேண்டும் என்று எழுத்தாளர் பொதுமொழியில் எழுதவேண்டிய அவசியம் இல்லை.

கூர்ந்துகவனிக்கும் பொருட்டு, பொதுமொழியை விரும்பும் வாசகர்களின் தேர்வு மிகவும் ஜனரங்கமான படைப்புகளாகவே இருக்கும்.   மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவன் ஒன்றாம் வகுப்பையே சுற்றிக்கொண்டிருந்தானனின் அது மாணவனின் தவறே தவிர  ஆசிரியரை குறைசொல்ல யாதொரு நியாயமும் இல்லை.   இருந்தாலும் என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரையில் பொதுத்தமிழில் எழுதப்பட்ட எந்தவொரு படைப்பும் என்னுள் எவ்வித சிலிர்ப்பையும் ஏற்ப்படுத்தியதில்லை (அசோகமித்திரனின் "தண்ணீர்" என்ற நாவலைத்தவிர). 

சு.ரா என்மீது செலுத்தும் அடங்காத ஆதிக்கமும் மயக்கமூட்டும்  அவரது மொழியால் உண்டாவதுதான்.  ஜே.ஜே. சில குறிப்புகள் தந்த சிலிர்ப்பை இதுவரை எந்த எழுத்தும் எனக்கு தந்ததில்லை.   கேணியில் கூடியிருந்த பல வாசகர்கள் கூறிய-பெரிய எழுத்தாளர்கள் எழுதும் படைப்புகள் புரியவில்லை- என்ற கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை.  அவர்களின் புரியாமைக்கு காரணமாக நான் நினைப்பது இலக்கியத்தின் மீது தீவிர ஆர்வம் இல்லை, வார்த்தைகளை கூர்ந்து கவனிப்பது இல்லை, அல்லது வாசிப்பில் குறைந்தபட்ச முயற்ச்சியில்லை.

கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் வங்காளதேசம், கென்யா போன்ற மூன்றாம்தர கிரிக்கெட் நாடுகளை விரும்புவதில்லை, உண்ணும் உணவில் அழுகிய காய்கறிகளை
அனுமதிப்பதில்லை, இன்னும் பலவற்றிலும் மூன்றாம்தரத்திற்கு மதிப்பே இல்லை;  ஆனால் இலக்கியத்திலும் சினிமாவிலும் மட்டும் சங்கர்களும், சுஜாதாக்களும் கொண்டாடப்படுகிறார்கள்.  பொதுப்புத்தி போற்றி புகழப்படுகிறது.  பாலு மகேந்திராக்களும்,  புதுமைபித்தன்களும் நிராகரிக்கப்படுகிறார்கள்.

நான் பழகிய எந்த பெண்ணும் இலக்கியத்தின்பால்  ஈர்க்கப்பட்டவள் அல்ல.  அதிலும் அழகான பெண்களுக்கு நான் அறிந்தமட்டும் இலக்கியம் எட்டிக்காய்.  ஆனால் இன்றைய கூட்டத்துக்கு ஒரு அழகான பெண் வந்தாள்.  நாஞ்சில் நாடனின் பேச்சை கூர்ந்து கவனித்தாள்.  அவரது ஒவ்வொரு கருத்துக்கும் தலையாட்டிக்கொண்டே இருந்தாள்.  எனக்கு அது நிறைவாய் இருந்தது.

இதுவரை கேணியின் ஆறு கூட்டங்களில்  கலந்துகொண்டிருந்தாலும், நான் இதுவரை ஒரு கேள்விகூட கேட்டதில்லை; இன்றும் அப்படித்தான்.  நாஞ்சில் நாடனுக்கு சு.ராவினுடனான அனுபவங்கள் பற்றி கேட்க ஆர்வமாக இருந்தது; ஆனால் கேட்கவில்லை.   தற்போது நடக்கவிருக்கும் உலகத்தமிழ் மாநாடு பற்றிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் நிதரிசனமானவை.   அதிகாரங்களின் அராஜகங்களை எழுத முற்பட்டால் கைகள் நிர்கதியாகவும், கண்களில் இரத்தமுமே மிஞ்சும்.  ஆனால் இதைப்பற்றிய தனது தீர்க்கமான பதிவுகளை எந்த எழுத்தாளருமே தற்காலத்தில் பதிவு செய்யவே இல்லை என்றே எண்ணுகிறேன். 

என்ன எழுதுகிறார் என்பதை என்பதை விட எப்படி எழுதுகிறார் (திரைப்படத்துக்கும்
இது பொருந்தும்) என்றே கவனிக்கும் எனக்கு, நாஞ்சில் நாடன் அவரது பேச்சில்
சொற்களின் வாசனையை வாசகனையும் நுகரவைத்தமை புதிய அனுபவத்தை தந்தது.  அவரது "சூடிய பூ சூடற்க" மற்றும் "காவலன் காவான் எனின்" ஆகிய இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.  வரும் வழியில் பதிவர் கிருஷ்ணபிரபு  நடந்து சென்றுகொண்டிருந்தார்.  வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள் பிரபு என்றேன்.  சிறிது தயங்கியவர், நான் நடந்தே வருகிறேனே என்று சொல்லிவிட்டார்.

