ஒரு வாரம் முன்பு Amedius என்ற இசை மேதை மோஸார்ட் பற்றிய படம் பார்த்தேன். படம் முழுக்க இசை வழிகிறது. அது என்னை விடாமல் அலைகழிக்கிறது. உள்மனதை இசையால் வருடும் அனுபவத்தை இப்படம்போல் அளித்த படம் வேறொன்றில்லை. அப்படி ஒரு பிலிம் மேக்கிங். ஒரு மேதையைப் பற்றி இன்னொரு மேதை எடுத்த திரைப்படம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பனுக்கு அவனது காதலியின் குடும்பத்துடன் கோவளம் அருகே உள்ள தர்காவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆண்டுதோறும் அந்த திருவிழாவிற்கு ஆகும் அனைத்து செலவையும் A. R. Rahman ஏற்றுக்கொள்வது வழக்கம். காதலி, அவளது குடும்பத்துடன் வருவதால் நண்பனுக்கு என் துணை தேவைப்பட்டது, திறந்தவெளியில் A. R. Rahman இசை அமைப்பார் என்று கூறி என்னை அழைத்தான். நினைத்துப் பார்கவே கவித்துவமாக இருந்தது. நான்வேறு ரகுமான் பித்தன் என்பதால், அவர் மீது கொண்ட மோகத்தால் அன்றைக்கு அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு அவனுடன்சென்றேன். கூட்டிட்டு போனதுதான் மிச்சம் நண்பன் என் பக்கம் திரும்பவே இல்லை. இரவு முழுக்க இருவரும் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டே தீராக்காதலில் திளைத்துக்கொண்டிருந்தார்கள். கடற்கரையில் தான் தர்கா இருந்தது. நல்ல மழை வேறு. கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டே ரகுமானை பார்க்கவேண்டும் என்ற ஆவலில் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தேன். நீண்டநேரம் ஆகியும் ரகுமான் வரவேயில்லை. தூக்கம் கண்ணை சுழற்ற மயங்கி கடற்கரை மணலில் வீழ்ந்த நேரத்தில் நண்பன் எழுப்பினான். நள்ளிரவு மூன்று மணிக்கு எனக்கு சிறிது தூரத்தில் தன் சகாக்கள் படை சூழ ரகுமான் வந்தார். நான் எங்கே மேடை அமைப்பார்கள், எப்படி இந்த மழையில் அவர் பாடப்போகிறார் என்ற கடுமையான சிந்தனையில் இருந்தேன். ரகுமான் நேரே பள்ளிவாசலுக்குள் சென்றார். உள்ளே முஸ்லீம் பிரார்த்தனைப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார்கள் . ரகுமான் அவர்களுடன் கோரஸில் கலந்து கொண்டு பாடினார். அவர் இசை அமைப்பதை நேரில் பார்த்து விடலாம் என்ற பேராசையில் இருந்த எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் ரகுமானை நேரில் கண்ட மயக்கம் தீராமல் இருந்தது. பத்து நிமிடங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால் பத்து நிமிடமும் அவர் பாடுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். வாழ்வின் அட்டகாசமான தருணம் அது. ரகுமான் சென்ற பிறகு ஏமாற்றமும் ரகுமானைக் கண்ட வியப்பும் மேலிட பேக்கு மாதிரி கடற்கரையில் நின்றிருந்த என்னைத்தேடி என் நண்பன் காதலியுடன் வந்தான். இருவரும் என்னை பயங்கரமாக நக்கலடித்தனர். ரகுமானுக்காக வருவீங்க ஆனா எங்களுக்காக வரமாட்டீங்களோ? அதனாலதான் இப்படி ஏமாற்றினோம் எப்படி? என்றாள் நண்பனின் காதலி. சிரிப்பும் கேலியுமாக என்னைக் கடந்து சென்றார்கள். நாக்கெல்லாம் உப்பு கரித்தது.
அமேடியஸ் படத்தைப் பார்த்தபோது அதே சாயலில் ரகுமானின் வாழ்வை மிக உக்கிரமாக தமிழில் எடுக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. உள்ளே தீ எரியாமல் மயக்கும் இசை இவ்வாறு ஒருவரிடம் இவ்வளவு நுட்பமாக பிறக்காது. அந்த தீக்கான காரணத்தை யாரேனும் திரையில் வடித்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
(பின்குறிப்பு: அந்த நண்பனுக்கும் அவனுடைய காதலியும் கல்யாணம் கட்டிக்கொண்டார்கள். அவர்களது குழந்தைதான் போட்டோவில் என் அருகே நிற்கிறது. குழந்தை பெயர் ரோஷினி)