Monday, March 15, 2010

கேணி-நாஞ்சில் நாடன் சந்திப்பு

  கேணி நடத்தும் பத்தாவது சந்திப்பு இது.  இதில்
கலந்துகொண்ட ஆளுமைகளை  ஒப்பீட்டளவில்  நோக்கும்போது, கேணி தனது வாசகர்களுக்கு அளிக்க விரும்பும் வீச்சை புரிந்துகொள்ள முடியும்.  இலக்கிய வட்டாரத்தில் சுந்தர ராமசாமி அணி நகுலன் அணி என்ற இரண்டு அணிகளாக பல இலக்கியவாதிகள் சிலரால் பிரிக்கப்படுவதை கவனித்திருக்கிறேன்; ஒருக்கால் அது உண்மையெனின், சு.ரா. அணி மீதே எனக்கு ஒரு மயக்கம் உள்ளது.  நாஞ்சில் நாடன் கதையுலகம் மற்றும் நாவல் உலகம் பற்றிய சு.ராவின் கட்டுரையை சமீபத்தில் அவரது ஆளுமைகள் மதிப்பீடுகள் என்ற நூலில் படிக்க நேர்ந்தது.   நாஞ்சில் நாடனை பற்றிய சிறந்த பதிவுகளில் அதுவும் ஒன்றாகவே இருக்கக்கூடும் என்றே நான் கருதுகிறேன்.  நாஞ்சிலை முழுதும் படிக்காமல் முடிவுக்கு வருவது தவறென்றே அவரது "சூடிய பூ சூடற்க" தொகுப்பின் முதல் மூன்று கதைகளை படித்தபின்பு உணர்கிறேன்.


            தமிழின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரை சந்திக்கப்போகிறோம் என்கிற ஆர்வம் அறிவிக்கப்பட்ட நாட்களிலிருந்தே இருந்தாலும், அன்று கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது.  அரை மணிநேரம் முன்னதாகவே சென்றுவிட்டபடியால் இரண்டாவது வரிசையிலே இடம் கிடைத்தது.  சந்திப்பு சரியாக 3:40 க்கு தொடங்கியது.

      நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப்பேசிய ஞாநி கேணியின் வருங்காலத்திட்டங்கள் பற்றியும் நாஞ்சில் நாடனுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.  தனது படைப்புகளுக்கு வித்தியாசமான பெயர்கள் சூட்டுவதில் ஜெயகாந்தனும் நாஞ்சில் நாடனும் தன்னை கவர்ந்தவர்கள்.  நாஞ்சில் நாடனின் மாமிசப்படைப்பு படித்தது முதற்கொண்டே நாஞ்சில் நாடனை நினைக்கும் போதெல்லாம் அவரது படைப்பின் தலைப்புகளும் நினைவுக்கு வருவதை குறிப்பிட்டார்.

ஞாநியின் உரையைத்தொடர்ந்து நாஞ்சில் நாடன் தனது பேச்சை துவக்கினார்.  என் வாழ்நாளில் மொழியை இவ்வளவு லாவகமாக கையாளக்கூடிய ஒருவரை அல்லது பேச்சை கேட்டதில்லை.  நாஞ்சிலுக்கு எந்த தலைப்பும் கொடுக்கப்படவில்லை; அவராகவே மொழி பற்றிய தனது தரவுகளை "சுதந்திரமாக"  பேசினார்.  அவரது பேச்சின் சாராம்சத்தின் சிறு  பகுதியை அளிக்கிறேன்.

