Saturday, March 6, 2010

ஞாநிக்கு கடிதம்

அன்புள்ள ஞாநிக்கு
இந்தவார குமுதத்தில் தங்களின் ஓ பக்கங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நீங்கள் வெகுவாக பாராட்டியிருந்ததை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.  அவரது முந்தய படங்களை நீங்கள் வெறுப்பதற்கு காரணமாக நீங்கள் காட்டும் வல்காரிட்டியை நானும் சிறிது உணர்ந்திருக்கிறேன் என்றாலும் கதை சொல்லல் முறையிலும் காட்சியகப்படுத்தியதிலும் காக்க காக்க, பச்சைக்கிளி, மின்னலே போன்ற படங்கள் விண்ணைதாண்டி வருவாயாவை விட உயர்ந்தவையே.

ஒருவேளை வக்கிரம் இல்லாத படமாக அது உங்கள் பார்வைக்கு தெரிந்திருக்கலாம்.  ஆனால் இதில் வேறுமுறையான வன்முறையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதை சுட்டிக்காட்டவே இந்த கடிதம்.

கதாநாயகனின் குணாதிசயங்களாக தீவிர சினிமா கனவோ அல்லது உண்மையான காதலோ சொல்லப்படவில்லை.   22 வயதில் தோன்றும் affection உம், அந்தவயதில் சினிமாவின் கவர்ச்சியில் ஈர்க்கப்படும் மனமும் கொண்ட ஒரு அழகான இளைஞன், அழகான பெண்ணின் மீது கொள்ளும் ஈர்ப்பை காதலுக்குரிய தீவிரமோ அல்லது உண்மையான சினிமாகவோ இல்லாமல் ஏனோதானோவென்று எடுக்கப்பட்ட படமாகவே நான் பார்க்கிறேன்.

அருமையான  location-கள், குளிர்ச்சியான ஒளிப்பதிவு, மனதை மயக்கும் இசை, editing-ல் சில சாதனைகள் தவிர ஒன்றுமே இல்லாத குழப்பமான சினிமாதான் இது.  இளம்வயதில் தான் தீவிரமாக இருக்கும் ஒரு விஷயத்தில் (காதலிலும் கூட) தோல்வியடைந்தால், அதை நினைத்து சோர்ந்துவிடத்தேவையில்லை, மாறாக, புதிய ஒன்றில் தீவிரமாக முயன்றால், வாழ்க்கையில் வெல்லலாம் என்ற ஒற்றைவரி கதையைதான்  Goutham இந்த படத்திலும் வாரணம் ஆயிரம் படத்திலும்  deal பண்ணியிருந்தார்.  ஆனால் இந்த விஷயம் வாரணம் ஆயிரத்தில் கொஞ்சம் தீவிரமாக பதிவு செய்யப்படது இருந்ததது; அது, இதில் தவறவிடப்பட்டுள்ளது.

கதாநாயகன் Mechanical Engineering படிப்பை பாதியிலே விடத்துனியும் போது, சினிமாவை பற்றிய அவன் கனவு என்ன?  அவன் எடுத்ததாக கடைசியில் த்ரிஷாவுக்கு காட்டப்படும் படமும் வழக்கமான தமிழ் சினிமாதான்.  எனவே தீவிர சினிமாவில் அவன் மோகம் இல்லை என்பது நிதர்சனம்.   ஒருவன் உதவி இயக்குனராக படும் கஷ்டங்களை மிக எளிதாக துளி கூட பதிவே செய்யாமல் கடந்து செல்கிறார் இயக்குனர்.  தற்போதைய தமிழ் சினிமாவின் எலும்புருக்கி நோய்களில் ஒருவர்
கே.எஸ். ரவிக்குமார்.   அவரை வைத்து அவரது படங்களையே பகடி செய்வதற்கு கிடைத்த இடங்கள் அனைத்தையுமே தவற விடுகிறார் இயக்குனர்.

காதல் காட்சிகள் எப்படி?  த்ரிஷாவின் முகபாவங்களும், ஒப்பனையும் கர்ண கொடூரமாக இருந்தது.  அப்பா ஒத்துக்கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தன் உண்மையான(?) காதலை விட்டுக்கொடுக்கிறார் த்ரிஷா; எனில்,  அப்பா-மகள் உறவையாவது கொஞ்சம் தெளிவாக காட்டியிருக்கவேன்டாமா?  அதிலும் அவள் அண்ணன் கதாபாத்திரம் ஆபாசத்தின் உச்சம்.

ஒரு தேர்ந்த காதல் படத்துக்கு முக்கிய தேவைகளுள் ஒன்று வசனம்.  இந்த படத்தின் ஆக கொடுமையே வசனம்தான்.  நீங்கள் காஞ்சிவரம் படத்தை ஜீவன் இல்லை என்று நிராகரித்திருந்தீர்கள்.  அதே விஷயம்தான் இந்த படத்தை எனக்கு நிராகரிக்க தூண்டியது.

அனைவரின் கதாபாத்திரங்களையும் ஒப்புநோக்க எனக்கு சுந்தர ராமசாமியின் ஒரு கருத்து ஞாபகத்துக்கு வருகிறது.  அகிலனின் சித்திரப்பாவையை விமரிசனம் செய்த
 சு.ரா. அந்த நாவலின் கதாநாயகனை "அவன் ஓவியன் அல்ல; drawing master" என்று விமரிசித்து இருப்பார்.  அதேபோல் இந்தப்பட கதாநாயகனும் உண்மையான சினிமா நோக்கமோ அல்லது உண்மையான காதலோ இல்லாத சிறிது சலனமுடைய தற்கால இளைஞன் மட்டுமே.

நான் தமிழின் அனைத்து படங்களையோ அல்லது அனைத்து எழுத்தாளர்களையோ
முறையே பார்ப்பதோ அல்லது வாசிப்பதோ இல்லை.  தீவிரமான எழுத்தையும், படத்தையுமே  நான் விரும்புகிறேன்.  Craft படைப்பாளிகளை அல்ல.  அந்த விதத்தில் தொழில்நுட்பத்தையும், ஏ.ஆர். ரகுமானையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட உயர்தர மோசமான படம் இது என்பதே என் விமர்சனமாகும்.

கோலம் அமைப்பின் உறுப்பினன் என்றமுறையில் இந்தமாதிரி படங்கள், கோலம் மூலம் வரக்கூடாது என்பதே என் எண்ணம் ஆகும்.

நன்றி! 

2 comments:

  1. I haven't watched the movie yet but reading thru other reviews, I guess you could be right!

    Can you pls take off the word verification?

    ReplyDelete
  2. i have not seen the movie, but your review and approach is good

    ReplyDelete