வீடு வந்ததும்  என்னை முதலில் வாசிக்கத்தூண்டியது சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுப்பு புத்தகம்தான்.  இதுவரை என்னை அலைக்கழித்த சிறுகதைகள்
மகாமசானம், மாடன் மோட்சம், ரத்னாபாயின் ஆங்கிலம், எங்கள் டீச்சர் போன்ற வெகுசில கதைகளே.  இவை அனைத்துமே கதை சொல்லல் முறையில் தன் உச்சத்தை தொட்டவை.    இந்த வரிசையில் கண்டிப்பாக சேர்க்கப்படவேண்டியது நாஞ்சில் நாடனின் "யாம் உண்பேம்".  புதுமைப்பித்தனின் மகாமசானத்தின் உச்சங்களை இக்கதையும் நிகழ்த்துகிறது.  மொழியின்பால் தனக்குள்ள பிடிப்பை நாஞ்சில் நாடன் உறுதியாக நிறுவிய கதையாகவே இதை நான் பார்க்கிறேன்.

Saturday, March 6, 2010

ஞாநிக்கு கடிதம்

அன்புள்ள ஞாநிக்கு
இந்தவார குமுதத்தில் தங்களின் ஓ பக்கங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நீங்கள் வெகுவாக பாராட்டியிருந்ததை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.  அவரது முந்தய படங்களை நீங்கள் வெறுப்பதற்கு காரணமாக நீங்கள் காட்டும் வல்காரிட்டியை நானும் சிறிது உணர்ந்திருக்கிறேன் என்றாலும் கதை சொல்லல் முறையிலும் காட்சியகப்படுத்தியதிலும் காக்க காக்க, பச்சைக்கிளி, மின்னலே போன்ற படங்கள் விண்ணைதாண்டி வருவாயாவை விட உயர்ந்தவையே.

ஒருவேளை வக்கிரம் இல்லாத படமாக அது உங்கள் பார்வைக்கு தெரிந்திருக்கலாம்.  ஆனால் இதில் வேறுமுறையான வன்முறையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதை சுட்டிக்காட்டவே இந்த கடிதம்.

கதாநாயகனின் குணாதிசயங்களாக தீவிர சினிமா கனவோ அல்லது உண்மையான காதலோ சொல்லப்படவில்லை.   22 வயதில் தோன்றும் affection உம், அந்தவயதில் சினிமாவின் கவர்ச்சியில் ஈர்க்கப்படும் மனமும் கொண்ட ஒரு அழகான இளைஞன், அழகான பெண்ணின் மீது கொள்ளும் ஈர்ப்பை காதலுக்குரிய தீவிரமோ அல்லது உண்மையான சினிமாகவோ இல்லாமல் ஏனோதானோவென்று எடுக்கப்பட்ட படமாகவே நான் பார்க்கிறேன்.

அருமையான  location-கள், குளிர்ச்சியான ஒளிப்பதிவு, மனதை மயக்கும் இசை, editing-ல் சில சாதனைகள் தவிர ஒன்றுமே இல்லாத குழப்பமான சினிமாதான் இது.  இளம்வயதில் தான் தீவிரமாக இருக்கும் ஒரு விஷயத்தில் (காதலிலும் கூட) தோல்வியடைந்தால், அதை நினைத்து சோர்ந்துவிடத்தேவையில்லை, மாறாக, புதிய ஒன்றில் தீவிரமாக முயன்றால், வாழ்க்கையில் வெல்லலாம் என்ற ஒற்றைவரி கதையைதான்  Goutham இந்த படத்திலும் வாரணம் ஆயிரம் படத்திலும்  deal பண்ணியிருந்தார்.  ஆனால் இந்த விஷயம் வாரணம் ஆயிரத்தில் கொஞ்சம் தீவிரமாக பதிவு செய்யப்படது இருந்ததது; அது, இதில் தவறவிடப்பட்டுள்ளது.

கதாநாயகன் Mechanical Engineering படிப்பை பாதியிலே விடத்துனியும் போது, சினிமாவை பற்றிய அவன் கனவு என்ன?  அவன் எடுத்ததாக கடைசியில் த்ரிஷாவுக்கு காட்டப்படும் படமும் வழக்கமான தமிழ் சினிமாதான்.  எனவே தீவிர சினிமாவில் அவன் மோகம் இல்லை என்பது நிதர்சனம்.   ஒருவன் உதவி இயக்குனராக படும் கஷ்டங்களை மிக எளிதாக துளி கூட பதிவே செய்யாமல் கடந்து செல்கிறார் இயக்குனர்.  தற்போதைய தமிழ் சினிமாவின் எலும்புருக்கி நோய்களில் ஒருவர்
கே.எஸ். ரவிக்குமார்.   அவரை வைத்து அவரது படங்களையே பகடி செய்வதற்கு கிடைத்த இடங்கள் அனைத்தையுமே தவற விடுகிறார் இயக்குனர்.