ஒரு எழுத்தாளனுக்கு ஊர் சுற்றுதல் என்பது அவரது எழுத்திற்கான வேர் ஆகும்.
என்னை,  ஜெயமோகனை உருவாக்கியது இந்த ஊர் சுற்றல்தான்.  பல்வேறு மனிதர்களையும், சூழல்களையும், பிரதேசங்களையும் காணும்தோறும் மனது கற்பனைகளை விவரித்துக்கொண்டே செல்கிறது.  தன் சொந்த மண்ணையும் புதிதாக காணும் நிலத்தின் கூறுபாடுகளையும் ஒரு எழுத்தாளன் தன் மனதிற்குள் பின்னிக்கொண்டே செல்கிறான்.  புதிய வெளிகள் புகுத்தப்பட்டு ஒரு தேர்ந்த எழுத்தாளனால் இலக்கியம் செரிவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

தான் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக பாம்பேயில் வாழ்ந்ததை பற்றி கூறியபின் தன் மண் மீதான பிடிப்பு எவ்வாறு உருக்கொண்டது  என்பதை பகிர்ந்துகொண்டார்.  பம்பாயில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மகாபாரதத்தை முறையாக ஒரு குருவிடம் கற்றிருக்கிறார்.  இடையிடையே தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி, மற்றும் பல்வேறு சங்க இலக்கியங்களை தனது குருவிடமிருந்து கற்றிருக்கிறார்.

எப்போதோ எழுதிய தனது கதையை எதேச்சையாக ஒரு சிறுபத்திரிக்கைக்கு அனுப்ப அது பிரசுரமானது மட்டுமின்றி அவ்வாண்டின் சிறந்த கதையாகவும்
தேர்வுபெற்றிருக்கிறது.  அதிலிருந்து தொடங்கியது நாஞ்சிலின் இலக்கிய பங்களிப்பு.  ஆரம்பக்கட்டத்தில் தீவிர திராவிட இயக்க அபிதாபியாக இருந்த நாஞ்சில் நாடன், பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்ததன் பொருட்டு, பலவகையான மொழிகளின் கூறுபாடுகளை கூர்ந்து நோக்கி, தமிழ் மட்டுமல்ல அனைத்து மொழிகளுமே தனித்தனி சிறப்புகளை கொண்டவையே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.  காளிதாசன் விளையாடிய ஒரு மொழியையோ, காண்டேகர் பயன்படுத்திய ஒரு மொழியையோ, பஷீர் எழுதிய ஒரு மொழியையோ தான் எவ்வாறு வெறுப்பது; அம்மொழிகளை பேசுவோரிடம் எனக்கு கருத்து மோதல்கள் உண்டு, ஆனால் மொழியுடன் எந்த பகைமையும் இல்லை என்றே கூறினார்.

ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கென கொண்டிருக்கவேண்டிய மொழிக்கட்டமைப்பு, தொழில்நுட்பம் பற்றிய நாஞ்சிலின் அவதானிப்பு விரிவாக அவரால் விளக்கப்பட்டது.
தான் பயன்படுத்தும் மொழி பற்றிய பிரஞ்ஞையை விரிவான விளக்கங்களுடன்
வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.  பொதுத்தமிழில் அன்றாடம் பயன்படுத்தப்படும்
சுமார் 1200 வார்தைகளைத்தாண்டி எழுத்தாளன் கையாளவேண்டிய வார்த்தை பிரயோகங்களை தான் பயன்படுத்தும் மொழிகொண்டே விளக்கினார்.  வார்த்தைகள் மீதான அவரது காதலை மிக ஆழமாகவே ஒரு வாசனாக என்னால் உணரமுடிந்தது.  வையாபுரி பிள்ளை போன்றோரால் தொகுப்பட்ட ஒருலட்சத்துக்கும் அதிகமான வார்த்தைகளுக்கும் அதிகமான வார்த்தைகளுக்கு பொருள் கொண்ட  தமிழகராதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படாமலே நிராகரிக்கப்படுகிறது மற்றும் தான் அவைகளிலிருந்து பெற்றுக்கொண்டது என்ன என்பதுபற்றி வெகு விரிவாகவே பேசினார்.  பெருமாள் முருகன் முதலான பலரும் தொகுத்துள்ள அகராதிகள் பற்றியும் அவற்றிலுள்ள சொற்கள் எவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து தற்காலம் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது பற்றியும் அவர் கூறிய செய்திகள் ஆழமும் விரிவும் கொண்டவை. 

நாஞ்சில் நாடனின் விரிவான உரைக்குப்பின்பு வாசகர்களின் கேள்விநேரம் தொடங்கியது.  வழக்கம்போலவே மிகமிக பொதுப்படையான ஆழமற்ற கேள்விகளே கேட்கப்பட்டன.  சில வாசகர்களின் கேள்விகள் கண்டிப்பாக சிந்திக்கத்தூண்டின.  அதில் என்னைக்கவர்ந்தது, ஒரு ஆசிரியை கேட்ட கேள்விகளே.  இன்றைய தமிழாசிரியர்கள் பலரும் தமிழில் குறைவாகவே புலமை வாய்க்கப்பெற்றவர்களே.  இதை மாற்றுவதற்கு என்ன வழிகள்?  இதற்கான நாஞ்சிலின் பதிலும் மிகவும் சிறப்பாகவே இருந்தது.

ஞாநி ஒரு கேள்வி கேட்டார்; ஒரு தேர்ந்த படைப்பாளியுடைய எழுத்து வீரியமாக இருந்தாலும் அவருடைய மோசமாக இருக்கிறது, ஆனால் மிகமிக சாதாரண எழுத்தைக்கொண்ட ஒருவருடைய படைப்பு பொதுமொழியில் எழுதப்பட்டபோதும் சிறப்பான கருத்தை கொண்டிருக்கிருக்கிறது, எனில் கொண்டாடப்படுவது எது?   எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லாத கேள்வி இது.  தேர்ந்த எழுத்துடன் மிக மோசமான புனைவுகளை எழுதும் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படவேண்டிய அதே நேரத்தில் மிகமிக பொதுமொழியில் எழுதும் எழுத்தும் கொண்டாடப்படவேண்டும் என்று அவசியம் இல்லை.   வாசகனுக்கு புரியவேண்டும் என்று எழுத்தாளர் பொதுமொழியில் எழுதவேண்டிய அவசியம் இல்லை.

கூர்ந்துகவனிக்கும் பொருட்டு, பொதுமொழியை விரும்பும் வாசகர்களின் தேர்வு மிகவும் ஜனரங்கமான படைப்புகளாகவே இருக்கும்.   மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவன் ஒன்றாம் வகுப்பையே சுற்றிக்கொண்டிருந்தானனின் அது மாணவனின் தவறே தவிர  ஆசிரியரை குறைசொல்ல யாதொரு நியாயமும் இல்லை.   இருந்தாலும் என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரையில் பொதுத்தமிழில் எழுதப்பட்ட எந்தவொரு படைப்பும் என்னுள் எவ்வித சிலிர்ப்பையும் ஏற்ப்படுத்தியதில்லை (அசோகமித்திரனின் "தண்ணீர்" என்ற நாவலைத்தவிர). 

சு.ரா என்மீது செலுத்தும் அடங்காத ஆதிக்கமும் மயக்கமூட்டும்  அவரது மொழியால் உண்டாவதுதான்.  ஜே.ஜே. சில குறிப்புகள் தந்த சிலிர்ப்பை இதுவரை எந்த எழுத்தும் எனக்கு தந்ததில்லை.   கேணியில் கூடியிருந்த பல வாசகர்கள் கூறிய-பெரிய எழுத்தாளர்கள் எழுதும் படைப்புகள் புரியவில்லை- என்ற கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை.  அவர்களின் புரியாமைக்கு காரணமாக நான் நினைப்பது இலக்கியத்தின் மீது தீவிர ஆர்வம் இல்லை, வார்த்தைகளை கூர்ந்து கவனிப்பது இல்லை, அல்லது வாசிப்பில் குறைந்தபட்ச முயற்ச்சியில்லை.

கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் வங்காளதேசம், கென்யா போன்ற மூன்றாம்தர கிரிக்கெட் நாடுகளை விரும்புவதில்லை, உண்ணும் உணவில் அழுகிய காய்கறிகளை
அனுமதிப்பதில்லை, இன்னும் பலவற்றிலும் மூன்றாம்தரத்திற்கு மதிப்பே இல்லை;  ஆனால் இலக்கியத்திலும் சினிமாவிலும் மட்டும் சங்கர்களும், சுஜாதாக்களும் கொண்டாடப்படுகிறார்கள்.  பொதுப்புத்தி போற்றி புகழப்படுகிறது.  பாலு மகேந்திராக்களும்,  புதுமைபித்தன்களும் நிராகரிக்கப்படுகிறார்கள்.

நான் பழகிய எந்த பெண்ணும் இலக்கியத்தின்பால்  ஈர்க்கப்பட்டவள் அல்ல.  அதிலும் அழகான பெண்களுக்கு நான் அறிந்தமட்டும் இலக்கியம் எட்டிக்காய்.  ஆனால் இன்றைய கூட்டத்துக்கு ஒரு அழகான பெண் வந்தாள்.  நாஞ்சில் நாடனின் பேச்சை கூர்ந்து கவனித்தாள்.  அவரது ஒவ்வொரு கருத்துக்கும் தலையாட்டிக்கொண்டே இருந்தாள்.  எனக்கு அது நிறைவாய் இருந்தது.

இதுவரை கேணியின் ஆறு கூட்டங்களில்  கலந்துகொண்டிருந்தாலும், நான் இதுவரை ஒரு கேள்விகூட கேட்டதில்லை; இன்றும் அப்படித்தான்.  நாஞ்சில் நாடனுக்கு சு.ராவினுடனான அனுபவங்கள் பற்றி கேட்க ஆர்வமாக இருந்தது; ஆனால் கேட்கவில்லை.   தற்போது நடக்கவிருக்கும் உலகத்தமிழ் மாநாடு பற்றிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் நிதரிசனமானவை.   அதிகாரங்களின் அராஜகங்களை எழுத முற்பட்டால் கைகள் நிர்கதியாகவும், கண்களில் இரத்தமுமே மிஞ்சும்.  ஆனால் இதைப்பற்றிய தனது தீர்க்கமான பதிவுகளை எந்த எழுத்தாளருமே தற்காலத்தில் பதிவு செய்யவே இல்லை என்றே எண்ணுகிறேன். 

என்ன எழுதுகிறார் என்பதை என்பதை விட எப்படி எழுதுகிறார் (திரைப்படத்துக்கும்
இது பொருந்தும்) என்றே கவனிக்கும் எனக்கு, நாஞ்சில் நாடன் அவரது பேச்சில்
சொற்களின் வாசனையை வாசகனையும் நுகரவைத்தமை புதிய அனுபவத்தை தந்தது.  அவரது "சூடிய பூ சூடற்க" மற்றும் "காவலன் காவான் எனின்" ஆகிய இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.  வரும் வழியில் பதிவர் கிருஷ்ணபிரபு  நடந்து சென்றுகொண்டிருந்தார்.  வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள் பிரபு என்றேன்.  சிறிது தயங்கியவர், நான் நடந்தே வருகிறேனே என்று சொல்லிவிட்டார்.

வீடு வந்ததும்  என்னை முதலில் வாசிக்கத்தூண்டியது சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுப்பு புத்தகம்தான்.  இதுவரை என்னை அலைக்கழித்த சிறுகதைகள்
மகாமசானம், மாடன் மோட்சம், ரத்னாபாயின் ஆங்கிலம், எங்கள் டீச்சர் போன்ற வெகுசில கதைகளே.  இவை அனைத்துமே கதை சொல்லல் முறையில் தன் உச்சத்தை தொட்டவை.    இந்த வரிசையில் கண்டிப்பாக சேர்க்கப்படவேண்டியது நாஞ்சில் நாடனின் "யாம் உண்பேம்".  புதுமைப்பித்தனின் மகாமசானத்தின் உச்சங்களை இக்கதையும் நிகழ்த்துகிறது.  மொழியின்பால் தனக்குள்ள பிடிப்பை நாஞ்சில் நாடன் உறுதியாக நிறுவிய கதையாகவே இதை நான் பார்க்கிறேன்.

10 comments:

  1. /-- வரும் வழியில் பதிவர் கிருஷ்ணபிரபு நடந்து சென்றுகொண்டிருந்தார்... --/

    ஐயோ, தப்பா நினைக்காதே பிரபா... எனக்கு நடை போவது ரொம்பப் பிடிக்கும். தவிரவும் நடந்து போகும் பொழுது நிறைய விஷயங்கள் கண்ணில்படுகிறது அதுதான் காரணம். மற்றபடி ஒன்றும்இல்லை.

    I hope you will take it positively...

    ReplyDelete
  2. பிரபு, அது நான் உங்களை தவறாக நினைத்து எழுதப்பட்ட வரி அல்ல. ஒரு செய்திதான். நானும் பல நேரங்களில் தனியாக நடப்பதையே விரும்புவேன். மற்றபடி, நீங்கள் என் பதிவை படித்தது, மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது

    ReplyDelete
  3. நல்ல பதிவு. ரசித்துப்படித்தேன். வாழ்துகள், பிரபாகரன்.

    அன்புடன்,
    பாரதி மணி

    ReplyDelete
  4. அருமையான பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

    சுஜாதா, ஷங்கர் பற்றிய கருத்துக்கள் உங்களின் கருத்துக்களா அல்லது நாஞ்சில் நாடனின் பேச்சா.

    ReplyDelete
  5. Dear Prabha,
    It is not Ayodhidhasa pandithar who worked on Tamil Lexicon; Nanjil nadan mentioned clearly it is Prof.Vaiyapuri Pillai; the one who worked on the one and only tamil lexicon and It is Thooran who worked on Tamil encyclopedia. And it is not perumal murugan but, A.K.Perumal who worked on "Nanjil naattu Sollakaraathi" and Kanmani Gunasekaran on "Nadu Naattu Sollakaraathi". My wishes.

    ReplyDelete
  6. //
    நான் பழகிய எந்த பெண்ணும் இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டவள் அல்ல. அதிலும் அழகான பெண்களுக்கு நான் அறிந்தமட்டும் இலக்கியம் எட்டிக்காய். ஆனால் இன்றைய கூட்டத்துக்கு ஒரு அழகான பெண் வந்தாள். நாஞ்சில் நாடனின் பேச்சை கூர்ந்து கவனித்தாள். அவரது ஒவ்வொரு கருத்துக்கும் தலையாட்டிக்கொண்டே இருந்தாள். எனக்கு அது நிறைவாய் இருந்தது.
    //

    I don't agree on this point, it seems too old fashioned and male chauvunistic.

    ReplyDelete
  7. //அவர்களின் புரியாமைக்கு காரணமாக நான் நினைப்பது இலக்கியத்தின் மீது தீவிர ஆர்வம் இல்லை, வார்த்தைகளை கூர்ந்து கவனிப்பது இல்லை, அல்லது வாசிப்பில் குறைந்தபட்ச முயற்ச்சியில்லை.//
    100% உங்களோடு ஒத்துப்போகிறேன்.

    நாஞ்சில் நாடனின் இந்த நேர்காணலைப் படித்து பாருங்கள் இன்னும் சில விவரங்கள் கிடைக்கலாம்.

