Thursday, September 17, 2009

கேணி

நல்ல இலக்கியங்களில் ஆர்வமுள்ள இளைகர்களிடையே தமிழின் முன்னோடி எழுத்தாளர்களை கலந்துரையாட எழுத்தாளர் ஞாநி உருவாக்கியுள்ள கேணி உற்சாகமாக நான்கு கலந்துரையாடல்களை நிறைவு செய்துள்ளது. ஞாநி என் பிரியமான பத்திரிக்கையாளராவார். கேணி-யில் பொதுவாக தீவிர இலக்கிய வாசகர்கள் பங்கேர்ப்பது குறைவு என்பது என் எண்ணம். இந்த மாதம் இயக்குனர் மகேந்திரன் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் தமிழில் தன்னைக்கவர்ந்த மூன்று ஆளுமைகளாக புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், மற்றும் கி.ரா. ஆகியோரை குறிப்பிட்டார்.

கேணி தன் உரையாடலை மூன்று தளங்களில் நிகழ்த்துகிறது. முதலில் ஞாநி உரை பின்பு பேச்சாளரின் நீண்ட உரை, அதைத்தொடர்ந்து பேச்சாளரோடு கலந்துரையாடல். ஞாநி-யின் வீடு கே.கே. நகரில் அழகிரிசாமி சாலையில் உள்ளது. அவரது வீட்டுத்தோட்டத்தில் மாலை 4:30 முதல் 6:30 வரை இந்த சந்திப்பு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதில், மாதத்தின் நான்கு ஞாயிறுகளில் ஓன்று பிரயோஜனப்படுத்தப்படுகிறது என்பது உண்மை. சில்லென்ற மாலைப்போழுதினில், கனவு எழுத்தாளர்களின் பேச்சை கேட்பது என்பது என் வாழ்க்கையில் அர்த்தப்படுத்திக்கொள்ளும் தருணமாக தோன்றுகிறது. இணையத்தின் வீச்சை ஒப்புநோக்க ஞாநி நடத்தும் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு வெறும் நூறுபேர் தான் கலந்துகொள்கிறார்கள் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. தமிழக மக்களைப்போருத்தவரை அவர்களை கிசுகிசுமூட்டும் எழுத்துக்களையே விரும்புகிறார்கள். அதைத்தாண்டி, puthumaippitthan, சு.ரா, தி. ஜானகிராமன், மௌனி.... அதைத்தொடர்ந்து சமகால படைப்பாளிகளான எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன்... என தொடரும் வாசகர்கள் மிகவும் குறைவு. இலக்கியத்துக்குள் நுழையும் என் போன்ற புதிய வாசகர்கள் இங்கே நடக்கும் சண்டையில் தலைதெறிக்க ஓடுவது தவிர்க்கமுடியாதது. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று எவரையும் வரைமுறை செய்ய இயலாது எனினும், ஒரு பெரிய எழுத்தாளர் மற்றொரு எழுத்தாளர் மீது அவதூறு மட்டும் சொல்லும்போது அவர் tதம்மைத்தாமே நகைப்புக்கு உள்ளாக்கிகொல்கிறார். ஞானியின் கேணியில் தனிமனிதர் அவதூருகளோ அல்லது வேற்றுப்புகழ்ச்சிகளோ இல்லை. இன்னும் தீவிர வாசகர்கள் பங்கேற்றால் இதன் அடுத்தக்கட்டம் இன்னும் வளம்பெறும். கலந்துரையாடலில் வாசகர்கள் கேட்கும் ஒரே மாதிரியான கேள்விகள் சலிப்பூட்டுகின்றன. ஞாநி, பாஸ்கர்சக்தி போன்றவர்கள் தங்களுடைய கேள்விகளையும், சிறப்பு விருந்தினராக வரும் பேச்சாளர்களிடம் கேட்க்கும்பொழுது, வாசகர்களின் சிந்தனையை விவரித்துக்கொள்ள ஏதுவாய் இருக்கும். இந்தமாதம் மகேந்திரன் பேசும்போது சாதனையாளர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே உள்ளனர், பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது ஏன் என்று கேட்டபொழுது அமைதியான கூட்டம், அவர், இருந்தாலும் அந்த சாதனையாளனை பெற்றது ஒரு பெண்தானே என்றபொழுது பலத்த சிரிப்புடன் கைத்தட்டியது. அதுவரை அமைதியாய் இருந்த ஞாநி குழந்தை பெறுவது பெரிய விஷயம் இல்லை, அதை எப்படி வளர்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றார்.
மகேந்திரன் மூன்று எழுத்தாளர்களைப்பற்றி பேசினாலும், அவர்கள் எவருடைய ஆழுமையையும் வாசகர் கண்முன் நிறுத்தவில்லை. அவர்களிடமிருந்து தான் பெற்றவை பற்றி விவரிக்கமுடியாது, அதை வாசகர்களே படித்தே புரிந்துகொள்ளவேண்டும், இலக்கியத்தில் நுழையும் வாசகர்களுக்கான தன் பரிந்துரை இவர்கள் என்றார். மலையாள எழுத்தாளர்கள் தன்னை மிகவும் கவர்ந்தவர்கள் என்றார். என்னைப்பொறுத்தவரை அவருக்கு இலக்கியத்தை விட சினிமா பற்றி பேசுவதற்கே அதிக தகுதிகள் உண்டு. தான் நல்ல சினிமா எடுக்கவில்லை என்பதை தான் இங்கு சொல்வது பெருந்தன்மையுடன் அல்ல, ஒரு குற்றவாளி போலீசிடம் ஒப்புக்கொள்வது போன்றது என்றார். ஆனால் சினிமாவில் அவர் சாதித்தவை மிக அதிகம். போட்டோகிராபியில் தன்னுடைய படங்களுக்கு அவர் பயன்படுத்திய விதம் மயக்கமூட்டுவது. ரஜினியை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட மிகச்சில இயக்குனர்களில் மகேந்திரனும் ஒருவர். அவரது முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள் ஆகிய இரு படங்களும் தமிழ் சினிமாவின் முக்கிய சாதனைகள். முள்ளும் மலரும் படம் எடுப்பதற்க்காக அவர் பட்ட கஷ்டங்களை அவர் விவரிக்கும் போது, தன் கஷ்ட்டத்தையும் நுண்ணிய நகைச்சுவைடன் விவரிக்கும் பேரழகனாக நான் அவரை கண்டேன். அவர் அன்று பேசிய பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. ரஜினி இவ்வளவு மகா மோசமான படங்களை தருவதற்கு, மக்களும் இயக்குனர்களும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்றார் . நான் ரஜினியின் பல அபூர்வ நடிப்பை பல பாடங்களில் கண்டிருக்கிறேன், ஒப்பனைகள் தவிர்த்து அவர் கமலுக்கு இணையான நடிகர்தான், ஆனால் அவர் மோசமான படங்களை தேர்ந்தெடுப்பதற்கு அவரே காரணம். ஹீரோயிசம் இல்லாமல் அவர் தேர்ந்தெடுத்தவை நல்ல கதைகள் என்றாலும் படுமொசமான் இயக்குனர்களையே அக்கதைகளை இயக்குவதற்கு தேர்ந்தெடுத்தார் (வாசு, k.s. ரவிக்குமார், ஷங்கர்..). புதிய கதைகளையோ அல்லது திறமையான புது இயக்குனர்களையோ தேடிப்பிடித்து தன் நடிப்புக்கு தீனி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அமிதாப்பச்சனுக்கு உள்ளதுபோலே ரஜினிக்கு இல்லை. இவ்வளவு பெரிய நிலைக்கு வந்தபின்னும், நல்ல படங்களில் நடிப்பதற்கு தைரியம் இல்லாதவர், குறைந்தபட்சம் புதிய நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே. ஷங்கர் செய்யும் நல்ல விஷயம், தான் மோசமாக படம் எடுத்தாலும், இந்த விஷயத்தில் முற்றாக ரஜினியை புறக்கணிப்பதுதான்.

இப்போது எழுதிக்கொண்டிருப்பவர்களில் யார் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று கேட்டபொழுது, ஒரு நிமிடம் அமைதியாக இருந்த மகேந்திரன், பின்பு ஒரு விளக்கம் அளித்தார். நம்ம கையை யாராவது கிள்ளினால் உடனே அம்மா என்று கத்துவதை போல் இந்த கேள்விக்கு பதில் உடனடியாக சொல்லமுடியவில்லை என்றால் என்ன அர்த்தம், யாருமே தன் மனதை கவரவில்லை என்றார். இதில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை, தமிழில் வீரியமான படைப்பாளிகளுக்கு என்றுமே பஞ்சம் இல்லை. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், நாகார்ஜுனன், manushyaputthiran என பலரும் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து அழித்துக்கொண்டிருக்கிறார்கள்p, இவர்கள் நிராகரிக்கத்தக்கவர்கள் அல்லர்.

மகேந்திரன் சிறந்த படங்களாக, ரோமன் ஹொலிடே, சத்யஜித் ராயின் படங்கள், அகிரா குசரோவா போன்றோரின் படங்களை குறிப்பிட்டார். கேரளாவில் படம் சரியில்லை என்றால், படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள், "சேட்டா, படம் நல்லாயில்லே போய்க்கோ" என்பார்கள் என்றும் தமிழ்நாட்டில், ஒரு மோசமான படைத்துக்கும் நன்றாக இல்லையென்ற விமரிசனம் ஒரு நல்ல விளம்பரமாக அமையும் என்று நினைத்தபோது வருத்தமாக இருந்தது.

மகேந்திரன் உரையாடும்போது அவரது ஆளுமை முன்னே விரிந்தது. கனிவான அவரது பேச்சு, மோசமான படங்களைப்பற்றி அவர் பேசும்போது அவர் கண்களில் காட்டிய உக்கிரம், தற்கால சூழ்நிலையில் தனக்கு ஏற்ற தயாரிப்பாளர் இல்லையே என்ற வருத்தம், பெண்களைப்பற்றிய அவரது தொடர்ந்த அக்கறை என அவரது பல சித்திரங்கள் சிறப்பாக வெளிப்பட்டன. தற்ப்போது அதிக அளவில் உலக சினிமா பார்க்கும் மகேந்திரன், தன்னால் இப்பொழுது தன் முந்தைய படங்களை தாண்டி சாதனை படைக்க முடியும் என்று தீவிரமாக நம்புகிறார். ஷங்கர், சுசிகணேசன் போன்ற ஆசாமிகள் மிக மோசமாக படம் எடுப்பதற்கு கோடிக்கணக்கில் வீனடித்துக்கொண்டிருக்கும் வேளையில், பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற படைப்பாளிகளுக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைப்பதே கடினம் என்ற நிலையில் தமிழ் சினிமா இருப்பது அவமானம் என்பதன்றி வேறில்லை.

அருமையான ஒரு மாலைவேளயை அளித்த எழுத்தாளர்களான ஞாநி மற்றும் பாஸ்கர் சக்தி ஆகியோர்களுக்கும், ஒவ்வொருமுறை மகேந்திரனின் படங்களை பார்த்தபின்பும் நினைவில் மட்டுமே உரையாடமுடிந்த என் போன்ற ரசிகர்களுக்கு நேரிலேயே வந்து சினிமா பற்றிய தனது சித்திரத்தை அளித்த இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

2 comments:

  1. இந்த முறை கேணிக்கு வர முடியவில்லை. உங்களுடைய பதிவின் மூலம் தெரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. நன்றி, தொடருங்கள்...

    ReplyDelete
  2. Thank you for your command Krishna...

    We can meet on the Next Kaeni

    ReplyDelete