காதல் காட்சிகள் எப்படி?  த்ரிஷாவின் முகபாவங்களும், ஒப்பனையும் கர்ண கொடூரமாக இருந்தது.  அப்பா ஒத்துக்கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தன் உண்மையான(?) காதலை விட்டுக்கொடுக்கிறார் த்ரிஷா; எனில்,  அப்பா-மகள் உறவையாவது கொஞ்சம் தெளிவாக காட்டியிருக்கவேன்டாமா?  அதிலும் அவள் அண்ணன் கதாபாத்திரம் ஆபாசத்தின் உச்சம்.

ஒரு தேர்ந்த காதல் படத்துக்கு முக்கிய தேவைகளுள் ஒன்று வசனம்.  இந்த படத்தின் ஆக கொடுமையே வசனம்தான்.  நீங்கள் காஞ்சிவரம் படத்தை ஜீவன் இல்லை என்று நிராகரித்திருந்தீர்கள்.  அதே விஷயம்தான் இந்த படத்தை எனக்கு நிராகரிக்க தூண்டியது.

அனைவரின் கதாபாத்திரங்களையும் ஒப்புநோக்க எனக்கு சுந்தர ராமசாமியின் ஒரு கருத்து ஞாபகத்துக்கு வருகிறது.  அகிலனின் சித்திரப்பாவையை விமரிசனம் செய்த
 சு.ரா. அந்த நாவலின் கதாநாயகனை "அவன் ஓவியன் அல்ல; drawing master" என்று விமரிசித்து இருப்பார்.  அதேபோல் இந்தப்பட கதாநாயகனும் உண்மையான சினிமா நோக்கமோ அல்லது உண்மையான காதலோ இல்லாத சிறிது சலனமுடைய தற்கால இளைஞன் மட்டுமே.

நான் தமிழின் அனைத்து படங்களையோ அல்லது அனைத்து எழுத்தாளர்களையோ
முறையே பார்ப்பதோ அல்லது வாசிப்பதோ இல்லை.  தீவிரமான எழுத்தையும், படத்தையுமே  நான் விரும்புகிறேன்.  Craft படைப்பாளிகளை அல்ல.  அந்த விதத்தில் தொழில்நுட்பத்தையும், ஏ.ஆர். ரகுமானையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட உயர்தர மோசமான படம் இது என்பதே என் விமர்சனமாகும்.

கோலம் அமைப்பின் உறுப்பினன் என்றமுறையில் இந்தமாதிரி படங்கள், கோலம் மூலம் வரக்கூடாது என்பதே என் எண்ணம் ஆகும்.

நன்றி! 

Wednesday, March 3, 2010

சாருவை நோக்கி சில கேள்விகள்

எங்கள் ஊர்ப்புறத்தில் கல்லுணிமங்கன்களை நடுத்தெருவில் வைத்து கோபத்துடன் கேள்வி கேட்பார்கள்.  அந்த கேள்விகளுக்கு பெயர் "மானங்கெட்ட கேள்விகள்."  இதற்கு சில உப விளக்கங்களும் உண்டு.  அவற்றிற்கு பொதுவான அர்த்தம் அந்த கேள்விகளுக்கு மன்குநித்தனமான பதில் வரும் இல்லை என்றால், குனிந்துகொண்டே நிற்பான் மங்குனி.  இப்போது கவனிக்க வேண்டிய விஷயம்  சாரு பதில் சொல்லி இருக்கிறார்.

1.  2009 டிசம்பருக்கு பிறகு நித்யானநதரை பற்றி எழுதிய பன்னிரண்டு புத்தகங்களையும் முடிக்காமல் பாதியிலே நிறுத்திவிட்டேன் என்கிறீர்களே பின்ன என்ன மயிருக்கு அவரது போட்டோவை உங்கள் வலைப்பக்கத்தில் முகப்பு படமாக நேற்றுவரை வைத்திருந்தீர்கள்? (அதே கட்டுரையில் புத்தகங்களை கொடுத்துவிட்டேன் ஆனால் 4000/- இன்னும் பாக்கி என்று எழுதி இருப்பதை சாரு டச்சு என்று கொள்ளலாமா அய்யா?)

2. எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் சாரு (தன் தாயை பற்றி கூட) நித்யாவின் வீட்டில் அலைந்து கொண்டிருந்த செக்ஸ் அழகிகளை பற்றி ஏன் முன்னமே போட்டு உடைக்கவில்லை?.

3. கும்பகோணத்தில் ஒரு குடிசைப் பள்ளிக்கூடம் எரிந்து 90 குழந்தைகள் எரிந்து போனார்களே, அதுவும் மங்களமா?” என்று ஏன் நித்யாவிடம் கேட்கவில்லை?

4. சொஸ்தப்படுத்துபவர்கள் என்ற பிரிவில் உங்களுக்கு உடன்பாடு இல்லாத பட்சத்தில் அதை சிலாகிதித்து எழுத காரணம் ஒருவேளை அந்த நேரத்தில் நீங்கள் அடைந்த உன்மத்த நிலையே என்று நாங்கள் கொள்ளலாமா?

5. நீங்கள் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவர் என்பதற்கு நீங்கள் அசைவம் சாப்பிடுவதை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்; எனில், அசைவம் சாப்பிட்டால்தான் அவன் முஸ்லீம் என்று நாங்கள் பொருள் கொள்ளலாமா?

6. "ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களின் ஒரே செல்ல மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே நித்யானந்தரின் ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்து விட்டாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது"  எனில் நீங்கள் முதலிலே இதை அம்பலப்படுத்தாமைக்கு காரணம் உங்களுடைய சிந்தித்து முடிவெடுக்கும் பொறுமை என்று கொள்ளலாமா?

7. ஒரு பெண் ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது அவளுடைய அந்தரங்கம்.  அதையும் மீறி அவளுடைய போட்டோவை உங்கள் வலைப்பக்கத்தில் பல கோணங்களில் போட்டு இருக்கிறீர்களே உங்கள் நியாயம் நியாயந்தானா? (இதில் உள்ள வக்கிரங்களையாவது சாரு நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது அவரது வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்)

 8.  நீங்கள் மந்திரித்துவிட்ட ஆடாக மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ஆக்கி கொண்டிருந்தீர்களே அப்போது சுவாமிஜி என்ன செய்துகொண்டிருந்திருப்பார் என தங்களின் கற்பனை திறனை கொண்டு எங்களுக்கு விளக்கமுடியுமா?

நீங்கள் எங்கள் ஊரின்  கல்லுணிமங்கன் போன்றவர் என்பதால் இக்கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்லாமல் திசை திருப்பவே முயலுவீர்கள் என்பது நான் உட்பட உங்கள் வாசகர்கள் அனைவருமே அறிவோம்.   ஆனாலும் அவர்களையும் மந்திரித்துவிட்ட ஆடுகளாகவே ஆக்கிய வித்தைகளை எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்று அறிய நான் விரும்புகிறேன்.

நான் உங்களை நோக்கி இந்த பதிவை எழுத காரணம் நித்யாவை பற்றிய உங்கள் பதிவு மட்டுமல்ல, நீங்கள் யாருக்கோ ஜால்ராவாக மாறி, அதன் பொருட்டு பல தரமான எழுத்தாளர்களை அவதூறு செய்கிறீர்கள்.  தயவு செய்து நிறுத்துங்கள், உங்களுடைய சிறந்த கட்டுரைகளான மைக்கேல் ஜாக்சன், ஏ ஆர் ரகுமான் போன்ற கட்டுரைகளை எழுதுங்கள்.  உங்களின் தீவிர வாசனாக நான் அதையே பெரிதும் உங்களிடமிருந்து உங்கள் அசரவைக்கும் மொழியில் எதிர்பார்க்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நித்யாவுக்காக உங்கள் வலைப்பக்கத்தில் விளம்பரம் செய்துவிட்டு, இன்று 2009-லேயே  அவரை விட்டு விலகிவிட்டேன் என்று கதை விடுகிறீர்கள்.  எங்கள் ஊரில் இதற்கு பெயர் களவாணித்தனம்.

உங்களுடைய களவாணித்தனம் அம்பலப்படுத்தப்படும் போதெல்லாம் நீங்கள் விடும் டைலாக் பிரசித்தி பெற்றது; "தன்னைப்பற்றிய புனைவாகவே அதை எழுதினேன்" என்பீர்கள்.  தயவு செய்து சாரு... இன்னும் தோடர்ந்து உங்கள் வாசகர்களை ஆட்டு மந்தைகளாக்குங்கள்.  ஆனால் பிற எழுத்தாளர்களை அவதூறு செய்யாதீர்கள்.....

Tuesday, March 2, 2010

கர்ண மோட்சம்

நம் நாட்டின் தொன்மையான கலைகளின் இன்றைய நிலையை, அக்கலையையே வாழ்கையின் அடிப்படையாக கொண்ட மக்களின் வாழ்வை, அருவருப்பான காட்சியமைப்புகள் கொண்ட சினிமா என்ற மீடியத்திடம் பலி கொடுத்திருக்கிறோம். நுட்பமான் விஷயங்களை தமிழர்கள் அவதானிப்பதில்லை; மாறாக, குரூரம் தடவப்பட்ட பொதுப்புத்திகளை வெற்றியும் பெற வைக்கிறார்கள் என்பதை சமீபத்திய திரைப்படங்களின் சாராம்சமும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளும், பத்திரிக்கைகளும் நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை வைத்து வியாபாரமும் செய்து வருகின்றன.

கலையின் உண்மையான தேடல்கள் கொண்ட கலைஞர்களை நாம் ஓட ஓட துரத்துகிறோம் என்பதற்கு தமிழில் நூறு கலைஞர்களை காட்ட முடியும். இதற்கு முழு காரணமாக நான் கருதுவது தமிழர்களின் பொதுபுத்திதான். அதாவது, நேர்மையைவிட அதிகாரம் நமக்கு தரும் மயக்கம் அதிகமானது. இன்று அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அல்லது பெரும்பான்மையோருக்கு பிடித்தமானவர்களாக இருப்பவர்களுக்கு - ஒருவேளை அவர்களுடைய வெளிப்பாடு ஆபாசமானதாக இருந்தாலும் - கிடைக்கும் மரியாதையில் ஒரு துளி கூட உண்மையான ஒரு கலைஞனுக்கு கிடைப்பதில்லை.

கேளிக்கை சினிமாவின் ரசிகனாக இருந்த என்னை புத்தகங்களை நோக்கி திருப்பியவர் எஸ். ராமகிருஷ்ணன்தான். அவரது துணையெழுத்து தொடர் விகடனில் வெளிவந்த காலங்களில் அவரது ஒவ்வொரு கட்டுரையையும் பலமுறைகள் படிப்பவனாக இருந்தேன். நான் சென்னை வரும்போது பயணங்களில் என் துணையாக நான் அழைத்து வந்தது அவரது எழுத்துக்களைத்தான்.

சமீபத்தில் உயிர்மை சார்பாக நடந்த அவரது புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சின் சாராம்சம் என்னை ஆழமாக சோர்வடைய செய்தது. தான் கேளிக்கை சினிமாவுக்குள் நுழைந்தது பற்றி குற்ற உணர்வு கொள்ளவில்லை; உண்மையான கலைஞனாக மட்டுமே தான் வாழ்ந்த காலங்களில், இந்த சமூகம் தனக்கு தந்தது வறுமை மட்டுந்தான், எனவே கொஞ்சம் சம்பாதிப்பதற்கு சினிமாவில் வேலை செய்தால் என்ன தவறு பேசினார். (அவர் சினிமாவில் எழுதும் வசனங்களின் அபத்தம் கேளிக்கை சினிமாவை விட மோசமானது என்பது மறுப்பதற்கில்லை). 

எஸ். ராவின்  கதையில் உருவான கர்ணமோட்சம் என்ற தேசிய விருது பெற்ற குறும்படத்தை இணையத்தில் இரண்டாவது முறையாக இன்று பார்த்தேன்.  ஒரு எளிய கூத்து கலைஞரின் வாழ்வின் நடக்கும் சிறு சம்பவத்தை பற்றிய கதை இது.  சைதாபேட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கர்ணன் கூத்து நடத்துவதற்காக; நேரமாகிவிட்டபடியால் சின்னமலையில் இறங்கி அங்கேயே ஒரு மைதானத்தில் வைத்து கர்ண வேஷம் போட்டுக்கொண்டு, கூடவே தன் மகனையும் அழைத்துக்கொண்டு அந்த கோவிந்தன் என்ற கூத்து கலைஞர் நடந்துவரும் முதல் காட்சியே தேர்ந்த நாட்டுபுற பாடல் கலந்த பின்னணி இசையுடன் நம்மை அந்த கலைஞரின் உலகத்திற்குள் அழைத்து செல்கிறது.

அவரது மகன் கதிர் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவன்.    கோவிந்தன் கதிரிடம், "கதிர் பசிக்குதாடா, ஏதாவது சாப்பிடுகிறாயா" என்று கேட்கும் போது அதை சட்டையே செய்யாமல் தனக்கு கிரிக்கெட் பேட், பால், வெள்ளை தொப்பி வேண்டும் என்று கேட்கிறான்.  கூத்து முடிந்தபின் தனக்கு  கிடைக்கும் பணத்தில் வாங்கித்தருவதாக கோவிந்தன் சொல்கிறார்.  இருவரும் கொஞ்சதூர நடைபயணத்தில் பள்ளியை அடைகிறார்கள். ஆனால் கூத்து நடக்கவிருந்த பள்ளியில் யாருமே இல்லாததை கண்டு கோவிந்தன் கலவரத்துடன் பள்ளியின் உட்புறம் செல்கிறார்.  அங்கே அந்த பள்ளியின் வாட்ச்மன் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

கோவிந்தன்  அவரிடம் தான் வந்த விஷயத்தை கூறுகிறார்.  அதற்கு வாட்ச்மன் அந்த பள்ளியின் தாளாளர் இறந்து விட்டதாகவும், எனவே பள்ளி அன்றைய தினம் விடுமுறை என்றும் கூறுகிறார்.    மேலும் விபரம் தெரிய வேண்டும் என்றால் பள்ளியின் பிரின்சிபாலை தொடர்பு கொள் என்று கூறி பிரின்சிபாலின் நம்பரை கோவிந்தனிடம் கொடுக்கிறார்.  நம்பரை பெற்றுக்கொண்ட கோவிந்தன் ஒரு பப்ளிக் பூத்திலிருந்து பிரின்சிபாலுக்கு போன் செய்கிறார்.  போனில் பிரின்சிபால் கோவிந்தனிடம், "உங்களை அடுத்தமாதம் கண்டிப்பாக நிகழ்ச்சி நடத்த அழைக்கிறேன்" என்று கூறுகிறார்.  உடனே கோவிந்தன், தான் ஐம்பது ரூபாய் மட்டுமே கொண்டுவந்ததாக கூறவும், பிரிசிபால் தன் வீட்டுக்கு வந்தால் ஊர் செல்வதற்கு பணம் தருவதாக கூறுகிறார்.  கோவிந்தன் எப்போது வரவேண்டும் என்று கேட்டதற்கு தான் முட்டுக்காடு சென்றிருப்பதாகவும், வருவதற்கு ஏழு மணி ஆகும் என்றும் பிரின்சிபால் கூறுகிறார். 

பிரின்சிபாலின் வீடு மந்தைவெளியில் இருக்கவும், வாட்ச்மேனிடம் அட்ரஸ் வாங்கிகொண்டு  மந்தைவெளியை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்.   கதிர் மறுபடியும் கோவிந்தனிடம், எனக்கு கிரிக்கெட் பேட் வாங்கி தருகிறேன் என்று சொன்னாயே, இப்போது வாங்கிதா என்று அடம்பிடிக்க, கோவிந்தன் கோபத்தில், நானே ஏழுமணிவரை பணமில்லாமல் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு கிரிக்கெட் கேட்கிறதா என்று திட்டிக்கொண்டே கதிரை ஒரு பிளாட்பார ஹோட்டலுக்கு கூட்டிசெல்கிறார்.  இதனால் கோபமடையும் கதிர், கோவிந்தனை பார்த்து, பேசாமல் நான் ஊரிலயே கிரிக்கெட் விளையாடிக்கொன்ன்டிருந்திருப்பேன், பேட் வாங்கிதருகிறேன் என்று ஏமாற்றி என்னை கூட்டிவந்துவிட்டாயே, நீயெல்லாம் ஒரு கர்ணனா என்று திட்டுகிறான்.

பின்பு, இருவரும் பிளாட்பார சேரில் அமர்கிறார்கள்.  ஹோட்டல் காரனிடம் ஒருவர் காப்பி சரியில்லை என்று சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்.  அதற்கு ஹோட்டல் முதலாளி, நீ கொடுக்கிற ஒன்னாரூபாக்கு ஹார்லிக்ஸா கொடுக்கமுடியும் என்று கத்துகிறான்.  கோவிந்தனும் அதை ஆமோதித்தவாறே, நிஜந்தானே இந்தகாலத்தில் ஒன்னாருபைக்கு யார் காபி தருகிறார்கள் என்று கூறிக்கொண்டே இட்லி எவ்வளவு என்று கேட்கிறார்.  கடைக்காரர் 1.50 ரூபாய் என்று சொன்னவுடன் தன் பாக்கெட்டில் எவ்வளவு இருக்கிறது என்று பார்கிறார், வெறும் 20 ரூபாய் மட்டுமே இருக்கவும், ஒரே ஒரு வடை மட்டும் வாங்கி கதிருக்கு சாப்பிட தருகிறார்.  தனக்கு தண்ணீரே போதுமென்றெண்ணி, கடைக்காரரிடம் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி குடித்தபின், தாகம் அடங்காமல் இன்னும் ஒரு டம்ளர் தண்ணீர் கொடு என்று கேட்கிறார்.  அதற்கு கடைக்காரன், நீ வாங்கிய ஒரு வடைக்கு ரெண்டு டம்ளர் தண்ணியெல்லாம் தரமுடியாது, வேண்டுமென்றால் வாட்டர் பாக்கெட் வங்கி குடி, இல்லையென்றல் பைப்பில் போய் குடித்துக்கொள் என்கிறான்.

இதைஎல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவனது கடையில் வேலை பார்க்கும் சிறுமி தன் கவனக்குறைவால், இட்லியை பாத்திரத்தில் எடுத்துவைக்கும் போது, கைதவறி கீழே போட்டுவிடுகிறாள்.  கடைக்காரன் அவளை ஓங்கி ஒரு அடி அடித்தவாறே அய்யோ பாவம் ஊமையாயிற்றே என்று வேலை கொடுத்தால் அலட்சியமாகவா இருக்கிறாய்.  ஒழுங்காய் இரு அல்லது பழையபடி ரயிலில் பிச்சைஎடுக்க போய்விடு என்று கண்டிக்கிறான்.