    ReplyDelete
  8. புரியாத மொழி என்று ஆயிரம் வியாக்யானங்களை செய்யலாம்... சுஜாதா கிரைம் கதைகள் ஆரம்பத்தில் எழுதினார்.. அவரின் பிற்காலப் படைப்புகள் மத்யமர் போன்றவை.. மிகச் சிறப்பானவையே... நீங்கள் ஜப்பான் மொழி பேசுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால் ஒரு தமிழனிடம் பேசாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்... என் மொழியில் என்னிடம் பேசுங்கள் என்றுதான் கூறுகிறோம்.. அதைவிடுத்து நீ ஜப்பான் கற்றுக் கொள்ளாதது உன் தவறு என்று கூறாதீர்கள் என்கிறோம் அவ்வளவே... (புதுமைபித்தன் பாலு மகேந்திரா எங்கே நிராகரிக்கப் பட்டார்கள்.. இது தவறான தகவல்.. இருவரின் படைப்புகளும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவேயே..கொண்டாடப்பட்டவையே ஜெமொ... சுரா தவிர)
    கந்தசாமி

    ReplyDelete
  9. சுஜாதா மற்றும் ஷங்கர் பற்றிய கருத்துக்கள் என்னுடைய கருத்துக்களே ஆகும்.



    பதிவில் செய்யப்பட மிகப்பெரிய தவறு வையாபுரி பிள்ளை என்பதற்கு பதிலாக அயோத்திதாச பண்டிதர் என்று குரிப்பிட்டதாகும். தூரன் மற்றும் அ.கா. பெருமாள் ஆகியோரது பெயர்கள் விடுபட்டமை என் ஞாபக மறதியையே சுட்டுகின்றன. பெருமாள் முருகன் பெயரை நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதாகவே ஞாபகம், ஒருவேளை தவறாக இருக்கலாம்.



    அழகான பெண்கள் பெரும்பாலும் தமிழ் இலக்கியத்தின்பால் ஈர்க்கப்படாதவர்களே என்பதை நான் சந்தித்த பெண்களை வைத்தே சுட்டியுள்ளேன். பொதுக்கருத்தாக கூறவில்லை.



    கந்தசாமியின் கருத்துதான் என் கருத்தும். அதைத்தான் நான் பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் அவர் புதுமைபித்தன் பாலு மகேந்திரா எங்கே நிராகரிக்கப்பட்டார்கள் என்று கேட்டுள்ளார். கொஞ்சம் முயற்சிஎடுத்தால் சுஜாதா, பாலகுமாரன், மற்றும் இன்ன பிற சமையல் புத்தகங்கள் விற்பனை பற்றியும் புதுமைப்பித்தன் போன்றோரின் புத்தகங்களின் விற்பனை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். மிக மிக சிறுபான்மையான தரமான இலக்கிய அன்பர்களே சுஜாதாவை விடவும் புதுமைபித்தனை விரும்புகிறார்கள். சுஜாதா தரமான சில எழுதியிருக்கலாம், ஆனால் அவர் குப்பையான விஷயங்களுக்கு பங்களித்ததுதான் அதிகம். சந்திப்பில் ஞாநி கூறிய கருத்துதான் சுஜாதாவை பற்றி எனக்கும்.



    அந்நியன் படத்துக்கு பத்தாவது நாள் டிக்கெட் கிடைக்கவில்லை, ஜூலி கணபதி படத்துக்கு 900 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் முதல் நாள் வெறும் 25 பேர் உக்கார்ந்து படம் பார்த்தோம். இதற்க்கு பெயர் நிராகரிப்பன்றி வேறென்ன?



    நான் மிக்க மதிப்பு கொண்ட பாரதி மணி போன்றோர் என் எளிய பதிவுக்கு பின்னூட்டம் இட்டிருப்பது என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.



    மேலும், பின்னூட்டம் அளித்த ராம்ஜி யாகூ, ஜோ, ராம், rjgpal மற்றும் கந்தசாமி அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  10. samuga akkaraiodu oru pencil eduthu oru paperil kodu potta athuthan elakkiyam endru gnani munbu oru katturail eluthi irunthar, athuthan elakkiathukku mika sariyana varayarai enbathu en karuthu.ellorukkum purikira moli nadai avasiyam appadi illai endral eluthu pavarkalin nokkam kandippaka niravrrathu.

    ReplyDelete