Saturday, September 19, 2009

சென்னையில் ஒரு மழைக்காலம்

வெயிலை உண்டு செரித்து வாழ்பவர்களின் பூமியில் பிறந்த என் போன்றோருக்கு வெயில் எதிரியல்ல. எங்கள் ஊரில் மிகவும் குறைவாகவே உள்ள வயல்வேளிகளைத்தாண்டி அடுத்த கிராமத்திற்கான பயணத்தில்
பெரும்பாலும் கடக்கவேண்டியவை பொட்டல் காடுகள்தான். செங்கல் சூளைகளும், தனியான மாடன் சிலைகளும், வடலிகளும், உயர்ந்த பனை மரங்களும் என ஒரு ஊரைத்தாண்டி இன்னொரு ஊருக்கு
போகும்போது பயனவேளிகளில் நாம் காண்பவை அனைத்தும் வெயிலைக்குடித்து தங்களை முருக்கேற்றியவைதாம். என் விடுமுறை நாட்களை முழுதும் போட்டல்காடுகளை சுற்றி அலைவதிலயே
பெரும்பாலும் கழித்திருக்கிறேன். எங்கள் ஊரைக்கடந்து செல்லும் மேகங்களில் ஒரு வனப்பு இருந்ததில்லை. மழையின் அறிகுறிகொண்ட கருப்பு மேகங்கள் எங்கள் ஊரில் மலையாய் பொழியாமல் கடந்து செல்கையில் மனதில் தோன்றும் ஏமாற்றத்தை பலமுறை அனுபவித்தவர்கள் எங்கள் ஊர் விவசாயிகள். வெயிலை பருந்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட எஸ். ராமகிருஷ்ணனின் பலவரிகள் என்னை அலைக்கழித்துக்கொண்டே இருக்கின்றன. வேப்பமரங்களை அதிக அளவில் கொண்டது எங்கள் ஊர். சிறு பிராயத்தில் வேப்பமுத்து பொறுக்க செல்வதில் அலாதி இன்பம் இருந்தது. வேப்பமுத்துக்களை போருக்கசெல்வதர்க்காக நாங்கள் தயாராகும் முறை ஒரு சாகசப்பயணம் போன்றது.



ஒருமுறை எங்கள் பள்ளியிலிருந்து ஒருநாள் சுற்றுலாவாக இரண்டு ஊர்களுக்கு கூட்டிச்சென்றார்கள். சுற்றுலா என்றதும் ஆம்னி பஸ்ஸோ அல்லது வேனோ உங்கள் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், எங்கள் ஊரிலிருந்து இந்த ஊர்களுக்கிடையேயான மொத்த தூரமே 6 k.m. தான். அப்போதைய அரசாங்க திட்டமான அனைத்து பள்ளிமாணவர்களுக்கும் இலவச செருப்பு நடைமுறையில் இருந்தாலும், அவ்வாறு கிடைத்த செருப்புகள் என்றுமே ஒரு
வாரத்திற்குமேல் தாக்குப்பிடித்தது இல்லை என்பதால், எம் பள்ளிமாணவர்கள் யாருமே செருப்பு அணிந்ததில்லை. ஒரு வரிசைக்கு இரண்டுபேர் என மொத்தமுள்ள நூறு மாணவர்களையும் இரண்டு இரண்டுபேராக கைகோர்த்தபடியே அந்த இரண்டு ஊர்களையும் வெறுங்காலோடு நடக்கவைத்த
சிவனுபாண்டி சாரை இன்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும். இப்போது எங்கள் ஊரின் ஒரே விளையாட்டான கிரிக்கெட்டை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை, நாங்கள் விளையாடும் விளையாட்டுகள் தொடர்ந்து மாறியபடியே இருக்கும். வேப்பமுத்து போருக்கசெல்வது கொடைகாலங்களில்தான் . கையில் பெரிய பையோடு கிளம்பும் எங்கள் சாகச பயணத்தில் பொதுவான திட்டம் எதுவும் இருக்காது. கல்குவாரியும், புழுதியும், நாவல் மரங்களும், நீர்மண்டிய கிணறுகளும், ஓணான்களும், கீரிகளும்
எங்களுடன் தீரா உறவு கொண்டிருந்தன. தண்ணியே கிடைக்காமல் சகட்டுமேனிக்கு வெயிலில் சுற்றிய கால்கள் பலமுறை தடம்பிரண்டு விழுந்திருக்கிறோம். நெடுந்தூர பயண களைப்பில் எங்கோ கிடைக்கும் கொஞ்ச பருகிய எங்கள் நா தாகம் தணிந்தாலும், வெறும் வயிற்றில் குடிப்பட்ட நீர் எங்களை மயக்கமுரசெய்திருக்கிறது. நவாப்பழம் பறிக்க மரத்தின் உச்சிக்கே செல்லவேண்டும் என்பது என் சிறுவயது கனவாக இருந்தது. கனிந்து மணலில் வீழ்ந்துகிடந்த நாவல் பழத்துக்கு இணையான ருசியை நான் எந்த பழத்தியிலும் உணர்ந்ததில்லை. எங்கள் ஊர் வெயிலின் மீது எனக்கு தீராத காதல் இருந்தது. காற்றுக்காலம் என்னை ஒருபோதும் கவர்ந்தது இல்லை.