கோவிந்தன் எழுந்து நடந்து சென்று பக்கத்திலிருக்கும் டேங்கில் தண்ணீர் குடித்துவிட்டு அமர்ந்திருக்கும்போது, தண்ணீர் பிடிப்பதற்காக அந்த சிறுமி வருகிறாள்.  தன்முன்னே வந்து நிற்கும் அவளிடம் உன் பெயர் என்னம்மா என்று கோவிந்தன் கேட்கிறார்.  ஜானகி என்ற தன் பெயரை மண்ணில் எழுதி காட்டுகிறாள்.  மிக நல்ல பெயர் என்று அவர் பதில் சொல்லும்போது, உங்கள் பெயர் என்ன என்று ஜானகி சைகையாலே கேட்கிறாள்.  கோவிந்தன் அவளிடம், "என் பெயர் கோவிந்தன்; கூத்து தெரியுமா கூத்து, அதுல கர்ணவேஷம் கட்டுறவன்.  கர்ணன் யாரு தெரியுமா?, பாரத கதையில் வருவான்.  சிவாஜி கணேசன் கூட ஆக்டு குடுத்திருக்காரு.  கர்ணன் என்ன செய்வான் தெரியுமா, என்ன கேட்டாலும் தருவான்.  இந்த பூமிய ஒருத்தன் கேட்டானு வை, இந்தா வச்சிக்கோன்னு குடுத்துருவான்.  இந்த உசுர ஒருத்தன் கேட்டான்னு வையி, அதையும் தந்துருவான்.  கூத்துல அய்யாதான் கர்ணன்.  இப்படியே வந்து நின்னு ஒரு கிறுக்கிசுத்தி பாடினேன்னு வச்சுக்கோ, ஊர் மொத்த ஜனமே கைதட்டும்.   ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம்; இப்பல்லாம் எங்க கூத்து நடக்குது, டிவி பெட்டி வந்து எல்லாத்தையும் முழுங்கிடுச்சி.  உனக்கு கூத்து பிடிக்குமா?  உன் வயசுல நான் கூத்து கத்துக்கிட்டேன்.  வாத்தியார் யார் தெரியுமா செஞ்சி துரைசாமி தம்பிரான்.  காணிக்கை எல்லாம் வச்சி குடுத்து சேர்ந்தேன்.   அவரு வீட்டுலேயே வச்சு அலகு கத்துக்கணும்.... சொந்த பிள்ளை மாதிரி வச்சி பாத்துக்கிட்டாரு.  பதினைஞ்சி வருஷம் அவரு கூடவே இருந்தேன்.  அப்பெல்லாம் கூத்து தொடர்ந்து பதினெட்டு நாட்கள் நடக்கும்.  ஜனங்க ராத்திரி பூராவும்  முழிச்சிருந்து பாப்பாங்க.  இன்னிக்கு அந்த பாட்டெல்லாம் காத்தோட போச்சு.   எப்பேர்பட்ட கலை!.. எத்தனைபேர் உயிரைகொடுத்து காப்பாத்தினது.  இப்ப யாருமில்லாம போச்சு.  என் மனசு கேட்காம உன்கிட்ட சொல்லுகிறேன்.  உனக்கு புரியுதோ, புரியல்லையோ..... என் வேதனைய பகிர்ந்துக்க யார் இருக்காங்க?  (இந்த வசனங்களை கோவிந்தன் பேசும்போது அவர் கண்களில் காட்டும் வேதனையை எழுத்தில் கொண்டுவருவது, ஓர் புனைகதை எழுத்தாளனுக்கே கூட சாத்தியமில்லாததுதான்.  அளவைமீராத கச்சிதமான உரையாடலும், தேர்ந்த அவரது நடிப்பும், ஜானகியின் முகபாவங்களும், எவர் இதயத்தையும் தாக்கக்கூடிய வல்லமை கொண்டவை.  இதே கதை வசனத்தை எழுதிய கைகள் சண்டைகோழி போன்ற முட்டாள்தனமான படங்களுக்கு எழுதுவதை தாங்கும் குணம் எனக்கு இல்லை).

இதே நேரத்தில், கடைக்காரன் குச்சியுடன் அடிப்பதற்காக வருவதை கண்ட ஜானகியும் கிண்டந்தனும் வேதனையுடன் பிரிகிறார்கள்.   அவன் அவளை அடித்தவாறே, "போனோமா வந்தோமான்னு  இல்லாம கண்டவனோட என்ன பேச்சு" என்கிறான்.  அதை கோவிந்தன் வேதனையுடன் பார்க்கிறார்; கூத்தில் கர்ணனாக அவர் கொள்ளும் உக்கிரம் அவருக்கு ஞாபகம் வருகிறது.  அதை காட்சி படுத்திய விதம் அருமையானது.

ஆனால் தன் இயலாமையை எண்ணி அவர் வேதனையுடன் தலையை கவிழ்ந்தவாரே பெஞ்சில் அமர்ந்திருக்கும்போது, மறுபடியும் ஜானகி அவரிடத்தில்  வருகிறாள்.  நடுங்கிய குரலுடன் நிமிரிந்து அவளை பார்த்து, அந்த ஆள் உன்னை ரொம்ப அடிச்சானா?  என்று கேட்கிறார்.  தான் அவருக்காக மறைத்துவைத்து கொண்டுவந்திருந்த இட்லிகளை சாப்பிடுவதற்காக அவரிடத்தில் தருகிறாள்.  அதை கடைக்காரன் கவனித்துவிடுவானோ என்று பயந்தபடியே, கடைக்காரன் வரவில்லை என்று உருதிபடித்திக்கொண்ட பின்பு சோகம் ததும்பும் கண்களுடன் இரு கைகளையும் ஏந்தி அவளிடமிருந்து இட்லிகளை வாங்கிக்கொள்கிறார்.
 
அப்போது பின்னணி இசையாக ஒலிக்கும் நாட்டுபுற பாடலான “கேட்ட போருளளிக்கும் வரம் பெற்ற கர்ண ராஜன் நான்," கர்ண வேஷம் போடும் இன்றைய கூத்து கலைஞன் தானமாக பெற்று மறைவாய் உண்ண வேண்டிய அவலத்தை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லுகிறது.  சாப்பிட்டு முடித்தவுடன், கோவிந்தன் ஜானகிக்கு கூத்து கற்றுக்கொடுக்கிறார்.  முதலில் குருவணக்கம் கற்றுகொடுத்த பின்பு, தாம்தக்க தக்கத்திக்க தாம்தக்க தக்கத்தை... என்று கூத்தாடியபடியே அவளையும் ஆடச்சொல்கிறார்.
 
அவள் ஆடத்தொடங்கிய அடுத்த கணம், கடைக்காரன் கோபமாக வந்து அவள் முகத்தில் காப்பியை ஊற்றிவிட்டு, நாலு இட்லி வாங்க காசில்லாம தெருத்தெருவா சுத்திகிட்டு இருக்கிறாய், இதுல கூத்து கத்துகொடுத்து வேற இவள கெடுக்க போறியா?  போயா உன் வேலையை பார்த்துக்கிட்டு என்று அவளை கூட்டி சென்றுவிடுகிறான்.  வேதனை தோய்ந்த முகத்துடன் தலையை கவிழ்ந்து கொள்கிறார். அவரது பழைய நாடக காட்சி அவர் கண்முன் விரிகிறது. அதிலே, அவர் கர்ணனாக பேசும் வசனம் இதோ: ஹேய் காவலா, என்னிடம் யார் வந்து எந்த பொருளை கேட்டாலும், அந்த பொருளை இல்லை என்று சொல்லாமல், வாரி வாரி வழங்கி கொடை வள்ளல் என்று பெயர் பெற்றவன்.  என்னிடம் தானம் பெற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

"அஞ்சை பஞ்சைகள்  பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பாருங்கோ கீர்த்தி வடைத்தேன் 
தன கர்ணன் என்று"

பின்பு சோகமாக திரும்பி அவர் சென்றுகொண்டிருக்கும்போது, அவரை பார்த்த கதிர், “ஐயோ கூத்தாடி வந்துட்டார் என்று சொல்லிக்கொண்டே அவரை நோக்கி வருகிறான். அப்பொழுது பாத்திரம் துலக்கிகொண்டிருந்த ஜானகி, அதை பாதியிலே விட்டுவிட்டு, வேகமாக ஓடிவந்து மூச்சிரைத்தவாறே நின்று அவருக்காக தான் கொண்டு வந்த ஒரு ரூபாய் அணாவை கொடுக்கிறாள்.  அப்போது பின்னணியில் ஒலிக்கும் ஒரு மோசமான  (இது என் கருத்து) இசையை, உடனே அவள் குருவணக்கம் செய்யும்போது ஒலிக்கும் மனதை வருடும் இசை சீராக சமன் செய்கிறது.

ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு  திரும்பிப்பாராமல் அவள் ஓடுவதை கண்ணீர் மல்க கோவிந்தன் பார்த்துக்கொண்டே நிற்கிறார்.  பெருமதிப்புடைய வெகுமதியை (ஒரு உண்மையான கலைஞனுக்கு உண்மையான  ரசிகனிடமிருந்து  கிடைக்கும் பரிசைவிட உயரியது எது?) பெற்றுக்கொண்ட பெருமையுடன் பிரின்சிபாலின் வீட்டை நோக்கி நடக்கிறார். 

"அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பாருங்கோ கீர்த்தி வடைத்தேன்
தன கர்ணன் என்று..."
என்ற நாட்டுபுற பாடலுடன் படம் முடிவடைகிறது.

உண்மையான கலை தவறான அதிகாரத்தை எதிர்ப்பது அல்லது அதற்கெதிரான தீவிர மௌனத்தை கோருவது. இதையும் இன்றைய சூழியலுக்கு எதிரான அழகியலாகவே நான் காண்கிறேன்.

இந்த குறும்படத்தில் சொல்லப்பட்டது ஒரு கதை மட்டுமல்ல. ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்தப்பட்டவை சமூகத்தின் இறுக்கங்களும், வேதனைகளும், சக மனித துவேசங்களும் தான். அனைத்து காட்சிகளுமே சமூக அவலம் அல்லது சமூக உன்னதங்களின் படிமங்கள் தான்.

காட்சி வாரியாக விவரிக்கும ஆவல் என்னிடம் உள்ளது, ஆனால் படத்தை பார்க்கும் ஒருவர் பெரும் அனுபவம் அதைவிட  அலாதியானது என்றே நான் கருதுகிறேன்.

இதை இயக்கிய முரளி மனோகரும், கோவிந்தனாக நடித்த ஜார்ஜும், கதிர், ஜானகி, மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பாராட்டதாக்கவர்கள். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, Titling மற்றும் இன்னபிற  தொழில்நுட்பங்கள் பற்றி நான் பேசப்போவதில்லை.   அது ஒவ்வொருவரும் படம் பார்த்து அனுபவிக்கவேண்டியது.  அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

http://www.youtube.com/watch?v=3W87_I79JKA
http://www.youtube.com/watch?v=PgcqGpl3OqM


http://www.sramakrishnan.com/view.asp?id=374&PS=1