Friday, September 25, 2009

Honey I Blew Up the Kid

சிறு குழந்தைகள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பவர்கள், அவர்களது உலகம் கேள்விகளால் ஆனது. சிறு பிராயத்தில் தோன்றும் கேள்விகள் முடிவற்றவை, அவை தம்மை நோக்கி கவர்ந்திளுக்கக்கூடியவை. மாலையில் கவியும் இருளும், காலையில் தோன்றும் பனியும், நடு இரவின் விசித்திரமான கனவும் என குழந்தைப்பருவத்தில் புதிதாக காணும் காட்சிகள் யாவும் குழந்தைகளை அலைக்கழிக்கின்றன. பெரும்பாலும் பிறந்த குழந்தைகள் இரவில் தூங்குவதில்லை. நிலவொளியின் சாட்சியாய் அதுவரை தன்னை காத்துவந்த தேவதைகளுக்கு பிரியாவிடை கொடுக்கும் சோகத்தை தாங்கமுடியாமல்தான் இரவில் குழந்தைகள் அழுகின்றனரோ-தெரியவில்லை-ஆனால் தேவதைகளின் உறவை துண்டித்து பூமிக்கு வரும் குழந்தைக்கு பூமியில் நமது பங்களிப்பு என்ன?. பட்டு போன்ற மிருதுவான குழந்தைக்கு உலகத்தோடு தன்னை நெருக்கிக்கொள்ளும் வொவ்வொரு தருணமும், அதன் குணாதிசயங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. அந்த குழந்தைக்கு நாம் எந்தமாதிரியான உலகத்தை கான்பிக்கப்போகிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.


என் நெருங்கிய நண்பனான குகனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று அவன் போனில் சொன்னான். முதல் குழந்தை என்பதால் அவனிடையே உண்டான கலவரத்துக்கு என் அருகாமை அவனுக்கு தேவையாக இருந்த நேரத்தில், நான் ஊருக்கு சென்றுவிட்டபடியினால், அவனுடன் இருக்க முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சியால், அவனது குழந்தையை முதன் முதலில் தூக்கி என்னிடம் அவன் தந்தபோது, இலகுவான அந்த குழந்தை பெரும் பாரமாக என் கைகளில் இருந்தது. நான் அவளுக்கு முதலில் சொன்னது இந்த பூமிக்கான வரவேற்ப்பு இல்லை, என் மனதாலான மன்னிப்புதான். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்ததுதான். அவர்களுக்கு பூமியில் நமது ஆரம்பக்கட்ட வழிகாட்டல்கள் என்ன என்பது, பெரும் அக்கறையோடு கட்டமைக்கப்படவேண்டியதாகும். அவளுக்கான கல்வி, விளையாட்டு, ரசனை, சமுகம், அறிவியல், புத்தகம் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யப்படவேண்டியவை.


ஒரு குழந்தையின் ஆரம்பக்கட்ட குணாதிசயங்களை தீர்மானிப்பதில், தொலைகாட்சி, பக்கத்து வீட்டு குழந்தைகள், நம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், தாய் தந்தையரின் நடவடிக்கைகள் என பல காரணிகள் உள்ளன. இன்று நாம் காணும் பல குழந்தைகள் தங்கள் சிறு பிராயத்தை தொலைகாட்சி முன்பே கழிக்கின்றனர், அதில் அவர்களுக்கு வக்கிர உணர்ச்சிகளும், ஆபாச நடனங்களும், தமிழின் ஆக மோசமான படங்களும் என பெரும்பாலும் ஒரு சில விதிவிலக்குகளை தவிர்த்து குப்பைகளே காணக்கிடைக்கின்றன. அவர்களுக்கு தாம் படிக்கவும் பார்க்கவும் தரப்படவேண்டியவை எவை என்பதில் நாம் ஆழ்ந்த கவனம் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. தமிழில் குழந்தைகளுக்கான சினிமா எவை என பார்க்கும்போது அஞ்சலி, பசங்க என ஒன்றிரண்டைத்தவிர நமக்கு காணக்கிடைப்பவை அனைத்தும் படு மோசமனவையே. ஒரு குழந்தையை சினிமாவில் நடிக்கவைக்கும்போது, அதன் குழந்தைத்தனத்தை ஒரு துளிகூட திரையில் கொண்டுவராமல், அவர்களை பக்கம் பக்கமாக மேதாவித்தனமான வசனங்களை பேசி நடிக்கவைக்கும் இயக்குனர்களை எத்தனைமுறை வேண்டுமானாலும் உயிர்த்தேழவைத்து உயிர்த்தேழவைத்து சுட்டு கொன்றுவிடலாம். இங்கே பெரியவர்களுக்குப் என்று எடுக்கப்படும் படங்களும் பெரியவர்களுக்கான படங்கள் அல்ல, அவை ஒரு விதமான childish படங்கலேயாகும். இந்தவிஷயத்தில் வெளிநாட்டு திரைப்படங்கள் பல உன்னதமானவை.