எங்கள் ஊர் மக்கள் வெயிலை உண்டு வளர்ந்தவர்கள். முறுக்கேறிய கைகளும், சிவப்பேறிய கண்களும், கறுத்த தோலும், பரட்டை தலையும், வேற்று உடம்பும், ஒடுங்கிய வயிறும் கொண்டவர்கள். தங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார்கள். என் அப்பா தலைமுறைகளில்
படித்தவர்கள் யாருமே இல்லை. ஐந்தாம் வகுப்பை முடித்த எங்களை, மேல்நிலைப்பள்ளியில் சேர்ப்பதர்க்காக எங்கள் தகப்பன்மார்கள் பருவமழை பெய்து செழித்திருந்த வயல்வெளிகளை கடந்து பொட்டல் காடுகளின் வழியே கூட்டிச்சென்ற சித்திரம் மனதில் தோன்றி மறைகிறது. அனைவரின் மனதிலுள்ளும் குடிகொண்டிருந்த மகன்களின் படிப்புமீதான ஏக்கத்தினை சூரியன் ஒரு மௌன சாட்சியாக தகதகப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது.


கல்லூரி படிப்பை முடித்து சென்னை வந்துவிட்ட இந்த ஐந்து ஆண்டுகளில், சென்னையின் வெயிலோ அல்லது மழையோ என்னை என்றுமே கவர்ந்ததில்லை. எங்கள் ஊர் மழை வந்து வேரித்தபின் பெரும் அழகு,
இயற்கையிலே அழகான சீமாட்டி தலைக்கு குளித்தபின் தோன்றும் பேரழகை ஒத்தது. ஆனால் சென்னையில் மழை என்றால் தேங்கிநிற்கும் சாக்கடைகளும், வெயிலென்றால் வெயிலோடுசேர்ந்த கனரக வாகனங்களில் புகையும் தொடர்ந்து என்னை கலவரப்படுத்திக்கொண்டே இருக்கும். இங்கு வசந்தகாலம்தான் எனக்கு உகந்ததைப்படுகிறது.


அனால் சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் இரவில் பெய்த மழை வித்தியாசமானது. எங்கள் அலுவலகம் அமைந்திருக்கும் கிண்டியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த வேளையில், அறை aமைந்திருக்கும் சூளைமேடு பகுதியில் ஒரு சொட்டுகூட மழை இல்லை. மழையில் நனைந்தபடி
இதுவரை பைக் ஒட்டிய அனுபவம் இல்லாமையால் அன்றைய மழையை ரசித்தபடியே நனைந்துகொண்டே பைக்கில் வந்த எனக்கு உதயம் தியேட்டர் பகுதி காய்ந்து கிடந்ததை பார்த்தபோது ஆச்சர்யமாய் இருந்தது. முழுதும் நனைந்து உடையெல்லாம் ஈரமாக உதயம் சிக்னலில் நின்றபோது சிக்னலை
கடந்த பாதசாரிகள் என்னை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே சென்றார்கள். என்னைப்போலவே நனைய ஆசைப்பட்டது மழையில் நனைந்துகொண்டே வந்த இன்னொருவர் என்னை பார்த்தும் இலேசாக சிரித்துக்கொண்டார். வெக்கை ஊறிய அப்பகுதியில் இருந்து பின்னோக்கி சென்றாள் மீண்டும் மழையில் நனையலாம் என்று நினைத்தபோது மீண்டும் மழையில் நனைய ஆசையாயிருந்தது .


அன்றும் நாங்கள் என்றாவது மழை வரும் நனையலாம் என்று காத்துக்கொண்டிருந்த நாட்களில் அதே வேளையில், ஏதாவது ஒரு பக்கத்து ஊரில் மழை பெயதுகொண்டிருந்திருக்கும்தானே. அன்றே தெரிந்திருந்தால் அது எவ்வளவு தொலைவான ஊரென்றாலும் நடந்தே சென்று நனைந்திருக்க மாட்டோமா?. ஒவ்வொரு கேள்விகளும் சிறு வயதில் எங்களை அலைக்கழித்தன, ஆனால் இப்போது எந்த ஊரில் மழை பெய்துகொண்டிருக்கும் என்ற கேள்வியை அந்த வெக்கை நாட்களிலும் யாருமே என்னிடம் கேட்டதில்லை, நானும் நினைத்ததில்லை.

No comments:

Post a Comment