இந்தவாரம் தொலைக்காட்சியில், Honey I Blew Up the Kid என்ற Randal Kleiser-இன படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சனிக்கிழமையில் விஞ்ஞானியான Szalinski தன் பிள்ளைகள் Nick மற்றும் Adam இருவரையும் தனது ஆய்வுக்கூடத்துக்கு அழைத்துசெல்கிறார். Big Bunny என்ற பொம்மையை வைத்து அதன் மீது மின்சார ஊதா கதிர்களை பாய்ச்சி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். அப்போது Adam, Szalinski மற்றும் Nick இருவருக்கும் தெரியாமல் Big Bunny-யை எடுக்கசெல்லும் போது அவன் மீது அந்த கதிர்கள் தாக்கிவிடுகின்றன, அவன் சில அடிகள் தூக்கி எரியப்படுகிறான். வீட்டுக்கு திரும்பியவுடன், Szalinski, Adam-மை தூக்கி அவனுக்கு உணவளிப்பதற்காக உயரமான சேரில் வைத்துவிட்டு Nick-இன அறைக்கு செல்கிறார், அங்கே Nick இன்று என்ன படம் பார்க்க செல்லலாம் என்று தனது கம்ப்யூட்டர்-ரில் தேடிக்கொண்டிருக்கிறான். மின்கதிர்கள் தன்மீது படும்போதெல்லாம் வளரும் ஆற்றல் பெற்றதின் காரணமாக, அந்த அறையில் உள்ள சில கதிர்களின் தாக்கத்திர்கேர்ப்ப Adam கொஞ்சம் அதிகமாக வளர்ச்சியும் எடையும் பெற்றுவிடுகிறான். சிறிது நேரத்தில் அவனது எடையை அதிகமாக உணரும் Szalinski, தன் மகளுக்கு துணையாக சென்றுள்ள தன் மனைவி வரும்முன், அவனை சரிசெய்துவிடவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அதற்குள் அவரது மனைவி வந்துவிடுகிறாள். அவர்கள் அனைவரும் நிலைமையை புரிந்து கொள்வதற்குள், Adam ஒரு பெரிய ஆளைவிட பருமனும் உயரமும் கொண்டவனாக மாறிவிடுகிறான். அதன் பின்பு அவன் செய்யும் அட்டகாசங்கள் தான் இந்த படத்தின் கதை. இந்த படம் Children of Heaven போன்ற கலையுடன் கூடிய கவித்துவமான இல்லை, ஆனால் இது குழந்தைகளை குதூகலப்படுத்தக்கூடியது. கதைசொல்லல் முறையில் நேர்மையானது. Los Vegas நகருக்குள் 112 அடி குழந்தையாக, தனது அண்ணனையும் அவனை கவனித்துக்கொள்ள வந்த பெண்ணையும் தன் சட்டைக்குள் தூக்கிபோட்டுக்கொண்டு செய்யும் சேட்டைகளும், குழந்தைத்தனம் மாறாமல் அவன் செய்யும் குறும்புகளும் மிகவும் ரசனையாக எடுக்கப்பட்டுள்ளது.


அவன் அத்தனை அட்டகாசங்கள் செய்தாலும், அவை அனைத்தும் ஒரு சுட்டிகுழந்தையின் சாயலிலேயே படம் பிடித்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். Adam-மை மயக்கமடையவைப்பதர்க்காக துப்பாக்கியின் மூலம் மயக்கமருந்துடன் சுடும்போது, அவன் வலி தாங்கமுடியாமல் பெரிதாக அழுகிறான். அதைக்காணும் Log Vegas நகர மக்கள் ஒவ்வொருவரின் கண்களும் கலங்கிவிடுகின்றன. ஒரு பெரிய டேங்கர் லாரிக்குள் அவனை மட்டும் அடைத்து வைத்து கொண்டுசெல்லும்போகும் காட்சியில், அவனை க்காட்டாமல் அவன் அழுகையை மட்டும் பின்னணி இசையில் ஒலிக்கச்செய்து அவனது பெரிய உருவத்தை பார்வையாளர்களை உணரசெய்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். 112 அடி உயரமான Adam அவனது காலடியில் ஓடும் கார்களை ஏதோ விளையாட்டு என்று நினைத்து அவற்றை துரத்தும்போது, அவன் பாக்கெட்டில் இருக்கும் Nick-யும், அவனை கவனித்துக்கொள்ள வந்த பென்னனான Mandy-யும் எங்கே கீழே விழுந்துவிடுவோமோ என்று பதறும் காட்சிகள் பிரம்மிப்பூட்டுபவை.


சிறுவர்களுக்கான சிறந்த Science Fiction படமான இது பெரியவர்களையும் கவரக்கூடியது. ஏராளமான விருதுகளை அள்ளிக்குவித்த இந்த திரைப்படம் 1992-இல் வெளியானது. இது 1989-இல் வெளியான Honey, I Shrunk the Kids என்ற படத்தின் தொடர்ச்சியாகும். இதன் இயக்குனர் Randal Kleiser ஆவார்.


இந்தப்படத்தை பார்க்கும் போது, Visual Effects-இல அவர்கள் 1990 களிலேயே சாதனை படைத்திருப்பதை உணரமுடிகிறது. நம்மிடையே இதுபோல் பிரும்மாண்டமான வணிகம் இல்லைதான், ஆனால் குழந்தைகள் மீதான முழு அக்கறையோடு குறைந்த பட்ஜெட்டிலேயே படங்கள் எடுக்க முடியும். வசூலை மட்டுமே இலக்காக கொள்ளாமல், சினிமா மீது தீராத அக்கறையுடன் உழைக்கும் படைப்பாளிகள் வரவேண்டும்.


குழந்தை வளர்ப்பில் பெற்றோர் ஆற்றும் பங்கில் நல்ல புத்தகங்களையும், தரமான சினிமாவையும் அறிமுகப்படுத்துவது இன்றியமையாதவை. தேர்ந்த மொழியில் சின்னஞ்சிறு வாக்கியங்களில் எழுதப்பட்ட ஜெயமோகனின் பனி மனிதன் என்ற குழந்தைகளுக்கான நாவல் அமோகமான விற்பனையை கொடுக்கவில்லை என்று அவர் தன்னுடைய Website-ல் எழுதியிருந்ததை படித்தபோது வருத்தமாக இருந்தது. Horry Potter-க்கு கொஞ்சமும் சளைக்காத பல படைப்புகள் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. அம்புலிமாமா கதைகளில் உள்ள மாயாஜாலமும், பீர்பால் கதைகளில் உள்ள புத்திசாலித்தனமும், தெனாலிராமன் கதைகளில் உள்ள நகைச்சுவையும் எந்த ஆங்கில குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு சளைத்தவை அல்ல. அவற்றை படமாக எடுத்தால் தரமான ஆயிரம் படங்களேனும் நாம் குழந்தைகளுக்காக உருவாக்க முடியும். நம்முடைய புராணக்கதைகளும், சங்க இலக்கியங்களும், புறநானுற்று பாடல்களும் என தமிழின் தொன்மையான இலக்கியங்கள் அனைத்தும் சினிமாவுக்கு மீண்டும் மீண்டும் மீள்வடிவம் செய்யப்படவேண்டிய கட்டாயங்கள் நம்மிடையே உள்ளன. திருக்குறளை வைத்துக்கொண்டே கேனத்தனமாக காமெடி என்ற பெயரில் அசிங்கப்படுத்தும் நடிகர்களையும் இயக்குனர்களையும் வைத்துள்ள நாம் கடக்கவேண்டிய தூரம் சினிமாவில் மட்டுமல்ல சகல துறைகளிலும் மிகவும் நீளம். மேற்க்கத்திய நாடுகளின் பல கலாச்சாரங்களை கேள்வியே கேட்காமல் அவை எவ்வளவு மோசமானவையாக இருந்தாலும் எடுத்துக்கொண்டு, ஒரு ஜெராக்ஸ் காபி போல் வாழும் நாம் , இலக்கியம், ரசனை, ஆய்வு, தனிமனித சுதந்திரம், சினிமா போன்ற நல்ல விஷயங்களில் அவர்களை பின்பற்றுவது எப்போது?



1 comment: